சிம்பிள் ஃபேஷியல் டிப்ஸ்
ஒவ்வொரு பெண்ணும் தன் அழகை தக்க வைத்துக்கொள்வதற்கு பல்வேறு க்ரீம்களை உபயோக்கிறார்கள். செயற்கை க்ரீம்கள் வாங்குவது பலருக்கும் கட்டுப்படியாவதில்லை. அதோடு சிலருக்கு அலர்ஜியும் உண்டாகிறது. எனவே இயற்கை பொருட்கள் மூலம் எப்படியெல்லாம் அழகு பெற முடியும் என்பதைப் பார்க்கலாம்.
அழகு தரும் இயற்கைப் பொருட்களில் முதல் இடம் கற்றாழைக்கே இருக்கிறது. முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. செயற்கை கிரீம்களுக்குப் பதிலாகக் கற்றாழையை உடலில் ஏற்படும் தோல் பிரச்னைகள், சிறு சிராய்ப்புகளுக்கும் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலில் புத்துணர்வு கிடைக்கும். ஏழைப் பெண்களுக்கு சிறப்பான அழகுப் பொருள் குளுகுளு கற்றாழைதான்!
குறைந்த செலவில் அதிக பலன் தருவது பப்பாளி பழம் தரும். பப்பாளிப் பழக் கூழை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தைக் கழுவினால் போதும். பழத்தில் உள்ள பப்பாயின் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளித் தோலின் அடிப்பகுதியைத் தோலில் பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.
வெள்ளரிக் காய்களை நறுக்கிக் கண்களில் வைத்துக் கட்டக் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் மென்பொருள் இளைஞர்கள் ‘கண்களின் மேல் வெள்ளரி’யை வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, வெள்ளரிக்காயை அரைத்துப் பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.
முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் தடுக்கவும் தக்காளி ஃபேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது. விளம்பரங்களில் வரும் ஆறு வாரச் சிவப்பழகைத் தர முடியாவிட்டாலும், வாரத்துக்கு இரண்டு முறை தக்காளியை மசித்துத் தயிரோடு சேர்த்துத் தடவிவந்தால், விரைவில் முகப்பருக்கள் நீங்கி முகத்தில் களிப்பு உண்டாகும்.
நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தை மசித்துப் பாலோடு கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் வசீகரம் பெறும். தினமும் பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்வதும் ஆரோக்கியமும் அழகும் தரும்.