டாக்டர் கு. கணேசன்
சோர்வு என்பது தினமும் அனுபவிக்கும் ஒரு கொடுமையாக மாறிவருகிறது. ஏன், எதற்கு, எப்படி என்று விளக்குகிறார் மருத்துவர்.
நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறதா? உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறதா? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். உலகில் ஐந்தில் ஒருவர் காரணம் தெரியாமல் சோர்வாக இருக்கிறார் என்கிறது ஒரு சர்வதேச மருத்துவ இதழ். இந்த ஐந்தில் ஒருவர் நீங்களும்தான்.

கடுமையான உழைப்புக்குப் பிறகு உடல் சோர்வு அடைவது இயற்கை. இரவில் உறங்கிவிட்டால், காலையில் உடற்பயிற்சியை மேற்கொண்டால், சோர்வு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.
ஆனால், சிலருக்கு எந்த நேரமும் சோர்வு இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்துபோகலாம். அப்படியானால், இது சாதாரண சோர்வு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அதன் வெளிப்பாடு/அறிகுறிதான் இந்தச் சோர்வு!
காரணம் என்ன?
சோர்வுக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் சாத்தியம் உண்டு. இன்னும் சிலருக்கு முதலில் உடல் சார்ந்த காரணங்களால் சோர்வு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.
உடல் சார்ந்த சோர்வு என்றால் பகலில் தெரிகிற சோர்வைவிட மாலையில் சற்று அதிகமாகவே சோர்வு தெரியும். உளம் சார்ந்த சோர்வு என்பது நாள் முழுவதும் தொல்லை தரும். என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்து சோர்வின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.
முறையற்ற உணவுப்பழக்கம்
உடல் உற்சாகமாக உழைப்பதற்கு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் உள்ள சமச்சீரான உணவு அவசியம். இன்றைய தலைமுறையினர் கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றையே அடிக்கடி சாப்பிடுகின்றனர். இது சோர்வுக்கு வரவேற்பு கொடுக்கும். காரணம், இந்த உணவுகளில் வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் குறைவு. இது ரத்தசோகை, புரதக் குறைவு, வைட்டமின்கள் குறைபாடு போன்ற ஊட்டச்சத்துக் குறைவுகளுக்கு வழிவகுக்கும்.
ரத்தசோகை
இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றி பாதிக்கிற நோய் ரத்தசோகை. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி, முறையற்ற மாதவிலக்கு காரணமாகவும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகையின் ஆரம்ப அறிகுறி உடல் சோர்வு.
அமர்ந்தே பார்க்கும் வேலைகள்
இன்றைய பணிக் கலாச்சாரத்தில் நீண்ட நேரம் அமர்ந்தே பார்க்கும் வேலைகள் அதிகம். அதிலும் ‘வீட்டிலிருந்தே வேலை’ என்று வந்த பிறகு அநேகர் உடலில் வெயில் படுவது குறைந்துவிட்டது. இதனால் வைட்டமின் – டி பற்றாக்குறை ஏற்படுகிறது. இது சோர்வுக்குக் காரணமாகிறது.
தூக்கமின்மை
ஆரோக்கியமான வாழ்வுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் ஆனால், இன்றைய அவசர உலகில், அரக்கப்பறக்க அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வதில் தொடங்கி இரவில் படுக்கையில் சாயும்வரை ஓய்வில்லாத ஓட்டக்களமாக உள்ள வாழ்க்கைமுறையில் தூக்கம் ஐந்து மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு.
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களில் அநேகருக்கு அலுவலக வேலை காரணமாக, இரவில் வரவேண்டிய தூக்கம், நள்ளிரவு தாண்டி இளங்காலைக்குத் தள்ளிப்போகிறது. அத்தோடு செல்போன் பார்ப்பது, தொலைக்காட்சி பார்ப்பது எனப் பல வழிகளில் இப்போது இரவுத் தூக்கம் தொலைகிறது. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் சோர்வு ஏற்படுவது இயல்பு. உடலில் நீரிழப்பு ஏற்பட்டாலும் சோர்வுதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.
