பெண்களுக்கு நல்ல செய்தி
கணவர், குழந்தைகளுக்கு எந்த ஒரு நோயும் தாக்கிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பெண்கள், தங்கள் உடல் மீது போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆரம்பகட்ட அறிகுறிகளை அலட்சியம் செய்கிறார்கள். அதனாலே சில ஆபத்தான நோய்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பெண்களை மிரட்டும் முக்கியமான நோய்களில் ஒன்று, கர்ப்பப்பை வாய் புற்று நோய். இதற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் 99 சதவீதம் தடுக்க முடியும். ஆனால், இந்த விழிப்புணர்வு இல்லாமல் நம் நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிர் இழக்கின்றனர். இதற்கு தடுப்பூசி இருக்கிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை, தெரிந்தவர்களும் இதனை போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில், 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்படுகிறது. இந்த நாடுகளில் நோய்க்கு தீவிரமான அறிகுறிகள் தென்படும் வரை பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை. ஹெச்பிவி தடுப்பூசி 90% மக்களை சென்றடைவதன் மூலம் அடுத்த நூற்றாண்டுக்குள் இந்த நோயை மக்களிடமிருந்து அகற்ற முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது, சுமார் 140 நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன.
இப்போது இந்திய அரசு கர்ப்பப்பை வாய் கேன்சருக்கான தடுப்பூசியை தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்க இருக்கிறது. இப்போது தமிழக அரசு இலவசமாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி வழங்குவதாக அறிவித்துள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி அளிக்க தமிழ்நாடு முடிவெடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் அந்த வீடும், நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்