காலையில் குதிகால் வலிக்குதா..?

Image

ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர்.

படுக்கையில் இருந்து எழுந்து கீழே கால் வைப்பதற்கு சிலர் பயப்படுவார்கள். ஏனென்றால் பாதத்தை தரையில் வைத்தால் குதிகாலில் ஊசி குத்தியது போன்று சுரீரென வலி ஏற்படுவதுண்டு. சிலருக்கு காலில் எரிச்சலும் மதமதப்பும் இருக்கும். ஆனால் இந்த பிரச்னைகள், வலி, வேதனை எல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.

அதன் பிறகு நாள் முழுவதும் வழக்கம் போல் வேலை செய்வார்கள். வலியைப் பற்றி கவனிக்க மாட்டார்கள். ஏன் வலித்தது, எதற்காக வலிக்கிறது என்ற சிந்தனையும் வராது. அடுத்த நாள் காலையில் மட்டும் மீண்டும் வலிக்கும். ஒரு கட்டத்துக்குப் பிறகு காலையில் மட்டும் குதிகால் கொஞ்ச நேரம் வலிக்கும், அதன் பிறகு தானாகவே சரியாகிவிடும் என்று சமாதானம் செய்துகொள்வார்கள்.

ஆனால், இதனை கவனிக்காவிட்டால் இரவு நேரத்திலும் வலி வரும். அடுத்து எல்ல நேரத்திலும் வலி வரும். ஏனென்றால், இதன் பெயர் குதிகால் வாதம். ஆங்கிலத்தில் இதனை பிளாண்டார் பேசியைட்டிஸ் என்கிறார்கள்.

பாதத்தில் குதிகால் எலும்பிலிருந்து கட்டை விரலை நோக்கிச் செல்லும் திசுக்கொத்து உள்ளது. இந்த திசுக்கொத்து நமது உடல் எடையைத் தாங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்தத்தில் 14 சதவீதம் உடல் எடையை அது தாங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. குதிகாலை அதிகம் பயன்படுத்தும்போது அந்தத் திசுக்கொத்து குதிகால் எலும்போடு இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, உள்வீக்கம் உருவாகிறது இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது. சிலருக்கு குதிகால் எலும்பு திசுக்கொத்து சேருமிடத்தில் எலும்பு வளர்ச்சி ஏற்படும். இதற்கு கால்கேனியல் ஸ்பர் என்று பெயர். இதனாலும் குதிகால் வலி ஏற்படலாம். மேலும் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் அதிகமாதல், முடக்குவாதம், காசநோய், தட்டைப் பாதம், பிறவிக்குறைபாடு உள்ள பாதம், எலும்புத் திண்மைக் குறைவு நோய் போன்ற பல காரணங்களாலும் குதிகால் வலி ஏற்படும்.

பொதுவாக ஒருவர் சிரமம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றால் கெண்டைக்கால் தசை, குதிகால் ஜவ்வு, குதிகால் எலும்பு, பாதத் திசுக்கொத்து, பாதத்தில் உள்ள தசைகள் ஆகிய அனைத்துப் பாகங்களும் இணைந்து உதவ வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றின் ஒருங்கிணைப்பு சரியாக இல்லையென்றாலும் வலி உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பது, தொடர்ந்து நீண்ட நேரம் நிற்கும் பணியில் இருப்பவர்கள், குதிகால் உயரமாக செருப்பு அணிபவர்கள், பிறவியிலே தட்டையான பாதம் உள்ளவர்கள், பலவீனமான கெண்டைக்கால் தசை உள்ளவர்கள், ஒரு பாதத்தை மட்டும் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு குதிகால் வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த வலி ஏதேனும் ஒரு நாள் ஏற்படுவது பிரச்னை இல்லை. தொடர்ந்து காலையில் வலி இருக்கிறது என்றால் ரத்தப் பரிசோதனையின் மூலம் HLA, B27, ருமடாய்டு காரணி, யூரிக் அமில அளவு மற்றும் கிருமித் தொந்தரவு போன்றவைகளை ஆராய வேண்டும். என்ன காரணத்தினால் இந்த வலி உண்டாகிறது என்பதை அறிந்துகொண்டால், சிகிச்சை அளிப்பது எளிதாகிவிடும்.

நிறைய பேருக்கு குதிகால் வலி தானாகவே சரியாகிவிடும். வெந்நீர் ஒத்தடம், குளிர் ஒத்தடம் மூலம் இதை சரி செய்துவிடலாம். அதேநேரம் தினமும் அதிக வலியை அனுபவிப்பவர்களும், அன்றாடப் பணிகள் செய்வதற்கு இடையூறாக இருக்கும் நேரத்திலும் மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்ட்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.  

உடல் எடையைக் குறைத்தல், தகுந்த காலணி அணிதல், குதிகால் பயிற்சி, தொடர்ந்து நிற்பதைத் தவிர்த்தல் வேண்டும். ஓய்வு எடுப்பதன் மூலம் இந்த வேதனையைக் குறைக்கலாம். குதிகாலில் எலும்பு வளர்ந்து அதனால் வலி அதிகமாக இருப்பின் பாதிக்கப்பட்ட திசுக்கொத்தில் ஸ்டீராய்டு ஊசி செலுத்தி வலியைக் குறைக்கலாம். இயன்முறை மருத்துவ முறையில் (அல்ட்ராசோனிக் தெரபி) மூலம் பயன் பெறலாம். தீராத குதிகால் வலிக்கு சில நேரங்களில் திசுப்படலக் கீறல் பயன்தரும். குதிகால் திசுக் கொத்தை துண்டு மூலம் நீட்டிக்கச் செய்யும் பயிற்சி மற்றும் நின்றுகொண்டு கெண்டைக்கால் தசையை நீட்டிக்கச் செய்யும் பயிற்சி மூலம் தீர்வு காண முடியும்.

கணுக்கால் திசுக்கொத்தை நீட்டிக்கச் செய்யும் பயிற்சி. குதிகால் திசுக்கொத்தை வருடுதல் போன்ற பயிற்சிகள் நல்ல பலனைத் தரும். இதனை வீட்டிலேயே செய்து பார்க்கலாம். இதன் பிறகும் வலி தீரவில்லை என்றால் மருத்துவர் அல்லது பிசியோதெரபி சிகிச்சைக்கு அணுகலாம்.

Leave a Comment