பிறவிமேதையாக ஜீன்கள் உதவுகிறதா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : எந்த போதை மனிதனை அழிக்கும், எது உயிர்ப்பிக்கும்..?

  • ஏ.குமார், அல்லம்பட்டி.

ஞானகுரு ;

இந்த மண் யாருக்கும் ஒரு போதும் சொந்தமாக இருந்ததே இல்லை. ஆனாலும், மண் மீதான போதையினாலே இந்த உலகில் லட்சக்கணக்கான போர்கள் நடைபெற்று கோடிக்கணக்கான மனிதர்கள் மடிந்திருக்கிறார்கள். பிறர் உதவியின்றி ஆரோக்கியமாக வாழும் வகையில் உடம்பைப் பழக்குவதே உயிர் போதை. இந்த போதையே உயிர்ப்பிக்கும் சக்தி.  

கேள்வி : கடன் இல்லாமல் வாழ்க்கை வாழ்வது எப்படி?

  • ஏ.முத்துக்குமார், உசிலம்பட்டி.

ஞானகுரு :

கடன் என்பது கத்தி போன்றது.  சரியாகப் பயன்படுத்துபவருக்கு நல்ல ஆயுதம். அத்தியாவசியச் செலவுக்கும் அனாவசியச் செலவுக்கும் வித்தியாசம் தெரிந்தவர் கடன் வாங்க மாட்டார். அதேநேரம், கடன் தவறு அல்ல. மூலதனமாக மாற்றுவதற்கு கடன் வாங்குவது நல்லது. அதாவது வாடகையை விட ஒரு மடங்கு அதிகம் செலவழித்து வீட்டுக் கடனுக்குத் தவணை கட்டுவது ஒரு கட்டத்தில் சொத்தாக மாறி கை கொடுக்கும்..

கேள்வி : மனிதனின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஜீன்கள் காரணமாக இருக்கிறதா..?

  • எஸ்.கனகலட்சுமி, சூலக்கரை.

ஞானகுரு :

நான்கு தலைமுறையாக ஆரோக்கிய உணவுகள் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்த குழந்தையும், நான்கு தலைமுறையாக வறுமையில் உழலும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கும் நிச்சயம் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கும். இவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். இதற்காக இட ஒதுக்கீடு, உதவித் தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிறவி மேதைகள் மட்டுமின்றி மூளை வளர்ச்சியின்மைக்கும் ஜீன்களே காரணம்.

பரம்பரைத்தன்மையில் நோய், அறிவு, சமயோசிதம் ஆகிய பண்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், இவற்றால் மட்டும் ஞானமும் வெற்றியும் கிடைக்காது. சரியான சந்தர்ப்பம், சரியான நேரம் அமையும் வரையில் காத்திருக்கும் பொறுமை வேண்டும். நிறைய பேர் இந்த இடத்தில் தான் தோல்வி அடைகிறார்கள். 102வது அடியில் தண்ணீர் இருப்பது தெரியாமல் 100 அடிக்கு குழாய் போட்டுவிட்டு ஏமாற்றத்துடன், அடுத்த இடத்தில் துளை போடுகிறார்கள்.

கேள்வி : உண்மையான பாசம், நேசம் இந்த புவியில் இருக்கிறதா..?

  • எம்.சரவணன், என்.ஜி.ஓ. காலனி.

ஞானகுரு :

மனிதர்கள் எல்லோருமே அந்தந்த நேரத்தில் வாழ்பவர்கள். எனவே, இதற்கு முன்பு என்னவெல்லாம் உதவி செய்தார்கள் என்று யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. இன்று அன்பு செலுத்தவில்லை என்றால், சொன்னதை ஏற்கவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்கள். எனவே காதல், நேசம், குடும்பம், உறவு போன்றவை முழு உண்மை இல்லை. அதேநேரம், துன்பத்தில் இருப்பவருக்கு மனிதர்கள் தரும் ஆதரவை விட வேறு எதுவும் பெரியது இல்லை.

Leave a Comment