என்ன செய்தார் சைதை துரைசாமி – 311
துப்புரவுப் பணியாளர்கள் குறைவான சம்பளத்தில் மிக அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகத் தெரியும். எனவே, அவர்கள் மீது மிகவும் கனிவோடு நடந்துகொள்வார். அதேநேரம், துப்புரவுப் பணியாளர்கள் சரியாகப் பணிக்கு வரவில்லை என்று ஆய்வாளர்கள் அடிக்கடி குற்றம் சொல்லி வேலைகளை தள்ளி வைத்தார்கள்.
அதேநேரம், துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு வராமலே சிலர் பொய்க் கையெழுத்துப் போட்டு சம்பளம் பெற்று வருவது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. அதேபோல் சிலர் குறைந்த நேரம் மட்டுமே பணியாற்றிவிட்டுச் செல்வதும் தெரியவந்தது. இந்த குழப்பங்களைத் தீர்ப்பதற்கு தெளிவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.
துப்புரவுப் பணியாளர்களுக்கும் முழுமையான பதிவேடு வேண்டும் என்று நினைத்தார். நோட்டில் வருகைப் பதிவேடு கடைப்பிடிப்பதாலே இத்தனை குளறுபடி நடக்கிறது. எனவே, இதனை நவீனத்துவமாக்குவதற்குத் திட்டமிட்டார். அதன்படி, துப்புரவுப் பணியாளர்களின் கை ரேகை பதிவு செய்வதற்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. துப்புரவுப் பணியாளர்கள் வருகையை உறுதி செய்யும் வகையில், அனைத்து வார்டு அலுவலகங்களிலும், பகுதி அலுவலகங்களிலும் கைரேகை பதிவு செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.
இந்த இயந்திரங்களை தலைமையகத்தில் இருந்து கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, தினமும் வேலைக்கு எத்தனை பணியாளர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக கணக்கிடவும் கண்காணிக்கவும் முடிந்தது. பணியாளர்களின் வருகை நேரம் மற்றும் பணி முடியும் நேரமும் கணினி மூலம் உறுதி செய்யப்பட்டதால், வருகைப் பதிவேட்டில் இருந்த குழப்பங்கள் முற்றிலும் நீங்கியது. நீண்ட காலமாக சென்னை மாநகராட்சியில் இருந்த பணியாளர்கள் வருகை பிரச்னையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து சாதனை படைத்தவர் மேயர் சைதை துரைசாமி தான்.
- நாளை பார்க்கலாம்.