டாக்டர் பி.சதீஷ்
உணவுதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பார்கள். அதாவது, உணவு செரிமானத்தில் குடலின் பங்குதான் முக்கியமானதில். அதில் சிக்கல் வரும்போது, பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இதுகுறித்து இரையகக் குடலியவியல் மருத்துவர் பி.சதீஷ் அவர்களிடம் பேசினோம்.
குடலிலிருந்து எத்தகைய நோய்கள் வெளிப்படுகின்றன?
ஜீரண மண்டலம் என்றுதான் குடல் பாகங்களை மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த இந்த ஜீரண மண்டலம் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளிடம் இருந்து மாறுபட்டது. இந்த ஜீரண மண்டலத்தில் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறு குடல், சிறுகுடல், மலக்குழாய், பெருங்குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை, பித்தக்குழாய், மண்ணீரல் என 10க்கும் மேற்பட்ட உறுப்புகள் இருக்கின்றன. ஜீரண மண்டலத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால், வயிற்றுக்குள் ஐந்து அல்லது ஆறு வகையான நோயின் வெளிப்பாடுகள் இருக்கும். அதாவது வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, சாப்பாடு உள்ளுக்குள் செல்லாமல் அடைத்தல், மலம் அதிகமாய்க் கழித்தல் அல்லது மலமே போகாமல் இருத்தல், ரத்தக்கசிவு என நோயின் வெளிப்பாடுகள் ஜீரண மண்டலத்தில் அடங்கும். இதைவைத்துத்தான் எல்லா வியாதிகளும் வெளிப்படுகின்றன.

வயிற்றுவலி எதனால் வருகிறது? அவை, வருவதற்கு ஏதேனும் முக்கியக் காரணங்கள் உள்ளனவா?
கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் என எதுவாக இருந்தாலும் நோயை வெளிப்படுத்தக்கூடியவைதான். ஆனால், வயிற்றுவலி என்று சொல்கிறபோது, பொதுவாக அதை அல்சர் என நினைப்போம். ஆனால், வயிற்றுவலிக்கு நிறைய காரணங்கள் உள்ளன. எல்லா வியாதிகளுக்கும் பொதுவானது வயிற்றுவலிதான். அது சம்பந்தமாக, முதலில் நோயாளி என்ன சொல்கிறாரோ, அதைவைத்துதான் மருத்துவர் முடிவுசெய்வார். ஜீரண மண்டலத்தின் வேலை என்பது உணவுப் பொருட்களை முழுமையாக ஜீரணிப்பதுதான். நாம் சாப்பிடும் உணவானது ஜீரணிக்காமல் இருந்தால் அதுவே நோய்க்கு முதல் அறிகுறியாகும். அதேநேரத்தில், ஜீரணிக்காமல் இருப்பதற்கு சாப்பாடு பிடிக்கவில்லை அல்லது சாப்பிட்ட பின் வாந்தி வருகிறது அல்லது வயிறு உப்புசமாக இருக்கிறது என்றும் சொல்வார்கள்.
இரண்டாவது அறிகுறி, நாம் சாப்பிடும் உணவானது நம் உடலுக்குள் செல்கிறதா இல்லையா எனக் கண்டுபிடிக்க வேண்டும். ஜீரணம் ஆகிறது என்றால், சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்குள் மீண்டும் பசி வரும்; சிறுநீர் மற்றும் மலம் கழிக்க நேரிடும். இவையெல்லாம் இல்லாதபட்சத்தில், ஜீரண சக்தி குறைவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும். ஜீரண சக்தி குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக, வியாதியாலும் ஜீரண சக்தி குறையலாம். வியாதி இல்லாமலும் ஜீரண சக்தி குறையலாம்.
டென்ஷன், தூக்கமின்மையால் ஜீரண சக்தி குறைவு ஏற்படலாம். நோய்த் தொற்று, டிபி, கேன்சர் போன்ற வியாதிகளாலும் ஜீரண சக்தி குறைவாக இருக்கலாம்.
இவை வருவதற்கு இன்ஃபெக்ஷன், மனநிலை, கேன்சர் என மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நாம் விரும்பிக்குடிக்கும் ஜூஸில் பாக்டீரியா, வைரஸ் அல்லது இன்னும் சில நுண்ணுயிரிகள் இருக்கலாம். இதனால், நமக்கு இன்ஃபெக்ஷன் வரலாம். அடுத்து மனநிலை. சிலர் இரவு நேர வேலை பார்ப்பார்கள். பிசினஸில் கவனம் செலுத்துவார்கள். இதனால் தூக்கமில்லாமல் இருப்பார்கள். இதனால் உடலில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்து, கேன்சர். இதற்கான செக்கப்பை 35 வயது முதலே தொடங்கிட வேண்டும்.
இத்தகைய நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, டிபி என்றால் நுரையீரலில் வருவதை சொல்வோம். அதேபோன்று சாப்பாட்டிலும் இன்ஃபெக்ஷன் டி.பி. என்று உள்ளது. இந்த டி.பி.யும் குடலைப் பாதிக்கலாம். ஆகையால், உணவு விஷயத்தில் கவனமாய் இருத்தல் வேண்டும். பொதுவாக தண்ணீர், உணவுப் பொருள்கள், சமைக்கும் பாத்திரங்கள், கைகள், சமைத்த உணவுகள் என அனைத்தும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அத்துடன் நம் உடலுக்கு எவ்வளவு கலோரி தேவையோ அந்த அளவே சாப்பிட வேண்டும். அடுத்து நம் மனநிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இரவில் வேலை பார்ப்பவர்கள் பகலில் தூங்க வேண்டும். இரவு வேலை சரிப்பட்டு வரவில்லை என்றால், வேறு எந்த தொழில் சரியாக வருகிறதோ, அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, டென்ஷனைக் குறைக்க வேண்டும். அதுபோல், குடும்பத்தில் சிலருக்கு சர்க்கரை, இதயநோய், கேன்சர் என வியாதிகள் இருக்கலாம். அப்படி இருக்கும் சமயத்தில், நாம் முன்னெச்சரிக்கையாய் 30-35 வயது முதலே அதற்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். மேலும், அடிக்கடி மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற வேண்டும். அப்படியில்லாவிட்டால், நோய் வந்த பிறகு குணப்படுத்துவது கஷ்டம்.
குழந்தைகளுக்கு எதனால் வயிற்றுவலி வருகிறது?
குழந்தைகளுக்கு வயிற்றுவலிக்கு இரண்டு மூன்று காரணங்கள் சொல்லலாம். முதல் காரணம், பூச்சி. வயிற்றில் பூச்சியிருந்தால் குழந்தைககு வயிற்றுவலி வரும். குழந்தைகள் நூறு சதவிகிதம் சுத்தமாகச் சாப்பிடும் என்று சொல்ல முடியாது. அதனால் அவர்களது வயிற்றில் பூச்சி வர வாய்ப்பிருக்கிறது. இதனால், மருத்துவர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனையின் பேரில் பூச்சி மருந்துகளை கொடுப்பது நல்லது. அடுத்து நொறுக்குத் தீனியாலும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வரலாம். இதுதவிர பெரியவர்களுக்கு வருவதைப் போன்று அப்ரண்டீஸ், பித்தைப்பைக் கற்கள் மூலமும் வயிற்றுவலி வரலாம்.