ஊழியர்களை அச்சுறுத்தும் ஆபத்தான குப்பைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 320

426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் தினமும் சுமார் 5,000 டன் குப்பை கையாளப்படுகிறது. இவை எல்லாமே கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றை மக்கும் குப்பைகளை உரங்களாவும் மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் அனுப்பிவைத்தால், குப்பை வளாகத்துக்குச் செல்லும் குப்பையின் அளவு குறைந்துவிடும் என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

2000ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று சேகரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் இந்தத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதோடு, இந்த விஷயத்தில் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வும் அக்கறையும் இல்லை. அதனால் எல்லா குப்பைகளையும் ஒன்றாகவே கொட்டுகிறார்கள்.

மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தவிர ஆபத்தான குப்பைகள் என்று ஒரு வகை இருக்கின்றன. இவை துப்புரவுப் பணியாளர்களுக்கு அபாயமானவை. அதாவது பிளேடு, உடைந்த பாட்டில்கள், கண்ணாடிகள், ஊசிகள், ஆசிட் போன்ற மருந்து கழிவுகள், கம்பிகள், பிவிசி பைப் போன்ற எல்லாவற்றையும் குப்பையில் போடுகிறார்கள்.

உடைந்த டியூப் லைட்களைக் கூட அப்படியே வீசுகிறார்கள். இதனால் குப்பைகளைப் கையாளும் பணியாளர்கள் கையில் ஊசி குத்துவது, கண்ணாடி பாட்டில்களால் காயப்படுவது போன்றவை அவ்வப்போது நடப்பதை அறிந்து மேயர் சைதை துரைசாமி ரொம்பவே வேதனை அடைந்தார்.. இதனால் பாதிக்கப்படும் ஊழியர்கள் கை, கால்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும், லீவு எடுக்க வேண்டிய அவசியத்துக்கும் ஆளாகிறார்கள். ஊழியர்களுக்குக் கையுறை கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் முழு நேரமும் அவற்றை அணிந்திருக்க இயல்வதில்லை. எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வு குறித்து ஆலோசனை செய்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment