என்ன செய்தார் சைதை துரைசாமி – 290
சென்னை மாநகரில் மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகே திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக நாடுகளில் வெற்றிபெற்ற நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து, பரிசீலனை செய்து சென்னைக்கு உகந்த பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்யத் தொடங்கினார்.
பொதுவாக மேயர் பதவிக்கு வருபவர்கள் குப்பை மேலாண்மை குறித்து கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார். அவர்களுடைய தெரு, அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் தெருவில் குப்பை பிரச்னை இருந்தால் மட்டுமே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசுவார்கள். மற்றபடி, குப்பை புகார்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகாரிகள் நீட்டும் இடத்தில் கையெழுத்துப் போடும் மேயராகவே பலரும் இருந்தார்கள். மேயர் சைதை துரைசாமி மட்டுமே சென்னை நகரை உண்மையிலே சுத்தமான சென்னையாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
மக்களை அத்தனை எளிதில் குப்பை பிரச்னையில் திருத்த இயலாது என்பதை மேயர் சைதை துரைசாமி புரிந்தே இருந்தார். அதாவது, சுயநலம் காரணமாக, தங்கள் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. வீதிக்குச் சென்று குப்பை கொட்டுவதற்கு சோம்பேறித்தனப்பட்டு, வீட்டுக்கு வெளியே வீசி விடுகிறார்கள். வீதி வரை போனாலும், குப்பையைத் தொட்டிக்குள் வீசாமல், தொட்டிக்கு வெளியே வீசுபவர்களே அதிகம். இது தவிர, எங்காவது ஒரு இருட்டான மூலை கண்ணுக்குத் தென்பட்டால், குப்பைகளைக் கொட்டி சில நாட்களில் அதனை நிரந்தரக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிடுவார்கள். வீட்டில் இடித்துத் தள்ளும் கட்டிடக் கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல், அவற்றையும் குப்பைத் தொட்டி அல்லது ரோடுகளில் கொட்டி விடுகிறார்கள்.
அதனால் மக்கள் சீர்திருத்தம் நடப்பதற்கு முன்பு மாநகராட்சி குப்பை மேலாண்மையை சிறப்பாகக் கையாள வேண்டும் என்று முடிவுக்கு வந்தார். இதற்காக ஏகப்பட்ட புதுப்புது முயற்சிகளை அறிமுகம் செய்தார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘ப’ வடிவக் குப்பைத் தொட்டி நிறுத்துமிடம்.
- நாளை பார்க்கலாம்.