மஞ்சள் தண்ணீரால் கை கழுவலாமா..?

Image

தோல் மருத்துவர் ஜெ.பாஸ்கரன்

சுத்தமாக இருப்பதற்காக அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கையைக் கழுவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது.. இப்படி, அடிக்கடி கை கழுவுவதாலோ அல்லது சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதாலோ கைகளில் அலர்ஜி வரலாம் என்கிறார் பிரபல தோல் மருத்துவர் ஜெ. பாஸ்கரன். அவரிடம் பேசினோம்.


கை கழுவுவதால் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்க என்ன செய்யலாம்? எத்தகைய சோப் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும்?

பொதுவாக, வெளியில் சென்றுவந்த பின்பு கை கால்களைக் கழுவுவது நல்ல விஷயம். அதேநேரத்தில் அடிக்கடி கை கழுவிக்கொண்டு இருக்கக்கூடாது. மேலும், சில வகையான சோப்புகளிலும், சானிடைசர்களிலும் உள்ள கெமிக்கல்களினால் கைகளுக்கு அலர்ஜி வரலாம். அதனால், ஆரம்பத்திலேயே அத்தகைய சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன், அலர்ஜி ஏற்படுத்தாத – இது ஒருவருக்கொருவர் மாறுபடும் – வேறு வகை சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவலாம்.

இப்போது சோப்கள் பலவகைகளில் வர ஆரம்பித்துவிட்டன. குளியல் சோப்புகள், துணி மற்றும் பாத்திரம் கழுவுவதற்கான டிடர்ஜென்ட் சோப்புகள், லிக்யூடு சோப்புகள் என இருக்கின்றன. அவற்றின் மூலம் கைகளைக் கழுவலாம். சோப்பு  கொண்டு கை கழுவ முடியாதவர்கள் சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம். ஆல்கஹால் கலந்த ஒரு திரவமே சானிடைசர். அதனால், கிருமிகள் அழிக்கப்படுவதுடன் கைகளும் சில்லென்று இருக்கும். இந்த திரவத்தையும் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வெளியில் செல்வதற்கு முன்போ அல்லது வெளியில் சென்று வந்த பின்போ கைகளில் தேய்த்துக்கொள்ளலாம்.

மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிகளையும் தொட்டுப் பார்ப்பதால், அவர்கள் சானிடைசரை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், மற்றவர்கள் அதை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மேலும் ஒருவருக்கு கைகளில் காயமோ அல்லது புண்களோ இருந்து, தொடர்ந்து அவர் சானிடைசரை பயன்படுத்திவந்தால், அதன்மூலம் அவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அதிலிருந்து உடனே விடுபட தேங்காய் எண்ணெய் போன்ற எமோலியண்டை பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கான மாய்சரைசிங் கிரீம்களை வாங்கித் தடவ வேண்டும். அதிலும் சரியாகவில்லை என்றால், உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும்.
வெளியில் எங்கு சென்றாலும், கூடியவரை கையினால் எதனையும் தொடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு வந்து கை, கால்களை சோப்பினால் கழுவுவதும், முகத்தைக் கையினால் தொடாமல் இருப்பதும் மிகவும் அவசியம்.
லிக்விட் சோப் கொஞ்சம் ஸ்ட்ராங். ஆனாலும் தொற்று பரவாமல் இருக்க நல்லது. சானிடைசர்களில் முக்கியமாக 60 – 90 சதவிகிதம் வரை இருப்பது ‘எத்தனால்’ அல்லது ‘ஐஸோப்ரொபைல் ஆல்கஹால்’ மற்றும் கிருமி நாசினிகள். இதில் எந்த கெமிக்கலுக்கு அலர்ஜியானாலும், அந்த சானிடைசர் அல்லது சோப்பைத் தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை, கைகால்களுக்குப் பயன்படுத்தலாமா? அதனால், அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறதா?

இன்றும், மஞ்சளும் வேப்பிலையும் கிருமிநாசினியாகப் பயன்படுவது உண்மைதான். அதனால்தான் இன்றும் சிலர் வீட்டில் வேப்பிலையைச் சொருகி வைக்கிறார்கள். மஞ்சள் தண்ணீரைத் தெளிக்கிறார்கள். ஏன், சாணம் கொண்டு வாசலில் நீர் தெளித்திருக்கிறார்கள். இது அனைத்தும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் கடைப்பிடித்துவந்த பழக்கவழக்கங்கள். வேப்பிலையை வீடுகளில் சொருகிவைக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த வீட்டில் தொற்று இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக அப்படிச் செய்தனர். அதனால், அந்த வீட்டுக்கு மற்றவர்கள் செல்வதைத் தவிர்த்ததுடன், தொற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அதேநேரத்தில், மஞ்சளை தோலில் அதிகம் பயன்படுத்தும்போது அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, சில பெண்கள் மஞ்சளை அதிகளவில் பயன்படுத்துவர். இதனால் தோலில் அலர்ஜியாகி முகமே கறுத்து, பார்க்க முடியாத அளவுக்குப் போய்விடலாம். இன்னும் சிலருக்கு மஞ்சளினால் முகத்தில் கரப்பான்கூட வரலாம். ஆக, மஞ்சள் ஒரு கிருமிநாசினியே என்றாலும் அதன்மூலம் அலர்ஜி வர நிறைய வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில், மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரை கை கால்களில் ஊற்றிக்கொண்டு வருவதால் தவறில்லை. அதனால் கிருமிகள் கொல்லப்படக்கூடும்.

வெந்நீரைக் கொண்டு கை,கால்களைக் கழுவலாமா? அதனால், அலர்ஜி ஏற்படுமா?

சில வீடுகளில் கொதிக்கவைத்த நீரில் கைகால்களைக் கழுவுவார்கள். தோல் தாங்கும் சூட்டில் நீர் இருக்கவேண்டும்; அதனால் தப்பில்லை. சுடுநீரால் கிருமிகள் சாகக்கூடும். தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழிக்க சுடு தண்ணீர் குடிப்பது நல்லது. அப்படியிருக்கையில், வெந்நீரைக் கொண்டு கைகால்களைக் கழுவுவதில் தப்பில்லை. ஆனால், அதற்காக அதிகளவில் சூடு உள்ள தண்ணீரை ஊற்றிக்கொள்ளக் கூடாது. இதனால், தோலில் உள்ள புரதங்கள் வெந்துபோய் அலர்ஜி வரலாம். ஆகையால், மிதமான சூடு தண்ணீரில் கைகால்களைக் கழுவுவது நல்லது. எப்போதுமே நன்கு காய்ச்சிய நீர் எல்லாவற்றுக்கும் நல்லது.

Leave a Comment