என்ன செய்தார் சைதை துரைசாமி – 312
சென்னை நகரத்துக்குப் பெரிய தலைவலியாகத் திகழ்ந்த குப்பை மேலாண்மையை ஒரு முறையான, தெளிவான வடிவத்துக்குக் கொண்டுவந்து, நவீனத்துவமாக்கியவர் மேயர் சைதை துரைசாமி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திடக்கழிவு மேலாண்மையில் இருந்த சின்னச்சின்ன குளறுபடிகள், தவறுகளைக் கண்டுபிடித்து, மாற்றுவழியில் செயல்படுத்துவதில் மேயர் சைதை துரைசாமி தொடர்ந்து அக்கறையும் தீவிரமும் காட்டிவந்தார்.
துப்புரவுப் பணியாளர்கள் வேலையின் முக்கியத்துவம் அறிந்தவர். அதனாலே, துப்புரவுப் பணியாளர்கள் மீது மேயர் சைதை துரைசாமி போன்று அன்பும் அக்கறையும் வேறு எந்த ஒரு மேயரும் காட்டியதே இல்லை. துப்புரவுப் பணியாளர்களுடன் நெருங்கிப் பழகும் பரந்த மனப்பான்மையும், குறைகளைக் காது கொடுத்துக் கேட்கும் குணமும் மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது.
துப்புரவுப் பணியாளர்கள் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்றால் ஊர் நாறிப்போகும். அப்படிப்பட்ட முக்கியமான பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் மதிப்பும் கிடைப்பதில்லை. அவர்களுடைய கடுமையான சேவையை யாரும் பாராட்டுவதும், மதிப்பதும் இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் உற்சாகமாகவும், நோயின்றியும் வாழ்ந்தால்தான், மாநகராட்சிப் பணிகள் தொய்வின்றி சிறப்பாக நடைபெறும் என்பதை உணர்ந்தார் சைதை துரைசாமி.
அதனால் துப்புரவுப் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் பணிபுரிவதற்கு ஏற்ப வாய்க்கவசம், கையுறை, குப்பை கொட்டும் வாகனப் பணியாளர்களுக்கு கம்பூட் மற்றும் இரவில் ஒளிரும் மேலாடை போன்ற நலப்பொருட்கள் வழங்கப்பட்டன. மிகவும் சிறப்பாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு பரிசு, பாராட்டுகள் கிடைப்பதற்கும் உறுதி செய்தார். இந்த வசதிகள் செய்யப்பட்ட பிறகு, துப்புரவுப் பணியாளர்கள் உடல்நல விடுப்பு எடுப்பது குறைந்துபோனது. அது மட்டுமின்றி துப்புரவுப் பணிகளும் தடையின்றி செம்மையாக நடைபெற்றன என்றால், அதற்குக் காரணம் மேயர் சைதை துரைசாமியின் மனிதாபிமானம் தான்.
- நாளை பார்க்கலாம்.