டோனியின் வெற்றி ரகசியம்

Image

அடுத்தவருக்கு வழி விடுங்கள்…

ஒரு வணிகம் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென்றால், அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் இருந்து லக்ஸ் சோப் விற்பனையில் இருக்கிறது என்றாலும்… இன்றும் புதிதுபுதிதாக விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். நட்சத்திரங்களின் அழகு சோப் என்பது தாரக மந்திரம் என்பதால் அந்தந்த காலத்தில் எந்த நடிகையின் மார்க்கெட் உட்சத்தில் இருக்கிறாரோ, அவரை வைத்தே விளம்பரம் செய்வார்கள். அதனால் புதிய தலைமுறையினரும் இந்த சோப்பை வாங்குவார்கள். அதுமட்டும் போதாது என்று அவ்வப்போது சோப் கவர் டிசைன், கலர் போன்றவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். புதுமையான நறுமணம் சேர்த்திருப்பதாக புதிய விளம்பரம் கொடுப்பார்கள். ஏன் இப்படியெல்லாம் மாற்றம் செய்கிறார்கள் என்றால், அப்போதுதான் பொருள் மேம்படுத்தப்பட்டதாக காட்டிக்கொள்ள முடியும். மாறுதல் செய்தால்தான் வியாபார போட்டியை தாக்குப்பிடித்து நிற்கமுடியும். வியாபார பொருட்களில் மட்டுமல்ல நிறுவனத்தின் மேலாண்மையிலும் மாற்றம்  அவ்வப்போது செய்யவேண்டியது மிகவும் அவசியம்.

வெற்றிகரமாக நடைபெறும் நிறுவனத்திலும் அதிகாரிகளை மாற்ற வேண்டுமா என்று கேட்டால், அதுவும் நல்லது என்று உறுதியாக சொல்லலாம். இப்படிப்பட்ட சூழலில் முழு நிர்வாகத்தையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் நடந்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் புதிய ரத்தம்,, புதிய சிந்தனை ஊட்டப்பட்டு நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும். தோல்வி அடைந்த நிறுவனத்தை வெற்றிப் பாதைக்குத் திருப்பவும் இதுபோன்ற நிர்வாக மாற்றம்  உதவி புரியலாம். இதுகுறித்த ஒரு குட்டிக்கதை ஏற்கெனவே  தெரிந்திருக்கலாம்.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கி பெரிய நஷ்டம் அடைந்திருக்கும் நிறுவனத்தின் தலைவர் மிகவும் ரிலாக்ஸ்டாக ஹோட்டலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அதை தற்செயலாக பார்த்த போட்டி நிறுவன அதிபர் ஆச்சர்யத்துடன் அவரிடம் பேசவந்தார்.

என்னுடைய நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து லாபம் ஈட்டவேண்டும் என்பதற்காக கடுமையாக நான் உழைக்கிறேன். ஆனால் உங்கள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும்போது உங்களால் எப்படி இத்தனை  ஓய்வாக, சந்தோஷமாக இருக்கமுடிகிறது என்று கேட்டார்.

பத்து லட்ச ரூபாய் சம்பளத்தில் சிஇஓ பதவிக்கு  ஒருவரை புதிதாக  நியமனம் செய்திருக்கிறேன். இனிமேல் நிறுவனத்தையும் நிர்வாகத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்பதால் நான் நிம்மதியாக, ஓய்வாக இருக்கிறேன் என்று பதில் சொன்னார்.

ஏற்கெனவே உங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறிக்கொண்டு இருக்கிறீர்கள், இப்போது 10 லட்ச ரூபாய்க்கு புதிதாக ஒருவரை வேலைக்கு சேர்த்தால், அவருடைய சம்பளத்துக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும், எல்லோருக்கும் எப்படி சம்பளம் போடவேண்டும், நிறுவனத்தை எப்படி லாபகரமாக நடத்தவேண்டும் என்பதெல்லாம் இனிமேல் புதிய சிஇஓ-வின் கவலை. அதனால் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று ஜாலியாக பதில் சொன்னாராம்.

இது உண்மையில் நல்ல நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டான கதை. அவ்வப்போது தலைமைக்கு புதியவரை நியமனம் செய்வது புத்திசாலித்தனமான அணுகுமுறை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் புதியவர் தங்கள் திறனை காட்டுவதற்காக கூடுதல் உழைப்பு கொடுப்பார்கள், அதனால் நிர்வாகம் நல்லபடியாக நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதேபோன்று ஒரு நிறுவனம்  தொடர்ந்து நஷ்டத்தில் நடக்கிறது, சமாளிக்கமுடியாத பிரச்னைகள்  வருகிறது என்றால் நிச்சயம் தலைமையில் மாற்றம் செய்தே தீரவேண்டும். அதுதான் நிர்வாகத்திற்கும் நிறுவனத்திற்கும் நல்லது. இதற்கு ஒரு நல்ல உதாரணம்  என்றால் கிரிக்கெட் வீரர்  மகேந்திரசிங் டோனியை சொல்லலாம். டோனிக்கும் வணிகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கவேண்டாம். அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான இலக்கணத்தை கண்டுபிடிக்க முடியும்.

