பாமர மக்களுக்குக் கிடைத்த உதவி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 338

தாலிக்குத் தங்கம் திட்டம் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்த காரணத்தால் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு கிடைத்தது. தங்கத்தைப் பார்க்காத ஏழைப் பெண்கள் தாலியில் தங்கம் அணிய முடிந்தது. இந்த திட்டத்தில் சேர்வதற்கு ஏராளமான ஏழைகள் முன்வந்தார்கள். தகுதியுள்ள அனைவருக்கும் தங்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த திட்டத்தில் இருந்து குளறுபடிகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார் மேயர் சைதை துரைசாமி.

அரசு நடைமுறை எதுவும் தெரியாத பாமர மக்களே இந்த திட்டத்துக்கு அதிகம் விண்ணப்பம் செய்தார்கள். அவர்களுக்கு அரசு நடைமுறையில் எந்த அனுபவமும் கிடையாது என்பதால் விண்ணப்பங்களை மிகச்சரியாக பூர்த்தி செய்ய முடியாமல் அல்லது தவறாக எதையாவது குறிப்பிட்டு அனுப்பினார்கள். இது போன்ற காரணங்களால் ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிப்பதை அறிந்து மேயர் சைதை துரைசாமி வேதனைப்பட்டார்.

தாலிக்குத் தங்கம்  விண்ணப்பம் முழுமையாக இல்லையென்றால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். மீண்டும் அனைத்து தகவல்களுடன் விண்ணப்பம் கொடுப்பதற்குள் திருமணம் முடிந்துவிடும். திருமணத்திற்குப் பிறகு இந்த விண்ணப்பம் கொடுக்க முடியாது என்பதால் ஏராளமான அப்பாவிகள் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலையை மாற்றி, திருமணத்திற்கு முன்பு விண்ணப்பம் கொடுத்திருந்தால் மட்டும் போதும். தேவையான ஒரு சில சான்றுகளை திருமணத்திற்குப் பிறகும் கொடுக்கலாம் என்ற சீர்திருத்தத்தை சைதை கொண்டுவந்தார்.

அதோடு அலுவலர்களிடம், ‘’மக்கள் தரும் விண்ணப்பங்களில் ஏதேனும் குறை இருந்தால், விண்ணப்பதாரரிடம் பேசி அந்த விண்ணப்பத்தின் குறையை சரிப்படுத்த வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும்  நலத்திட்டம் வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, ஏதேனும் காரணம் காட்டி நிராகரிக்கக்கூடாது’ என்று அறிவுறுத்தினார். திருமண நாளுக்கு முந்தைய தினத்தில் விண்ணப்பம் செய்தால்கூட, அதனை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். பாமர மக்களின் அறியாமையைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு மனமார்ந்த உதவி செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அதேநேரம் மக்களிடம், ‘’இந்த திட்டத்துக்காக அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அல்லது விண்ணப்பத்தை தகுந்த காரணம் இன்றி நிராகரித்தால் உடனே புகார் கொடுக்கலாம்’’ என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் உண்மையான பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கத் தொடங்கியது. இத்தனை சீர்திருத்தங்களையும் தனி மனிதராக மேயர்  சைதை துரைசாமி செய்திருக்கிறார் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment