பாலுக்குப் பதில் கோமியம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஐஐடி இயக்குனர் காமகோடி போன்றவர்கள் கோமியம் பயன்பாட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் புற்றுநோய் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் வி.மாசிலாமணி நேரடியாக காமகோடிக்கு ஒரு சவால் விட்டிருக்கிறார்.
அதாவது, காமகோடி குறிப்பிட்ட Irritable bowel syndrome (IBS) உள்ள 100 பேரில் 50 பேருக்கு பசு மூத்திரம், 50 பேருக்கு நன்னாரி சர்பத் கொடுத்து பசு மூத்திரம் குடித்த 50 பேருக்கு வயிற்று வலி போய்விட்டது என்றால் காமகோடிக்கும் அவர் டீமுக்கும் 1 லட்சம் ரூபாய் மாசிலா – விஜயா அறக்கட்டளை கொடுக்கும். இதை இன்னும் 6 மாதங்களுக்குள் காமகோடி நிரூபிக்காவிட்டால் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட தயாரா என்று கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில் டாக்டர் செளந்தரராஜன், ‘’பசு மூத்திரத்தில் பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறதா என்றால், இருக்கிறது. பசுக்கள் உட்கொள்ளும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களில் இருந்து உருவாகும் என்சைம்கள் பசுவின் வயிற்றில் ஜீரணம் வெளியேற்றப்படும் போது ஆன்ட்டிமைக்ரோபியல் புரோபர்டீஸ் உடன் வெளியேறுகிறது.
ஆகவே பசு மூத்திரத்தில் இருக்கும் சில புரதக்கூறுகள்s நோய் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படலாம். ஆகவே பசு மூத்திரத்தைக் குடிக்கலாம் என்பது நீண்டகால வாதம். மனித மலத்தில், மனித மூத்திரத்தில் பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறதா?
ஆமாம், இருக்கிறது. மனித மலத்தில் டிஃபென்சின்கள் (Defensins) இருக்கிறது, இவை ஆன்ட்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் என்றழைக்கப்டுகிறது, அவை பல்வேறு நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உட்பட பல்வேறு எபிடெலியல் (Epithelial Surfaces) பரப்புகளில் டிஃபென்சின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அப்படியானால், பசு மூத்திரத்தைக் குடிப்பதைப் போலவே மனித மலத்தையும், மூத்திரத்தையும் உட்கொள்ளலாம் என்பது தான் சரியான எதிர்வாதமாக இருக்கும் அல்லவா?
இத்தகைய பழக்கங்கள் நவீன மருத்துவம் வளர்ச்சி அடைவதற்கு முந்தைய காலங்களில் உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் பல்வேறு இனக்குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றும் நவீன சமூகங்கள் வளர்ச்சி அடையாத பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. ஆகவே வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் பசு மூத்திரம் குடிப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்பது சரியான கருத்தைப் போலத் தோற்றமளிக்கும்.
உண்மையில் இது சரியானதுதானா?
பசு மூத்திரத்திலும் சரி, மனிதக் கழிவுகளிலும் சரி, ஆன்ட்டிமைக்ரோபியல் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால், நாம் அதிலிருக்கும் புரதங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு நோயாளரின் உடலில் என்ன விதமான பாக்டீரியல் தொற்று உருவாகி இருக்கிறது, அதற்கான எதிர் மருத்துவ ஆற்றல் மேற்கண்ட கழிவுகளில் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பிறகு சரியான பதத்தில் அவற்றை உள்ளெடுக்க வேண்டும் என்பதுதான் மருத்துவ விதி.
எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், நவீன மருத்துவத்தில் நாம் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னதாக இத்தகைய Anti Microbial Peptides களை தொழில்முறையில் உற்பத்தி செய்யத் துவங்கி அவற்றை patent செய்து மருந்துகளாக மாற்றி இருக்கிறோம். இன்றைய ஆன்ட்டி பயோடிக் மருந்து மாத்திரைகள் எல்லாம் மேற்கண்ட ஆன்ட்டிமைக்ரோபியல் புரதங்கள் தான்.
தனித்தனியாக ஒவ்வொரு நோய்த்தொற்றுக்கும் நவீன மனிதர்களாகிய நாம் தனித்தனியான மருந்துகளைக் கண்டறிந்து விட்டோம். ஆகவே, இனியும் பசு மூத்திரத்தையும், மனித மலத்தையும் உட்கொள்ள வேண்டிய எந்த மருத்துவ அவசியமும் நமக்கு இல்லை என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை.
பசு மூத்திரம் குறித்து 5 ஆய்வு அறிக்கைகள் இருக்கிறது என்கிற இயக்குனர் காமகோடியின் கூற்று உண்மையா?
