ப்ரீ டயபடிக் கண்காணிப்பு
பெற்றோரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், பிள்ளைகளுக்கும் அந்த நோய் பயம் வந்துவிடுகிறது. ஏனென்றால் நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடுடன் இருந்தாலும் பல்வேறு நோய்ச் சிக்கலுக்கு ஆளாவதைக் கண்டு தங்களுக்கும் அப்படியொரு நிலை வந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். இவர்கள், ப்ரீ டயபடிக் என்ற நிலையிலே சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் பெரிய அபாயமின்றி தப்பிவிடலாம்.
அதென்ன் ப்ரீ டயபடிக்..?
ப்ரீ டயபடிக் எனப்படுவது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என பரிசோதிக்கலாம். வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும்போது, 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்றும், 126க்கும் மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்றும் அர்த்தம். இதுவே 101 முதல் 125 என்ற அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. இதுவே ப்ரீ டயபடிக்.
அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை எவ்வாறு கரைகிறது என்பதைக் கண்டறியும் ஓரல் குளுகோஸ் பரிசோதனையில் 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 200க்கு மேல் இருந்தால், நீரிழிவு நோய் என்று அர்த்தம். ஆனால், 141 முதல் 199 வரை சர்க்கரை அளவு என்றால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. இந்த இரண்டு பரிசோதனைகளிலுமே நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை கண்டறிப்பட்டால், அது விரைவிலேயே நீரிழிவு நோயாக மாறிவிடும்.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் விரைவிலேயே நீரிழிவு நோயாளிகளாக மாறிவிடுவார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 10.1 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆய்வு, 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இதில் தமிழ்நாட்டில் 1கோடி பேர் நீரிழிவு நோயாளிகளாகவும், சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை மேற்கொண்டால் ப்ரீ டயபடிக் என்ற நிலையில் இருந்து டயபடிக் நோயாளியாக மாறுவதற்கு எட்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் மிக விரைவில் டயபடிக் நோயாளியாக மாறிவிடுவார்கள்.
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிறுநீரகம், கண்கள் பாதிப்பு ப்ரீ டயபடிக் நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே, எவ்வளவு விரைவில் நீரிழிவுக்கு முந்தைய நிலை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இன்று முறையான உறக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகியவை காரணமாக இளம் வயதில் பலரும் நீரிழிவு நோயாளிகளாக மாறிவருகிறார்கள். நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நோய் என்ற நிலைக்குச் செல்வதைத் தள்ளிப்போட முடியும்.
மாவுச்சத்தைக் குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும். அதேநேரம், உடல் எடையும் கூடாது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை வெள்ளை சர்க்கரையை விட ஆபத்து குறைவு என்று சொல்லலாமே தவிர, நல்லது அல்ல.
ஒரு சில விசயங்களை கட்டுக்குள் வைத்திருந்தால் சர்க்கரையால் உள் உறுப்புகள் பழுதாகும் வாய்ப்பைத் தடுக்க முடியும். ரத்த நாளங்கள் எனும் ரத்தக்குழாயை தெளிவாக, நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, ‘ABC’ மற்றும் அதற்கான அளவுகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். ‘A’ என்றால் ‘ஏ1சி’ எனப்பொருள். மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரியை குறிப்பதே ‘ஏ1சி’. ‘B’ என்றால் ‘பிளட் பிரஷர்,’ ‘C’ என்றால் கொலஸ்ட்ரால்.
இந்த மூன்றையும், முறையாக பராமரித்தால் மாரடைப்பு, வாதம், பார்வையிழப்பு, சிறுநீரகப்பழுது, கால் இழப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு, வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு, 80 – 130 க்குள் இருக்க வேண்டும். உணவு உட்கொண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு, 180 க்குள் இருக்க வேண்டும். ‘ஏ1சி’ எனும் மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி, 7 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். இதை பராமரித்தால் சர்க்கரையால், ரத்தகுழாய்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
‘B’ எனும் பிளட் பிரஷர், குறைந்தபட்சம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ‘C’ எனும், கொலஸ்ட்ராலை பராமரிக்க வேண்டும்.
எல்.டி.எல்., எனும் கெட்ட கொலஸ்ட்ராலை, 70க்கு கீழ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எச்.டி.எல்., எனும் நல்ல கொலஸ்ட்ரால், ஆண்களுக்கு, 40 க்கு மேல், பெண்களுக்கு, 50 க்கு மேல் இருக்குமாறும் பார்த்துக் கொள்வது நலம். இந்த அளவுகளை முறையாக பாராமரித்து வந்தால், சர்க்கரை இருந்தாலும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.