ஓட நினைத்தால் ஓடலாம்..!

Image

நம்பிக்கைச் சுடர்  ஜெஸ்ஸி ஓவன்ஸ்


‘எல்லோருக்கும் ஆசை இருக்கும்; ஆனால், அந்த ஆசை நிறைவேற தீர்மானமும் அதற்கான மனவுறுதியும் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம்’ என்கிறார், ஜெஸ்ஸி ஓவன்ஸ். ஒலிம்பிக் சரித்திரத்தில், அவருடைய பெயர் இன்றும் ஜொலிப்பதற்குக் காரணம், ஓவன்ஸ் பெற்ற தங்க வேட்டைகள்தான். அதிலும் குறிப்பாக, 1936ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் யாரும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாத சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரத்தில் இடம்பெற்றார். அந்தப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தார். இதனால், ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது.
 யார் இந்த ஓவன்ஸ்?
அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில், சாதாரணக் கூலி விவசாயி ஒருவருக்கு, பத்தாவது மகனாகப் பிறந்தவர்தான்  ஓவன்ஸ். ஒல்லியான கால்கள், மெலிந்த தேகம், தட்டையான மார்பு என உடல்வாகு கொண்டிருந்த ஓவன்ஸுக்கு உடலில் கட்டி வேறு.  ‘அந்தக் கட்டியை அகற்றாவிட்டால், ஓவன்ஸின் ஆயுள் இரண்டு வருடங்களில் முடிந்துவிடும்’ என மருத்துவர்கள் சொல்ல, அச்சத்தில் உறைந்துபோயினர் அவரது பெற்றோர்.
அரைவயிற்று கஞ்சிக்கே நாள்முழுதும் வெள்ளையர்களிடம் அடிமையாக  இருந்த அந்த காலத்தில், ஓவன்ஸின் கட்டியை அகற்ற காசுக்கு எங்கே போவது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் விழித்த நேரத்தில், ஓவன்ஸின் தாய் துணிச்சலுடன் ஒரு முடிவெடுத்தார். சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு தன் மகனின் கட்டியைக் கிழித்தெறிந்தார்.  ரத்தம் பீறிட்டதே தவிர, ஓவன்ஸின் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே நிமோனியாவால் பாதிக்கப்பட்டார், ஓவன்ஸ்.
இந்த நிலையில்தான் நிறவெறி தலைவிரித்தாடிய அமெரிக்காவின் வடக்கு மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தனர், அவரது பெற்றோர். அங்கு, பள்ளிக்குச் சென்ற ஓவன்ஸ், நிறவெறியால் ஒதுக்கிவைக்கப்பட்டார். இதே நிறவெறியால், இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரை அரவணைத்த ஓர் ஆசிரியரைப் போன்று அங்கேயும் ஓர் ஆசிரியர் ஓவன்ஸை அரவணைத்தார். அவர்தான், இவருக்கு ஜெஸ்ஸி ஓவன்ஸ் எனப் பெயர்வைத்தார்.
ஒருநாள், பள்ளியில் நடைபெற்ற 60 மீட்டர் தூர ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினார் ஓவன்ஸ். அதைப் பார்த்த பயிற்சியாளர், ஓவன்ஸுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதை உணர்ந்து, அவருக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.  அதிலிருந்து அவர், பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அவருக்கு 19 வயதானபோது கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு, 100 மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது திறமையைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரை தங்கள் மாணவராக்கிக்கொள்ள போட்டிப் போட்டன. அப்போதும் பல்கலைக்கழகத்தில் இனவெறியால் பல இன்னல்களைச் சந்தித்தார்.
இப்படி வெள்ளை இன பெரும்பான்மையினரால் எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ், தனக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகளுக்கு தன் கால்களாலேயே பதிலடி தந்தார். ஆம், 1936ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிரகாசமாக மின்னினார், ஓவன்ஸ். ஒலிம்பிக்கில் மகத்தான சாதனையை ஓவன்ஸ் செய்தும், அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. ஒலிம்பிக்கில் சாதித்த பின்னும், தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஓவன்ஸுக்கு இல்லை. நான்கு ஒலிம்பிக் தங்கங்கள் பெற்றும் ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்ததால் தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
அவருக்குப் பின் பல கறுப்பின வீரர்கள் தடகளத்தில் கோலோச்சியிருக்கலாம்; சரித்திர சாதனைகளை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால், அதற்குக் காரணமாக இருந்தவர் ஜெஸ்ஸி ஓவன்ஸ்தான் என்பதில் மறுப்பதற்கில்லை. 1976ம் ஆண்டு ஜனாதிபதி விருதையும், 1979ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்ற ஓவன்ஸ், தன்னுடைய சிறு வயதில் நுரையீரல் தொற்று விட்டுப்போன செல்களால் உருவாகிய புற்றுநோயால் 1980ம் ஆண்டு மார்ச் 30ல் இறந்துபோனார்.  இன்று தடகள உலகையே தன் வசமாக்கிய உசேன் போல்ட் 2009ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில், தான் பெற்ற பதக்கங்களையும், நிகழ்த்திய உலக சாதனைகளையும் ஓவன்ஸுக்குச் சமர்ப்பித்தார்.
காயங்கள் மற்றும் தோல்விகளினால் துவண்டுபோயிருக்கும் பலருக்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஒரு நம்பிக்கை சுடர் என்று சொன்னால் மிகையாகாது.

Leave a Comment