உளவியல் காரணங்கள்
இன்றையப் பணிச் சூழலில் எல்லாத் துறைகளிலும் பணி அழுத்தம், வேளைப் பளு அதிகரித்திருக்கிறது. அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. இது தூக்கத்தை விரட்டிவிடுகிறது. இப்படித் தூக்கம் குறையும்போது, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றலும் நமக்குக் குறைந்துவிடுகிறது. இது மன அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகிறது. இப்படி ஒரு சுழற்சிபோல் மன அழுத்தம் நம்மை எப்போதும் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இதனால் சோர்வும் நமக்கு நிரந்தமாகிவிடுகிறது. தவிரவும், தனிமை, தோல்வி, இழப்பு, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் மனச்சோர்வு சோர்வு ஏற்படுகிறது.
பிற காரணங்கள்
குறை தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், நுரையீரல் நோய், புற்றுநோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் சோர்வு தலைதூக்குவதுண்டு. தொற்றுநோய, /புற்றுநோய் சிகிச்சையின்போது சோர்வு தற்காலிகாக ஏற்படுவதுண்டு. முதுமையும், கர்ப்ப காலமும் சோர்வை வரவேற்பவையே. இன்றைய தினம் வெளிவரும் தணிக்கை செய்யப்படாத, கட்டுப்பாடற்ற, எதிர்மறை சமூக ஊடகச் செய்திகளின் தாக்குதல்களும் சோர்வுக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
நாள்பட்ட சோர்வு
ஒருவருக்குக் சோர்வு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாள்பட்ட சோர்வு’ (Chronic fatigue syndrome). என்கிறோம். இவர்களுக்குச் சோர்வும் உறக்கம் சார்ந்த குறைபாடுகளும் அதிக அளவில் இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, கவனக்குறைவு, ஞாபக மறதி போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும்.
தடுப்பது எப்படி?
சோர்வுக்கு நான் அடிமையாக மாட்டேன் என்று நம்புபவர்களுக்கு சோர்வு தொந்தரவாக இருப்பதில்லை. எனவே, நம்பிக்கை வளர்ப்பதே சிம்பிளான மருந்து. ஆனாலும் தொடர்ந்து சோர்வு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் சோர்வு மறுபடியும் தொல்லை தராது. அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும். அமர்ந்த இடத்திலிருந்து மணிக்கொருமுறை எழுந்து 5 நிமிடம் நிற்கலாம்; நடக்கலாம்; கை, கால்களை நீட்டி மடக்கலாம்.
தினமும் எட்டு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் உறங்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவதும் எழுந்திருப்பதும் முக்கியம். தொலைக்காட்சி, செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். வார இறுதி நாட்களைக் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். பகலில் கொஞ்சமாவது வெயிலில் செல்லுங்கள்.
உடல் எடையைப் பேணுங்கள். சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுங்கள். மேற்கத்திய உணவுகளையும் அதிக எண்ணெய் உள்ள, நிறை கொழுப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள். நாளொன்றுக்கு 500 கிராம் காய்கறி/ பழங்களைச் சாப்பிடுங்கள்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டு ஏதாவது ஒன்று அவசியம். மாலையில் யோகாசனம்,இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு தியானம் செய்யலாம். வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேரமேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர்களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், சோர்வு தெரியும். இவர்களும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்தினால்தான் சோர்வு நீங்கும். காபி, தேநீர், கோலா, குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கைக் கடைப்பிடியுங்கள். வார, மாத இதழ், புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, நல்ல உரை கேட்பது, ஓவியம் வரைவது, தோட்ட வேலை பார்ப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது, வீட்டில் மனைவிக்கு உதவுவது, குழந்தைகளுக்குப் படிப்பில் உதவுவது.. உங்கள் மனவழிப் பாதை இப்படி ஏதாவது ஒரு வழியில் சென்றால் நல்லது.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் சோர்வு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். மது அருந்த வேண்டாம். மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக்கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். மனநல ஆலோசனை பெறுங்கள். மனநலம் பேணுங்கள்.
பெட்டிச் செய்தி :
பரிசோதனைகள் என்னென்ன?
சோர்வு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், சோர்வுடன் சேர்ந்து காணப்படும் அறிகுறிகளை வைத்து அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். பொதுவாக, ரத்த அணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு, சிறுநீரகம், கல்லீரல் நோய்களுக்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ சோர்வுக்குக் காரணம் தெரிந்துகொள்ள உதவும். இத்தோடு, உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவியலாளரின் ஆலோசனைகளும் தேவைப்படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குச் சோர்வுக்கான காரணம் தெரிவதில்லை.