நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்

கவித்துவம்

சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்

வறுமை

மாதக்கடைசியில்

மகள் உறங்கியபின்

வீடடைகையில்

அப்பாவின் முகச்சாயல் எனக்கு.

கேட்டதை மறந்து

காலையில் எழுந்து புன்னகைக்கையில்

அம்மாவின் முகச்சாயல்

அவளுக்கு.

  • கௌ.ஆனந்தபிரபு

மிரட்சி

வீட்டை

ஒதுங்க வைக்கையில்

பரணிலிருந்து எடுக்கப்பட்ட

கரடி பொம்மை

திருதிருவெனப் பார்க்கிறது

வளர்ந்துவிட்ட மகளை…!!!

  • வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

முரண்

வாழ்க்கை என்பது

அதிசயக் கவிதை.

உனக்கோர் அர்த்தம்

எனக்கோர் அர்த்தம்.

  • கவிக்கோ அப்துல் ரகுமான்

Leave a Comment