வித்தியாசமான ஹேர்ஸ்டைல், ஹெலிகாப்டர் ஷாட், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் ஆகியவற்றால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் டோனி. கேப்டன் கூல் என்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டவர். ஏனென்றால் மைதானத்தில் எப்படிப்பட்ட சூழல் ஏற்படும்போதும் டென்ஷன், பரபரப்பை அவர் முகத்தில் பார்க்கவே முடியாது. எப்படியும் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கையுடன்  நிற்பார். ஒரு சில ஓவர்களில் ஆட்டத்தின் முடிவை நிச்சயம் மாற்றிவிடமுடியும் என்று உறுதியாக நம்புபவர்.  அதுபோல் பல போட்டிகளை மாற்றியும்  காட்டியிருக்கிறார். அதனாலே இவரை ஆபத்தான கேப்டன்,  அபாயகரமான பேட்ஸ்மேன் என்றும் சொல்வார்கள்.   பின்வரிசையில் களம் இறங்கினாலும் அணிக்காக தன்னுடைய அளப்பரிய பங்களிப்பை செய்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக சதங்கள் கண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது. மொத்தம் 9 சதங்கள் கண்டுள்ள தோனி, அதில் ஏழாவது வீரராகக் களமிறங்கி 2 சதங்களை விளாசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அனைத்து சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர்  என்று ரசிகர்கள் டோனியை  கொண்டாடுகிறார்கள். அதேபோல் இந்தியாவில் அதிகபட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவரும் டோனிதான்.  அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில் தோனியே முன்னிலை வகிக்கிறார். 439 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், இதுவரை 152  வீரர்களை  ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் பட்டியலிலும்  தோனியே  முதலிடம் பிடித்திருக்கிறார்.

இத்தனை வரலாற்று சாதனைகளும் டோனி செய்ததற்கு காரணம், அவ்வப்போது புதியவர்களுக்கு வழிவிட்டதுதான். ஆம், அவர் நினைத்திருந்தால் முதல் வரிசையில் இறங்கி விளையாடியிருக்க முடியும். ஆனால், தன்னுடைய வெற்றியைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று நினைத்தார். அதனால் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு காத்திருந்தார்.

அதுபோல் எப்போதெல்லாம் இந்திய அணிக்கு சிக்கல் வருகிறதோ, உடனடியாக புதிய வீரர்களை பரிட்சார்த்தமாக களம் இறக்குவதற்கும் டோனி தயங்கியதே இல்லை. எந்தப் போட்டிக்கு எந்த வீரர் தகுதியாக இருப்பார் என்பதை ஆய்வு செய்து, அவரை களம் இறக்குவார். ஒருசில நேரங்களில் அவருடைய கணிப்பு பொய் ஆனபோதிலும், தன்னுடைய யுக்தியையும் நம்பிக்கையையும் அவர் மாற்றிக்கொண்டதில்லை. அதனால்தான் ஏராளமான போட்டிகளில் கடைசி பந்தில்கூட இந்தியா வெற்றியை ருசித்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் டோனியின் புதுப்புது மாற்றங்கள்தான்.

இன்னொரு விஷயத்திலும் டோனி மிகவும் தெளிவாக இருக்கிறார். அணிக்கு தன்னால் மட்டுமே வெற்றி தரமுடியும் என்ற தலைக்கனத்துடன் இருந்ததில்லை. அதனால்தான் யாருமே எதிர்பாராத நேரத்தில், திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தானாகவே வெளியேறினார். இப்போது வழிவிடவேண்டிய அவசியம் இல்லை என்று எத்தனையோ பேர் எடுத்துச்சொன்னபோதும், டோனி பின் வாங்கவில்லை.

அதேபோல் அடுத்து நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு புதிய தலைமை இருப்பதுதான் நல்லது என்று முடிவெடுத்தார் டோனி. அதனாலே யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், தன்னுடைய கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறார். இதுதான் முதிர்ச்சி, இதுதான் தலைமைக்கான அறிக்குறி.  இப்படிப்பட்ட ஒரு தலைவரால்தான், நிறுவனத்தை சிக்கலில் இருந்து காப்பாற்றமுடியும். டோனி ஆடுகளத்தில் செய்ததுபோன்று, நிறுவனத்திற்கு தேவைப்படும் நேரத்தில் மேலாண்மையிலும்,  நிறுவன பொருட்களிலும் மாற்றங்கள் செய்துகொண்டே இருந்தால் வெற்றி மேல் வெற்றி வரும்.

டோனி கூறியிருக்கும் சில வாசகங்கள் வணிக வெற்றிக்கும் பொருந்தக்கூடியவை.

  • 100 சதவிகிதம் உடல் அளவில் தகுதியும், முழு திறனுடன் விளையாடவும் முடியாமல் போட்டியில் பங்கேற்பது மிகப்பெரிய ஏமாற்றுவேலை.
  • மக்கள் கூட்டத்திற்காக விளையாடாதே, நாட்டுக்காக விளையாடு.
  • என் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளன. நான் தோற்று வந்தாலும், வெற்றியுடன் வந்தாலும் அன்பு காட்டுவதில் பாரபட்சம் காட்டுவதில்லை.
  • நல்ல ஃபார்மில் இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. அது நல்ல மனநிலை மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.
  • என்ன செய்யவேண்டும் என்ற கனவு இல்லையென்றால் சாதனைகள் புரியமுடியாது. அதனால் குறிக்கோள் எது என்பதில் தெளிவாக இருங்கள்.
  • நான் கிரிக்கெட் பற்றி நிறைய படித்ததில்லை. ஆனால் மைதானத்தில் அனுபவித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன், கற்றுக்கொள்கிறேன்.

Leave a Comment