முதுமை என்பது வரம்..!
இந்த உலகில் மனிதன் அச்சப்படும் விஷயங்களில் முக்கியமானவை, இரண்டே இரண்டுதான். அவை, முதுமையும் மரணமும். இந்த இரண்டும் வாழ்க்கையின் அம்சங்கள்தான். அதேநேரம், இந்த உலகில் பிறந்த மனிதர்களில் சுமார் 40 சதவிகிதம் மக்கள் மட்டுமே 60 வயதைத் தாண்டிய முதுமை வரையிலும் உயிர் வாழ்கின்றனர். ஆகவே, முதுமையை வரவேற்க வேண்டும். அது ஒரு வரம்.
குழந்தைப் பருவம், இளைமைப் பருவம் போன்று முதுமைப் பருவத்தையும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். கடவுளிடம் நீண்ட ஆயுளை கேட்பவர்களும் முதுமையை வெறுக்கிறார்கள். முதுமைப் பருவம் எய்திவிட்டாலே வெந்ததைத் தின்றுவிட்டு விதிவழியே போகவேண்டியதுதான் என்று விரக்தி அடைகின்றனர். அது தவறு என்பதை சுட்டிக்காட்டுகிறது ஓர் ஆய்வறிக்கை.
ஆம், ஒரு மனிதரின் முழுமையான திறமை எப்போது வெளிவருகிறது என்பது குறித்த ஆய்வறிக்கை அது. ஒருவருடைய முழுமையான திறமை 60 வயதுக்குப் பிறகுதான் தென்படுகிறது என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.
ஏனெனில் 30 வயது வரை விளையாட்டுத்தனத்துடனும், இன்பமான வாழ்க்கையை ரசிக்கத் துடிப்பவர்களாவும் மனிதர்கள் வாழ்கின்றனர். 30 முதல் 50 வயது வரை தங்களுடைய வாரிசுகளை சரியான படி வளர்க்கவும், குடும்ப வாழ்க்கையை சரியாக அமைக்கவும் தங்கள் சக்தியை செலவிடுவார்கள். 50 முதல் 60 வயதுக்குள் குடும்பத்திற்கு தாங்கள் செய்யவேண்டிய அத்தனை கடமைகளையும் செய்து முடித்து சுதந்தரம் அடைந்துவிடுகின்றனர்.
அதனால், 60 வயதுக்குப் பிறகுதான் அவர்கள் சிந்தனை கூர்மையடைகிறது. குடும்ப இடையூறு இல்லாமல், தங்கள் நேரத்தை முழுமையாக தங்களுக்காக செலவிட முடியும். அதனால்தான் மனிதனின் ஆற்றல், 60 முதல் 70 வயது வரையில்தான் முழுமையாக வெளிப்படுகிறது என்கிறது அந்த ஆய்வு.
இதுதான் உண்மை என்பதை நிரூபிப்பதற்கு நோபல் பரிசு பெற்றவர்களை பார்த்தாலே போதும். பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. நம் நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பாலோர் 60 வயதுக்குப் பிறகுதான் ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றனர். இதற்கு நேரு, மொராஜி தேசாய், நரசிம்மராவ், தேவகவுடா, நரேந்திர மோடி போன்றவர்களே உதாரணம்.
அதனால், 60 வயது ஆகிவிட்டதே என்று கொஞ்சமும் கலங்கவேண்டாம், உங்களுடைய உண்மையான திறமை இனிமேல்தான் வெளிப்பட இருக்கிறது. இந்த வயதுக்குப் பிறகு என்ன செய்வது என்பதுதான் பெரும்பாலோர் கவலை. வயதான காலத்தில் பொதுப்பணி, இலக்கியப் பணி, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடலாம். குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கலாம்.
இதற்கெல்லாம் ஆதாரமாக உடல் நலமுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆகவே, கட்டுப்பாடான உணவு முறை, சின்னச்சின்ன உடற்பயிற்சிகள் முக்கியம். எதிர்கால வாழ்வுக்காக சேமிப்பும் அவசியம். ஒரு மெழுகுவத்தி போன்று வாழ்வு முழுவதும் பிறருக்கு வெளிச்சம் தந்து வாழ ஆசைப்படுங்கள்.
முதுமையும் இனிமையே.