என்ன செய்தார் சைதை துரைசாமி – 282
சென்னை மாநகராட்சி நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை காலம் காலமாக சிலர் செய்துவந்தார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளை சரிக்கட்டி தங்கள் முறைகேடு வெளியே வராமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும் மக்களுக்கும் பொதுநலச் சங்கத்தினருக்கும் நம்பிக்கை வந்தது. அதனால், மாநகராட்சி நில அபகரிப்புகள் குறித்து தைரியமாகப் புகார் அனுப்பினார்கள்.
அந்த வகையில் தான், அண்ணாநகர் டவர் கிளப் அமைந்துள்ள இடம் தொடர்பாகவும் மேயர் சைதை துரைசாமிக்குப் புகார் வந்தது. அது, முக்கியமான இடம் என்பதால் அது குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அண்ணாநகர் மூன்றாவது பிரதான சாலையில் 5,872 சதுர அடி சென்னை மாநகராட்சி கட்டிடம் டவர்ஸ் கிளப்பின் பயனுக்காக குறுகிய கால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது என்றாலும் கூடுதலாக 33,255 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் தயங்கி நின்றார்கள். அரசியல், அதிகாரம் என்றெல்லாம் மேயர் சைதை துரைசாமியையும் தடுத்து நிறுத்த முயன்றார்கள். ஆனால், யாருக்காகவும், எதற்காகவும் மாநகராட்சி நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி தயாராக இல்லை. உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்.
மேயர் சைதை துரைசாமி நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி காட்டினார். அதனால் கடும் போராட்டத்திற்குப் பிறகு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. அன்றைய நிலையில் மேயர் சைதை துரைசாமி மீட்ட நிலத்தின் மதிப்பு 53 கோடி ஆகும்.
அதேபோன்று சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 13 மனை 1720 சதுர அடி, குத்தகை நிலம் பிக்னிக் ஹோட்டலின் ஆக்கிரமிப்பிலிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த நிலத்தையும் உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் மேயர் சைதை துரைசாமி இறங்கினார். அந்த வகையில் மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 46 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலம் மக்களுக்குப் பயன் கிடைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு மேயர் சைதை துரைசாமியால் ஒப்படைக்கப்பட்டன.
மாநகராட்சி மூலம் நிலங்கள் மீட்கப்படும் தகவல் தெரியவந்ததும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் பற்றி மக்கள் மேயர் சைதை துரைசாமிக்கு நேரடியாகவே புகார் அனுப்பத் தொடங்கினார்கள்.
- நாளை பார்க்கலாம்.