• Home
  • யாக்கை
  • வீட்டுக்குள் நுழையும் வில்லன்கள்..!

வீட்டுக்குள் நுழையும் வில்லன்கள்..!

Image

வைரஸ்கள் ஜாக்கிரதை

வருடந்தோறும் ஏதாவது ஒரு வைரஸ் கிருமிகளாலோ அல்லது வேறு உடல்சார்ந்த பிரச்னைகளாலோ நாம் பாதிக்கப்படுகிறோம். இந்த நிலையில், கொரோனா வைரஸ் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற வைரஸ் பாதிப்புகளுக்கு, நாம் சுத்தமில்லாமலும் அலட்சியாக இருப்பதும் ஒரு காரணம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். உதாரணத்துக்கு, நாம் பயன்படுத்தும் அறைகளில் குப்பைகளைச் சேகரித்துவைப்போம். அதைச் சோம்பேறி பட்டுக்கொண்டு சுத்தம் செய்யாமல் இருப்போம். இதனாலும் நோய்கள் உருவாகலாம். வீடுகளில் நாம் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை பார்க்கலாம்.


வரவேற்பறை
முதலில் நாம் வரவேற்பறைக்குள்தான் நுழைகிறோம். அப்படியிருக்கும்போது அதை, தினமும் ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம். அறைக்கலன்களைத் தினமும் தூசிதட்டி சுத்தமாக வைத்துக்கொண்டால், டஸ்ட் அலர்ஜி, வறட்டு இருமல் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். அதுபோல், தரையைத் தினமும் கூட்ட வேண்டும். வாக்யூம் க்ளீனராலும் தரையைச் சுத்தம் செய்யலாம். தேவைப்பட்டால் தரையைத் துடைக்கலாம்.


குளியலறை – கழிப்பறை
இதுதான் நோய் பரப்பும் அறை. வெளியில் சென்று வந்தபின்பு கை,கால் கழுவுவதிலும் குளிப்பதிலும் ஈடுபடுகிறோம். அதனால், குளியலறையும், கழிப்பறையும் முகம் சுளிப்பதாக இல்லாமல், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த அறைகளின் தளம், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பாத்ரூம்மின் வாஷ் பேஸினும் கழிப்பறைக் கோப்பையும் எவ்விதக் கறையுமின்றிச் சுத்தமாக இருத்தல் நலம். சிறுநீர் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு, கழிப்பறை கோப்பையைத் தினமும் கழுவுவது மிகவும் அவசியம்.

சோப்பு, பேஸ்ட், ஷாம்பு போன்றவற்றை அதற்கான இடத்தில் வைப்பது நல்லது. வாரம் ஒருமுறை தரையை மட்டுமல்லாமல்; சுவர்களையும் கழுவ வேண்டும். வாஷ் பேஸினை அதற்கான பிரஷ்ஷைக்கொண்டு சுத்தம் செய்வது நல்லது. குளியலறைல் இருக்கும் ஷெல்ஃபையும் மற்ற இடங்களையும் சுத்தம் செய்ய, கிருமிநாசினியைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் துண்டுகளையும் துவைத்து சூரிய ஒளியில் காயப்போட வேண்டும். வாரம் ஒருமுறை கழிப்பறையை நன்கு தேய்த்துக் கழுவுவது அவசியம்.


சமையலறை
பொதுவாக, சமையல் அறைதான், குப்பைகளின் கூடாரமாக விளங்கும். அதனால், அதைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கூடுமானவரை, அந்த அறையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சமையல் முடிந்ததும், சமையல் திண்டு, கேஸ் அடுப்பு, மேசை  உள்ளிட்டவற்றை நன்கு கழுவி சுத்தமாகத் துடைப்பது அவசியம். சமையலறை தரையை ஒருநாளைக்கு மூன்று முறை கூட்டுவது நலம் தரும். குறைந்தது ஒருமுறையாவது, அந்தத் தரையைத் துடைக்கலாம். வாரம் ஒருமுறை, கிருமிநாசினி கொண்டு சமையலறையைத் துடைக்க வேண்டும். குறிப்பாக, பாத்திரம் கழுவும் ஸிங்க்கையும் சமையலறை தரையையும் நன்கு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதுபோல், ஈரம் இல்லாதவாறு பாத்திரங்களையும் துடைத்துவைப்பது நல்லது. ஃபிரிட்ஜை வாரம் ஒருமுறை முழுவதும் காலி செய்து, நன்றாகச் சுத்தம் செய்வது அவசியம்.


பிற அறைகள்
சமையலறை, குளியலறை, வரவேற்பறை போன்றே மற்ற அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். வாக்யூம் க்ளீனராலும் தரையைச் சுத்தம் செய்யலாம். தேவைப்பட்டால் தரையைத் துடைக்கலாம். குறிப்பாக, இந்த நேரத்தில் கிருமி நாசினி கலந்த நீரால் துடைப்பது நல்லது. படுக்கையறையின் படுக்கை விரிப்புகளையும் அறைக்கலன் உறைகளையும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

இதுதவிர  வீட்டின் எல்லாக் கதவு, கதவு நிலைகள், ஜன்னல்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சோஃபா, கட்டில், மெத்தை, திரைச்சீலைகள் போன்றவற்றையும் நன்கு தூசிதட்டி சுத்தம் செய்யலாம். தோட்டம், முற்றம், கார் ஷெட் உள்ளிட்ட இடங்களையும் நன்கு கூட்டி, கழுவி சுத்தம் செய்வது அவசியம். அதுபோல் விளக்கு, மின்விசிறி, கூண்டு விளக்குகள் போன்றவற்றையும் சுத்தம் செய்வது முக்கியம். இதுதவிர நம் வீட்டு சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி, அடிக்கடி நம் வீட்டையும் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருந்தால், எந்தவொரு வைரஸும் நம்மை எட்டிப் பார்க்காது.
சுத்தத்தைப் பேணி சுகாதாரத்துடன் வாழ்வோம்.

Leave a Comment