தனிமை நன்மையா… தீமையா?

Image

நேசம் புதிது

ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன், ‘’எனக்கு சில நேரம் தனிமை பிடிக்கிறது, சில நேரம் கூட்டமாக இருப்பது பிடிக்கிறது. எது சரியானது. நான் எப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை’’ என்று கேட்டார்.

‘’இந்த உலகில் யாருமே உன்னை நேசிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்..?’’

‘’இது என்ன கேள்வி… என் குடும்பம் என்னை நேசிக்கும். என் தோழர்கள் என்னை நேசிப்பார்கள்..’’

‘’சரிதான். இவர்கள் எல்லாம் உன்னை நேசிக்கிறார்கள் என்று நம்புகிறாய். இவர்கள் யாரும் உன்னை நேசிக்கவில்லை என்ற உண்மை தெரியவந்தால்… அதாவது அவர்களுடைய முதல் நேசம் நீங்கள் இல்லை என்பது தெரியவந்தால்,  நீ நிம்மதியாக வாழ முடியாது. ஆம், பிறருடைய நேசிப்பு என்பது நிரந்தரம் இல்லை… ஏதேனும் ஒரு சண்டையில், ஏமாற்றத்தில் இந்த நேசிப்பு காணாமல் போய்விடலாம்…’’

ஞானகுரு சொன்னதை யோசித்தபோது, பிறருடைய நேசிப்பின் அடர்த்தியும் நிஜமும் மகேந்திரனுக்குப் புரிய வந்தது.

‘’அப்படியென்றால், என்னை நிரந்தரமாக நேசிப்பது யார்… அப்படி யாருமே இல்லையா..?’’

‘’ஒரே ஒருவர் உண்டு. அவர் மட்டுமே உன்னை நேசிப்பார். அதற்கு நீயும் ஒத்துழைக்க வேண்டும்…’’

‘’அவர் யார் என்று சொல்லுங்கள்… ஆர்வமாக இருக்கிறேன்..’’

‘’வேறு யார்… அது நீ தான். ஆம், உன்னை நீ தான் நேசிக்க வேண்டும். அப்படி நேசிக்கத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு பிறரது நேசம் உனக்கு தேவைப்படாது. அவர்கள் நேசிப்பதும், நேசிக்காமல் போவதும் உன்னை பாதிக்கவே செய்யாது. இன்னும் சொல்லப்போனால், பிறருடைய கவனத்தை, நேசிப்பை எதிர்பார்க்கும் எண்ணம் வராது…’’

‘’அப்படி வாழ முடியுமா..?’’

‘’மனிதனைத் தவிர எந்த உயிரினமும், மற்றவர் அன்புக்காக ஏங்கி நிற்பதில்லை. இதன் அர்த்தம் பிறருடைய அன்பை விலக்குவது அல்ல. பிறருடைய அன்பை எதிர்பாராமல் ஏற்றுக்கொள்தல். வேலை அல்லது படிப்புக்காக நிறைய பேர் தனியாக வாழும் சூழல் ஏற்படுகிறது. அதுபோல், முதியவர்களும் நோயாளிகளும் தனியறையில் இருக்கும் சூழல் உருவாகிறது. இதுபோன்ற நேரங்களில் நிறையபேர் சலிப்புடனே வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். எல்லாவற்றையும் சலிப்புடன் பார்ப்பதால், துன்பத்தை அனுபவிக்கிறார்கள். துன்பத்திலே உழல்கிறார்கள். தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று வருந்துகிறார்கள்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சொல்லப்படும் கருத்து என்ன தெரியுமா..? தனிமையில் என்ன நினைக்கிறோமோ, அது வளர்ந்து பெரிதாகிவிடும். அதாவது, துன்பத்தை நினைத்துக்கொண்டே இருந்தால், அது மேலும் மேலும் பெரிய துன்பமாகிவிடும். உங்கள் அருகே வரும் நபர்களையும் அந்த துன்பம் தொற்றிக்கொள்ளும்.

அதேநேரம், தனிமையிலும் ஆனந்தம் இருக்கிறது என்று நம்பினால், தனிமையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினால், அதுவும் வளரும். இவர்களை நெருங்கி வரும் நபர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே தனிமையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதற்கு முன்னதாக உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். தன்னை நேசிப்பவரால், தனிமையையும் நேசிக்க முடியும். தனிமையை உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்கவே முடியாது. எனவே, தனிமையை நேசி்யுங்கள்…’’ என்றார் ஞானகுரு.

‘’தனிமையில் இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பது..?’’

‘’நேரம் காலம் பற்றி அக்கறையில்லாமல் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுகிறாய் என்றால், அதுவே உனக்கு மகிழ்ச்சி தரும் செயல். உன் வாழ்க்கையில் எப்போதெல்லாம் சந்தோஷமாக இருந்தாய் என்று நினைத்துப் பார்… உன்னை சேர்ந்தவர்கள் எந்த நேரத்தில் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதையும் பார்… அந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவா… அது போதும். அந்த மகிழ்ச்சியை நீ நினைக்க நினைக்க… அது செடியாகி, மரமாகி பூவாக கொஞ்சும்… உன் பக்கத்திலும் நிறையவே ஆனந்த மனம் வீசும்’’ என்றார் ஞானகுரு.

தனிமையும் இனிமையே.

Leave a Comment