சென்னையில் பயணிப்பவர்களுக்கு நோய் எச்சரிக்கை

Image

மருத்துவர் தரும் அதிர்ச்சி புள்ளிவிபரம்

சென்னையில் எந்த ஒரு இடத்தில் இருந்து எங்கு போவது என்றாலும் பயண நேரத்தை யாராலும் கணிக்கவே முடிவதில்லை. கடுமையான வாகன நெரிசல், மெட்ரோ இரயில் திட்ட பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், சாலை ஆக்கிரமிப்பு, ஒரு வழிப்பாதை போன்ற காரணங்களால் இலக்கை அடைய அதிக நேரம் தேவைப்படுகிறது.  

அதேநேரம், சென்னையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் சென்னையில் வாகனத்தின் வேகம் 17 கி.மீ./மணி எனவும் சென்னை புறநகர் பகுதிகளில் (Chennai Metropolitan Area-CMA), வாகனங்களின் வேகம் 25.8 கி.மீ./மணி எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஒரு மழை வந்தால் இந்த நேரம் அப்படியே இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்காக மாறிவிடும்.  2018 ஆய்வின் படி தமிழகத்தில் 5.57 மில்லியன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டதில், 22% வாகனங்கள் சென்னையில் தான் பதிவு செய்யப்படுகிறது. அதில் 79% இரு சக்கர வாகனங்கள்,16% கார்கள்/ வேன்கள்.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. குறிப்பாக சென்னையின் வெளிப்பகுதிகளில் (Periphery) பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. 50% மக்களுக்கு மட்டுமே அடிக்கடி பேருந்துகள்  செல்லும் வழித்தடங்களின் வாய்ப்பு அருகாமையில் கிடைத்துள்ளது. முன்பு 10 மில்லியனாக இருந்த சென்னை மக்கள் தொகை தற்போது 14.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் போது தேவைப்படும் ஆற்றலை விட காரில் பயணம் செய்ய 5 மடங்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும் அதிகம் பேர் காரில் பயணிப்பதால்,38 மடங்கு அதிக சாலை இடம் அடைபட்டு இருக்கும் சூழல் உள்ளதால், பேருந்து பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்துவது நல்லது.

மக்கள் தொகை வளர்ச்சிக்கு(சென்னை முக்கிய பகுதிகளில்(Core) மக்கள் தொகை 8% என இருக்க,சென்னை CMA பகுதியை கணக்கில் கொண்டால்,அதன் மக்கள் தொகை 27% என உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சி.)ஏற்ப பேருந்துகள் இல்லாத காரணத்தால்,பேருந்துகளில் கூட்ட நெரிசல்,பேருந்திற்காக அதிக நேரம் காத்திருப்பது போன்றவை மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது.

அதனால்,மக்கள் தங்கள் வசதிக்காகவும், அதிக நேரம் செலவாவதை தவிர்க்கவும், தங்கள் பாதுகாப்பிற்காகவும் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் வாகனப் பெருக்கம் காரணமாகவும்,வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை காரணமாகவும்,காற்று மாசுப்பாடுகளுக்கு மக்கள் அதிகம் உள்ளாகும் சூழல் உள்ளது.

காற்று மாசுப்பாடு காரணமாக சளித்தொல்லை நுரையீரல் பாதிப்புகள் (புற்றுநோய் உட்பட) எக்கச்சக்க நோய்கள் வருகின்றன, குறிப்பாக இருதயப் பிரச்சனைகள், பாரிசவாதம் (Stroke), சர்க்கரை நோய் பாதிப்பு, சிறுநீரகங்கள் பாதிப்பு, மார்பக புற்றுநோய் உட்பட பல புற்றுநோய் பாதிப்புகள், குறைப் பிரசவம் எடை குறைந்து குழந்தைகள் பிறத்தல்,குழந்தை இறந்தே பிறத்தல், கருக்கலைப்பு, பிறவிக் கோளாறுகள் போன்ற பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சென்னை IIT செய்த ஆய்வில் சென்னையின் காற்று மாசுபாட்டிற்கு வாகனப்புகை ஒரு மிக முக்கிய காரணமாக உள்ளது. கட்டுமானப் பணிகள்,ஆலைக் கழிவுகள் பிற முக்கிய காரணங்கள்.  2021 ஆய்வின் படி சென்னையில் PM 2.5 மைக்ரான் நுண்துகள்களின் அளவு, இந்திய பரிந்துரை அளவை விட 1.4 மடங்கு அதிகமாகவும்,உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு அதிகமாகவும் உள்ளதால் மேற்கூறப்பட்ட நோய்கள் சென்னை மக்களை தாக்கும் வாய்ப்பு அதிகம்.

சென்னையில் ஜனவரியில் காற்று மாசுப்பாடு -44.2 மைக்ரோகிராம்/M3, அக்டோபரில்-48.5 மைக்ரோகிராம்/M3- PM-2.5 நுண்துகள்களின் அளவு- உள்ளது. 15 நிமிடங்கள் பேருந்திற்காக காத்திருக்கும் ஒருவர் 7.6 மைக்ரோகிராம்-PM 2.5 நுண்துகள்களை சுவாசிக்கும் கட.ட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

சென்னையில் தனியார் வாகனங்கள் 70%, அரசுப் பேருந்துகள் 20-30% என்ற அளவில் தான் மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். சென்னையில் 9% மக்கள் மட்டும் தான் மெட்ரோ இரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும் சூழல் உள்ளது. இரயில் திட்டங்களுக்கு கூடுதல் செலவு ஆகும் என்பதால் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்த முன்வர வேண்டும்.

3500 பேருந்துகள் வாங்க 3500 கோடி மட்டுமே தேவைப்படும். ஆனால் அந்தப் பணத்தில் 7 கி.மீ. மட்டுமே இரயில் பாதை அமைக்க இயலும். அரசு மேல்அடுக்கு வாகனப்பாதைகள் (Flyovers) அமைக்கவும், வாகன சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் போது, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து,பேருந்துகளில் அதிக மக்கள் பயணிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே சிறப்பாக இருப்பதோடு ,சென்னையின் காற்று மாசை கட்டுப்படுத்தவும் அது உதவும்.

உரிய முக்கியத்துவம் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டவும், மின்பேருந்துகளை அதிகம் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சென்னையில் 13% மக்கள் 4 சக்கர வாகனங்களையும், 47% மக்கள் 2 சக்கர வாகனங்களையும் சொந்தமாக வைத்துள்ளனர். இந்தியாவிலேயே, சென்னையின் தான் வாகன அடர்த்தி அதிகம்- 1 கி.மீ. சாலையில் 2093 வாகனங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் முன்பு 22,517 பேருந்துகள் இருந்த நிலை மாறி தற்போது 20,304 வாகனங்கள் மட்டுமே உள்ளது. மேலும் 2017-18, 2021-22 இடைப்பட்ட காலத்தில்,8 அரசு பேருந்துகள் (சென்னை MTC உட்பட),48,478 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

சுருக்கமாக, அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தி,பேருந்துகளில் அதிகம் பேர் பயணிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதே சென்னை போக்குவரத்திற்கு ஓரளவாவது தீர்வாக இருப்பதுடன், சென்னையின் காற்று மாசுப்பாடும் குறைந்து,மக்கள் நோயின்றி வாழ உறுதுணையாக இருப்பதால், தமிழக அரசு உடனடியாக இதைச் செய்வது சிறப்பாக இருக்கும்.

  • மருத்துவர் வீ.புகழேந்தி.

Leave a Comment