என்ன செய்தார் சைதை துரைசாமி – 383
சீன நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சீனப்பெருஞ்சுவரை சுற்றிப் பார்த்தது மட்டுமின்றி சீனாவின் கிராம அமைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அறிந்துகொள்வதற்குப் பயணம் செய்தார். எளிய வாழ்க்கை, ஆரோக்கியமான சூழல், இயற்கை உணவு அதோடு கடுமையான உழைப்பு போன்றவை சீன மக்களின் ரத்தத்திலேயே ஊறியிருப்பதை அறிந்து வியந்தார் மேயர் சைதை துரைசாமி.
இதையடுத்து சீனாவின் சர்வதேச வானொலியின் தமிழ் ஒலிபரப்பு பிரிவு அதிகாரிகளை சந்திக்கும் சூழல் உருவானது. மேயர் சைதை துரைசாமிக்கு என ஒரு சிறப்பு நிகழ்ச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு பேருநகர சென்னையின் பெருமையையும் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்தும் பேசினார்.
இதையடுத்து வரலாற்று சிறப்புமிக்க ஒலிம்பிக் பார்க், இம்ப்ரீயல் பேலஸ், டியானாமென் சதுக்கம் போன்றவற்றையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். இந்த பயணத்தின் மூலம் சென்னையின் மேன்மைக்கும் பயனளிக்கும் வகையில் ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதாவது, சீனாவின் கட்டமைப்பு உலகப்புகழ் பெற்றது. எனவே, அங்கு குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து போன்றவை எல்லாம் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டினார்.
இதையடுத்து பீஜிங் நகரத்தின் சாலை அமைப்பு, நடைபாதை, கைப்பிடிப் சுவர்கள், வாட்டர் டேபிள், மழைநீர் வடிகால்வாய், நடைபாதை தடுப்புகள் போன்றவை எப்படிப்பட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்வையிட்டார். அதோடு நடைபாதை பூந்தொட்டிகள், மரங்களின் வேருக்கு நீர் ஊற்றும் அமைப்பு, , மரங்களை நேராக வளர்க்கும் முறை, சாலையோர பசுமை பகுதிகள், எளிய வடிவமைப்பில் பேருந்து நிழற்குடை, புதுமையான குப்பைத் தொட்டிகள், நீர்த்தெளிப்பானுடன் கூடிய இயந்திரப் பெருக்கிகள், புதுமையான தெருவிளக்குகள், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றை பார்வையிட்டு தேவையான குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.
சென்னை மாநகருக்கும் தன்னுடைய மேயர் பதவிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சீனப்பயணம் முடித்துவிட்டு திருப்தியுடன் நாடு திரும்பினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.