தோப்புக்கரணம் என்பது அறிவியல்..?

ஆரோக்கிய சீக்ரெட்


சில ஆண்டுகளுக்கு முன்புவரை வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் பள்ளிக்குப் போனால் அதற்குத் தண்டனையாக, ஆசிரியர்கள் தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள். ஆனால் இன்றோ அந்த தண்டனைகூட தவறு என்று தோற்றமளிக்கிறது.

உண்மையில், நம் முன்னோர்கள் வழிபாட்டு முறைகளுடன் சில வாழ்வியல் முறைகளையும் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அது, இன்று அறிவியலோடு சார்ந்துபோகிறது என்பதே நிதர்சனம். இன்னும் சொல்லப்போனால், யோகாசனம் பற்றித் தெரியாமல் பல வகைகளில் அத்தகைய பயிற்சிகளை நாம் செய்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த தோப்புக்கரணம். இது, வெளிநாடுகளில் ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நம் இந்தியாவில் தோப்புக்கரணம் தோன்றியதற்கு செவி வழியாகப் புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. கஜமுகாசுரன் எனும் அசுரன், தான் பெற்ற வரத்தினால் தேவர்களுக்கு தொல்லை கொடுத்துள்ளான். அவனைக் காணும்போதெல்லாம், தேவர்கள் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் அடித்து தொந்தரவு செய்துள்ளான். இதனால் துயருற்ற தேவர்கள், விநாயகப்பெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். இதனையடுத்து, கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்ட விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு அவன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரனை அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது என செவி வழித் தகவல் உரைக்கிறது.

நமது முன்னோர்கள் விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தையும் வைத்திருந்தனர். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. அக்காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள ‘சோலியஸ்’ எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ்,  ‘தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறும்’ என்கிறார். மேலும், பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவன், தோப்புக்கரணப் பயிற்சிக்குப் பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஒரு முழுமையான யோகாசன பயிற்சியாக விளங்கும் தோப்புக்கரணத்தை கீழ்க்காணும் விதத்தில் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.  

தினமும் சூரியன் எழும் நேரத்தில் கிழக்குத் திசையை நோக்கி நின்று செய்ய வேண்டும். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். கால்களின் இடைவெளி தோள்பட்டையின் அகலத்திற்கு இருக்க வேண்டும். முதலில் இடதுகையால் வலது காது மடலையும் பிறகு வலதுகையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.
கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கமும் இருக்க வேண்டும்.  வலதுகை கண்டிப்பாக இடதுகையின் மேல் இருக்க வேண்டும்.

நாக்கை மேலண்ணத்தோடு ஒட்டும்படி வைக்க வேண்டும். கைகளின் கட்டைவிரல் காது மடலின் பின்புறத்தில் இருக்க வேண்டும். மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக கீழே அமர வேண்டும். (நாற்காலியில் அமர்வது போன்று) கீழே சென்றவுடன் சில நொடிகள் மூச்சி இழுத்துப் பிடித்து, பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டுக்கொண்டே மேலே எழ வேண்டும். இதன்மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

தினமும் 5 நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலே போதும், நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை. இப்படிச் செய்வதால், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவு அதிகரிக்கிறது. மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது.தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும்.
தோப்புக்கரணம் போடுங்கள்  நோயை விரட்டுங்கள்.

Leave a Comment