சினிமா எனும் வாழ்க்கை – தி சஷாங்க் ரிடெம்ப்ஷன்
கடந்த 1994ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம், இன்று வரை IMDb தரவரிசையில் முதல் இடத்தில் கொடி கட்டி பறக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..?
ஆம். இதுதான் உண்மை.
அத்தகைய சாதனையை படைத்திருக்கும் ஒரு திரைப்படமே தி சஷாங்க் ரிடெம்ப்ஷன். மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்ட இந்த படம் வெளியான தருணத்தில், போதிய கவனிப்பு கிடைக்கவில்லை, வெற்றியும் அடையவில்லை. ஆனால், அதன்பிறகு இந்த படத்தின் அடர்த்தியான கருத்து வெளியே தெரியவர, மக்களின் பேராதரவுடன் அன்று முதல் இன்று வரை முதல் இடத்தில் நீடிக்கிறது.
அப்படி என்ன இந்த படத்தின் சிறப்பு..?
வாழ்க்கை எப்போதும் நேர் கோட்டில் செல்வது கிடையாது. இக்கட்டான சூழல் ஏற்படும்போது, இந்த பிரபஞ்சமே நமக்கு எதிராக செயல்படுவது போல் தோன்றும். இதுபோன்ற தருணம் எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்படவே செய்யலாம்.
அதுபோன்ற நேரங்களில் மனிதர்கள் முன் இருக்கும் பதில் இரண்டு.
ஒன்று, வாழ்க்கையின் மிகவும் இக்கட்டான சூழலில் இருந்து எப்படி வெளிவருவது என்று ஆழ்ந்து யோசித்து நிதானமாக வெளியே வருவது.
இரண்டாவது, இந்த இக்கட்டான சூழலை நினைத்து வருந்தி வருந்தி மேலும் வாழ்க்கையை சிக்கலாக மாற்றிக் கொள்வது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளியே வரமுடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மனிதர்களுக்கு வருவதில்லை. எனவே, சிக்கலான சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு தோல்விகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஆனால், ஆழ்மனதில் நம்பிக்கை உள்ளவருக்கு ஒரு நாள் நிச்சயம் வழி தென்படும் என்பதே உண்மை. இன்றைய தினம் மோசமாக இருந்தாலும், நாளைய தினம் மோசமாகத் தெரிந்தாலும், எதிர்கால நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக் கூடாது. ஏனென்றால் இருளை விரட்ட இருளால் முடியாது: ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை சொல்லித்தரும் படமே தி சஷாங்க் ரிடெம்ப்ஷன்.
இந்த படத்தின் கதையை மேலோட்டமாக சுருக்கமாகப் பார்க்கலாம்.
தன்னுடைய மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறுகிறான் நாயகன் டிம் ராபின்ஸ். அந்த குற்றத்தை செய்யவில்லை என்று அவன் சொல்வதை யாரும் நம்பவில்லை. எனவே ஆயுள் தண்டனை கைதியாக சஷாங் சிறைக்குள் நுழைகிறான். இந்த சிறையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் நரகம். குண்டர்களும், ஹோமோக்களும் நிறைந்த இந்த நரகத்தில் இருந்து யாரும் தப்பித்துச் சென்றதாக சரித்திரம் இல்லை. எனவே, முன்பு வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய நாயகன் டிம், அந்த கொடூர சிறை வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்,
அந்த சிறையில் இருக்கும் மோர்கன் ஃப்ரிமேனிடம், ’இங்கிருந்து தப்பிக்கமுடியுமா?’ என்று கேட்க, ‘மரணத்துக்குப் பிறகுதான் சாத்தியம்’ என்ற பதிலே கிடைக்கிறது.
மிகுந்த சிரமத்துக்கு இடையில் ஒரு சின்னஞ்சிறிய சுத்தியலை வெளியிலிருந்து வரவழைக்கிறான். பைபிள் படித்த நேரம் போக மீதமிருக்கும் நேரங்களில் எல்லாம் செஸ் காயின்களை கல்லில் அற்புதமாக செதுக்குவதில் பொழுதை போக்குகிறான்.
கண்டிப்புக்கு பேர் போன சிறை வார்டன் பாப் குண்டன், பைபிளில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கு மிகத்தெளிவாக பதில் சொல்கிறான் டிம். அதனால் அவனை தன்னுடைய அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு மாற்றிக்கொள்கிறார். சிறைச்சாலைக்கு நூலகம் அமைக்கும் பணிக்காக பல இடங்களில் இருந்தும் அன்பளிப்பாக புத்தகங்கள் வாங்குகிறான் டிம். வார்டனுக்கு அடிமை போல் உழைத்து அவரது நம்பிக்கையைப் பெறுகிறான்.