100% உண்மை, அவர் குறிப்பிடுகிற 5 பன்னாட்டு ஆய்வறிக்கைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பசு மூத்திரத்தில் இருக்கும் மருத்துவப் பண்புகளைக் குறித்த நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகள் இணையத்திலேயே கிடைக்கிறது. தவிர, இந்துத்துவ இந்திய அரசு இதற்காகவே பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து கோமாதாவின் புகழ் பரப்ப பல்வேறு நிறுவன ரீதியிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பசுக்களுக்கு என்று அவசரகால ஊர்திவரை மோடி அரசு அக்கறை காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு “தாமிர பஸ்பம்” என்கிற ஒரு சித்த மருந்து குறித்த ஆய்வுக் கட்டுரையை மொழியாக்கம் செய்வதற்காகப் படித்த போது அது ஒரு Anti-ageing மருந்து என்பதும், ரசவாத வேதியியலில் உலோகங்களைத் தங்கமாக்கும் முயற்சியில் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் வியப்பான ஒன்றாக இருந்தது.
அதன் உண்மைத்தன்மை குறித்தும், அதில் புடம் போடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட மூலிகைத் தாவரங்களின் Mettalic Properties மற்றும் வேதிச் சமன்பாடுகள் குறித்த மிகப்பெரிய ஆய்வு நடந்து முடிந்தால் மட்டுமே அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் உண்மைத்தன்மை கொண்டவை தானா என்பதை உறுதி செய்ய முடியும்.
அதுபோலவே, ஹோமியோபதியின் “ஒத்ததை ஒத்தது குணமாக்கும்” என்கிற ஹானிமனின் தத்துவம் இன்றளவும் ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது, ஆனால், பிலாகிபோ என்கிற மருந்தே இல்லாத இனிப்புருண்டைகள் தத்துவம் குறிப்பிட்ட அளவில் வெற்றிகரமானதாக இருப்பதாக ஆய்வுகள் முடிவு செய்கிறது.
ஆகவே எதையாவது தின்று நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை மனித உடலில் குறிப்பிட்ட அளவு நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உதவுகிறது என்பதை நவீன மருத்துவம் ஒப்புக் கொள்கிறது. அந்த வரிசையில் பசு மூத்திரம், புலிப்பால், மனித மலம் என்று எதுவும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்ட மானுடக் குழுக்களின் மருத்துவ நம்பிக்கையாக இருப்பதில் நமக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை.
அவரவருக்கு ஏற்ற நம்பிக்கைக்குரிய கழிவுகளை தாராளமாக உட்கொள்ளலாம், பசு மூத்திரத்தைப் போலவே புலி மூத்திரம், சிங்க மூத்திரம், யானை மூத்திரம், பன்றி மூத்திரம் போன்றவற்றிலும் அரிதான ஆன்ட்டிமைக்ரோபியல் புரதங்கள் காணப்படுகிறது, இதுகுறித்த உலகம் முழுவதும் கிடைக்கிறது. நிற்க, அரசுகளும், கல்வி நிறுவனங்களும் நம்பிக்கையின் வழியில் கட்டமைக்கப்படுவதல்ல, மாறாக எத்தகைய நம்பிக்கைகள் மானுட சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும்.
எத்தகைய நம்பிக்கைகள் நவீன மருத்துவத்தின் அறிவியலுக்கு ஏற்றவை, முரண்பட்டவை என்பதை சட்டப்பூர்வமாக மாற்றி நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருக்கும் அரசும், கல்வி நிறுவனங்களும், அதன் தலைவர்களும் அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்படாத நம்பிக்கைகளைப் பொது வெளியில் பேசி மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலும், சிந்தனைப் போக்கிலும் குழப்பத்தை விளைவிக்கக் கூடாது.
பசுவின் மூத்திரத்தை விட எருமையின் மூத்திரத்தில் அதிக அளவிலான ஆன்ட்டிமைக்ரோபியல் புரதங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்பது ஒருபக்கம் மறைக்கப்படுகிறது. இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் என்கிற அமைப்பின் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் இயங்குகிறது இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையம் இங்குள்ள தொற்றுநோய்கள் பிரிவின் தலைவர் போஜ்ராஜ் சிங் என்பவர் தலைமையில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது.
இந்த ஆய்வில் பசு மூத்திரம் அல்லது 73 வகையான (மனித மூத்திரம் உட்பட) பிற இத்தகைய மாதிரி மூத்திர வகைகளில் 14 உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இ-கோலை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. பசு மூத்திரம் குடிப்பவர்கள், மனித மலம் தின்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனால், அதைப் பரப்புரை செய்வதும் பிறருக்குப் பரிந்துரை செய்வதும் சட்டப்படி குற்றம்.
தேசிய பானமாக அல்லது தேசிய மருந்தாக கோமியம் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.