சர்க்கரை நோயாளிகள் மட்டன் சாப்பிடலாமா..?

Image

டாக்டர் வெங்கட்ராமன் அட்வைஸ்


இன்று, இந்தியாவில் நம்பர் ஒன் நோயாக உருவெடுத்திருக்கிறது, சர்க்கரை நோய். அதிலும், இளம்வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உடலில் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் ஒருவரை இழக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையும் உருவாகிறது. இதிலிருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து  சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணரான மருத்துவர் வெங்கட்ராமனிடம் பேசினோம்.



சர்க்கரை நோய் என்றால் என்ன? இது யாருக்கெல்லாம் வரும்? இது, வருவதற்கான காரணங்கள் என்ன?
நமது உடலில் சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருக்கும். மேலும், நமது உடலில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு நார்மலாக இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் நார்மலாக இருக்கும். இன்சுலின் அளவு குறையும்போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதை, டயாபடீஸ் என்று சொல்லலாம். இதை, ஒருமுறைக்கு இருமுறை நன்கு டெஸ்ட் செய்துகொள்வது நல்லது. முன்பெல்லாம், இதை பணக்கார வியாதி என்றும், இது வெளிநாட்டில்தான் இருக்கிறது என்றும் பலரும் நினைத்தனர். ஆனால், இந்த நிலைமை தற்போது முழுவதுமாக மாறிவிட்டது.
இந்தியாவில் அதிகளவில் சர்க்கரை நோய் வந்துவிட்டது. உலகளவில் மற்ற நாடுகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது. இது, ஒரு  பரம்பரை வியாதி. தவிர இது வருவதற்கு நம்முடைய சூழ்நிலையும் காரணமாகிறது. முக்கியமாக, நம்முடைய பழக்கவழக்கங்கள் மாறியிருப்பதால்தான் இதன் பாதிப்புகளும் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது.
உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி, எடை பருமன், உடற்பருமன், அதிக கொழுப்பு போன்ற காரணங்களால் சர்க்கரை வியாதி வருகிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சர்க்கரை வியாதி வருகிறது. தற்போது நம் நாட்டில் இளையவர்களுக்குக்கும் (15 – 25 வயது) சர்க்கரை வியாதி வந்துவிடுகிறது. இளம் வயதில் சர்க்கரை வியாதி வருவது ஆபத்தானது. ஆகவே, உரிய மருத்துவரைச் சந்தித்து  அதற்கான டெஸ்ட்களை எடுத்து அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யும்போது சர்க்கரை வியாதியிலிருந்து விடுபட முடியும்.

சர்க்கரை வியாதியில் எத்தனை வகைகள் உள்ளன? இதனால் எத்தகைய பாதிப்புகள் வரும்?
சர்க்கரை நோயில் குறிப்பாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, டைப் 1, மற்றொன்று டைப் 2. கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய்.  டைப் -2 சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு உண்டாகக்கூடியது. டைப் 1 நம் நாட்டில் மிகவும் குறைவு. ஆனால், டைப் 2 சர்க்கரை வியாதி, 40-50 வயதுக்குள்ளேயே வந்துவிடுகிறது. இது, பாரம்பரியமாக வருகிறது. இதுதவிர, நான் மேலே சொன்னபடி பிற காரணங்களும் இருக்கின்றன. இதை உடற்பயிற்சி, சாப்பாடு, நல்ல மருந்துகள் ஆகியவற்றின் மூலம் குணமாக்கலாம். இப்போது இருக்கும் மருந்துகள் வெறும் சுகரை மட்டும் குணப்படுத்துவது மட்டுமின்றி, மற்ற வியாதிகளுக்கும் தீர்வளிக்கின்றன.
குறிப்பாக, எதிர்காலத்தில் கிட்னி மற்றும் ஹார்ட் பிரச்சினைகள் வராமல் தடுக்கும் அளவுக்கு நவீன மருத்துவம் வளர்ந்திருக்கிறது. அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் நம் நாட்டிலும் உள்ளன. ஆகையால், ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் வருமுன்னே விழிப்புணர்வு கொண்டு அதற்கான சிகிச்சைகளைப் பெறவேண்டும். தற்போது, நிறைய மருத்துவமனைகளில் மாஸ்டர்ஸ் செக்கப் செய்யப்படுகிறது. அதற்குக் காரணம், சர்க்கரை வியாதி உள்ள பல பேருக்கு அறிகுறிகள் தெரியாது. அதேநேரத்தில், இதேபோல் மாஸ்டர்ஸ் செக்கப் செய்யும்போது சர்க்கரை வியாதி மட்டுமல்ல, உடலில் உள்ள வேறு பல பிரச்சினைகளையும் தெரிந்துகொள்ள முடியும்.  
சர்க்கரை வியாதியினால் இரண்டு விதமான பாதிப்புகள் வர வாய்ப்புண்டு. சின்னச்சின்ன ரத்தக் குழாய்கள் பாதித்தால், கிட்னியைப் பாதிக்கும். நடுத்தரமான ரத்தக்குழாய்கள் பாதித்தால் இதயம், மூளை போன்றவை பாதிக்கப்படும். சர்க்கரை வியாதி எந்த அளவுக்கு நம் நாட்டில் அதிகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு இதயநோயும் அதிகமிருக்கிறது. சர்க்கரை வியாதியைப் போன்றே இதய வியாதியும் சீக்கிரம் வந்துவிடுகிறது. கொழுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒருவருக்கு இதய நோய் வருவது  4 சதவிகிதம்தான். ஆனால், புகை பிடிப்பதால் ஒருவருக்கு இதயநோய் 20 மடங்கு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், சில தடுப்பு முறைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு உடனே சிகிச்சையளிக்காவிட்டால் குடும்பத்தில் ஒருவரை இழக்க நேரிடும்.
சர்க்கரை வியாதிக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன? இதற்கான மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த டெஸ்ட், பிறகு சாப்பிட்ட பின் எடுக்கப்படும் ரத்த டெஸ்ட், கொழுப்பு சத்து டெஸ்ட், சிறுநீரில் புரோட்டின் டெஸ்ட், கிட்னி டெஸ்ட், லிவர் பங்க்‌ஷன் டெஸ்ட், ஈ.சி.ஜி, தைராய்டு டெஸ்ட் இவற்றையெல்லம் எடுக்க வேண்டும். தவிர, காலில் ரத்த ஓட்டம் எவ்வளவு இருக்கும் என்பதற்கான டெஸ்ட் எடுக்க வேண்டும். சுகருக்கு ஏற்றமாதிரி அடிக்கடி எடுக்க வேண்டியது அவசியம். இது, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தற்போது இந்த வியாதி எல்லோருக்கும் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சர்க்கரை வியாதிக்கு ஆங்கில மருத்துவத்தின் மூலம் கொடுக்கப்படும் மாத்திரை மற்றும் ஊசிகளால் நிச்சயமாக எந்த உறுப்புகளும் பாதிக்கப்படாது. ஆனால், வைத்தியம் மாறும். சில உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான மருந்துகள் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். மருந்துகளைக் குறைக்க வேண்டியும் இருக்கலாம்.

சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிட மற்றும் தவிர்க்க  வேண்டியவை எவை?

பொதுவாக, எடைக்கேற்ற உணவுகளைச் சாப்பிடலாம். அதில் தவறில்லை. அதாவது, அதிகம் எடைகொண்ட ஒரு நபர், குறைத்துச் சாப்பிடுவது நல்லது. குறைவான எடை கொண்டிருந்தால், அதிகம் சாப்பிடலாம். அதேநேரத்தில் வாட்ஸ் அப், யூடியூப்பில் வரும் தகவல்களைப் பார்த்துவிட்டு, சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கூடியமளவுக்கு உணவு விஷயத்தில் மருத்துவர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டும். போதுமான அளவுக்கு நம்முடைய டயட்டை மாற்றிக்கொள்ள முயல வேண்டும். குறிப்பாக, எட்டு இட்லி சாப்பிடுபவர்கள் மூன்று இட்லி சாப்பிடலாம். மேலும், 55 சதவிகிதம் கார்போஹைட்ரே, 20 சதவிகிதம் புரோட்டின், மற்றவைகளை இதர விகிதத்தில் சாப்பிடலாம். எல்லாவிதமான நியூட்ரின்களை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக, எது சாப்பிடுகிறோம் என்பதைவிட எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

நம் பழக்கவழக்கதில் உள்ள எல்லா டயட்களையும் பின்பற்றலாம். பொங்கல், இட்லி, உப்புமா, சாப்பாடு என எதையும் எடுத்துக்கொள்ளலாம். நிறைய காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். மீன், சிக்கன் எடுக்கலாம். ஆனால், மட்டன் எடுக்கக்கூடாது. அதில் கொழுப்பு அதிகம் உள்ளது. எது சாப்பிட்டாலும் அளவு முக்கியம்.

 கொழுப்புச் சத்துள்ள உணவுகள், ஜங்க் புரூட்ஸ், சாஃப்ட் டிரிங்க்ஸ், ஹை கேலரி உணவுகள். புரூட் ஜூஸஸ்  முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டியதில்லை. உதாரணத்துக்கு களிதான் சாப்பிட வேண்டும்; இட்லி சாப்பிடக்கூடாது என்பது தவறு.  கோதுமைகூட சிலருக்கு உடலில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.  இதனால், பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு எந்த டயட்டும் வேண்டாம். முக்கால்வாசி நேரம் சுகர் அதிகமுள்ளவர்கள் அரை இட்லி மட்டும் சாப்பிட்டு, டயட்டில் இருப்பார்கள். ஆனால், அது தவறு. சுகர் குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி சாப்பாட்டை குறைக்கக்கூடாது.





Leave a Comment