பொதுவேலைக்காக கைதிகளைப் பயன்படுத்தி, அதற்காக லஞ்சப் பணம் பெற்றுக்கொள்கிறார் வார்டன். அந்தப் பணத்தை நிர்வகிக்க பினாமி வங்கிக் கணக்கைத் தொடங்கித் தருகிறான் டிம். அத்துடன் வரி ஏய்ப்பு செய்து கிடைக்கும் பணத்தையும் பினாமி வங்கிக் கணக்கில் முதலீடு செய்கிறான்.
இந்த நேரத்தில் அவனது லைப்ரரிக்கு அற்புதமான இசைத் தொகுப்பு கிடைக்கிறது. இதனை தான் மட்டும் ரசித்தால் போதாது என்று சிறை முழுவதும் ஒலிக்கச் செய்கிறான் டிம். பாதியில் யாரும் தடுத்துவிடக் கூடாது என்று அறையைத் தாழிட்டுக் கொள்கிறான். இசை முடிந்ததும் இதற்காக டிம்முக்கு தனிமைச் சிறையும் கொடுமையான தண்டனையும் கிடைக்கிறது. ஆனாலும் அதனை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறான்.
காலங்கள் நகர்கின்றன. திருட்டுக் குற்றவாளி வில்லியம்ஸ் சிறைக்குள் நுழைகிறான். டிம் மனைவியை கொலை செய்தது தன்னுடைய கூட்டாளி என்று அவன் உண்மையைச் சொல்கிறான். இதனை கேட்கும் மோர்கன், வார்டனை அணுகி டிம்மின் வழக்கை மீண்டும் எடுக்கச் சொல்கிறார். ஆனால், டிம் வெளியே போனால் தன்னுடைய தில்லுமுல்லு கணக்கு, ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால், வார்டன் அதனை கண்டுகொள்ளாமல் விடுகிறார்.
எப்போதும் அமைதியாக இருக்கும் டிம் ஒரு நாள் மோர்கனிடம் தன்னுடைய ஆசையை சொல்கிறான். நான் இங்கே இருந்து தப்பித்துப் போய் ஒரு சொகுசு கப்பல் நடத்த விரும்புகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்து என்னுடன் சேர்ந்துகொள்ளலாம்…’ என்று சொல்வதுடன் நில்லாமல், மோர்கன் அங்கு வருவதற்கான வழி, வழிச்செலவுக்கு ஆகும் பணம் போன்றவைகளுக்கு ஒரு திட்டம் போட்டிருப்பதை அழகாக விளக்குகிறான்.
நீண்ட நாள் சிறைக்குள் இருந்த காரணத்தால் டிம்முக்கு மூளை குழம்பிவிட்டதாகச் சிரிக்கிறார் மோர்கன்.
பயங்கரமாக இடிஇடித்து மழை பொழிகிறது. அன்றைய இரவு கைதிகளை கணக்கெடுக்கும்போது டிம் காணாமல் போனது தெரியவருகிறது. சற்று நேரத்துக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட டிம் எப்படி மாயமாக மறைந்திருக்க முடியும் என்று வார்டன் அதிர்ச்சி அடைகிறார். அவன் அறையில் சோதனை போடுகிறார். சின்னச்சின்ன சிற்பங்களும், நடிகையின் மாபெரும் காலண்டரும் மட்டுமே இருக்கிறது.
அந்த காலண்டருக்குப் பின்னே யாரும் எதிர்பாராத அதிசயம் இருக்கிறது. ஆம், அந்த சுவரில் துளை போட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மைல் தூரம் சுரங்கப்பாதை தோண்டி தப்பித்துவிட்டான் டிம்.
போலீஸ் கண்டுபிடிக்கும் முன்பு, வங்கி பினாமி கணக்குகளில் இருந்து அத்தனை பணத்தையும் எடுத்துக்கொண்டு மாயமாக மறைந்துவிடுகிறான். மேலும் சிறை வார்டனின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிடுகிறான்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நிதானமாகப் பொறுமையாகத் திட்டமிட்டு, சரியான தருணத்திற்கு காத்திருந்து டிம் தப்பியிருக்கிறான் என்பதை அறிந்து மோர்கன் சிலிர்த்துப் போகிறார். அதையடுத்து பரோலில் வெளிவரும் மோர்கன், முன்பு டிம் சொல்லியிருந்த திட்டப்படி, குறிப்பிட்ட இடத்தை அடைகிறார். அங்கு டிம் சொன்னபடியே பணமும் வந்து சேர்வதற்கான வழித்தடமும் இருக்கிறது. அதை பின்பற்றிச்சென்று சொகுசுக் கப்பலில் இருக்கும் டிம்மை கண்டுபிடிக்கிறார். இருவரும் சுதந்திர பறவை ஆகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வது என்றால், நம்பிக்கை டானிக்கை ஒரு சினிமாவாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ரான்க் டாரோபோண்ட். இது, ஸ்டீபன் கிங் குறுநாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
பார்த்து ரசியுங்கள். உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் உயர்ந்துவிடும்.