• Home
  • அரசியல்
  • அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்குக் காரணம் அகங்காரம்..?

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்குக் காரணம் அகங்காரம்..?

Image

வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்

இந்தியாவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை பல மாநிலக் கட்சிகள் உணராமலே மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவுகின்றன. காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்தாலும் கடும் எதிரியாகக் கருதப்படுகிறது. அந்த பலவீனத்தை குறைவாக எடை போட்டு தன்னுடைய அகங்காரத்தாலே பதவியை இழந்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பஞ்சாப் ,ஹரியானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு கை நீட்டிய நேரத்தில் இந்தியா கூட்டணியின் முதுகில் குத்திய ஆம் ஆத்மி தனியே நின்றது. அதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டனிக்கு முன்வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 45.56% வாக்குகளும் ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன். வெறுமனே 1.99% வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தோல்வி கிடைத்துள்ளது.

அதாவது மொத்தம் 22 தொகுதிகளை பா.ஜ.க. கூடுதலாகப் பெற்றுள்ளது. அதில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள், இந்த வித்தியாசத்தை விட இரு மடங்கு என்பது குறிப்பிட்டத்தக்கது. இது தவிர்த்து இரு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் கிடைக்கும் அதிகப்படி வாக்குகளை கணக்கிலெடுத்து இருந்தால் கிட்டத்தட்ட 50 தொகுதிகள் வரை இந்த கூட்டணி பெற்றிருக்கும். இவையனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் நன்கு தெரியும்.

தோல்வி கிடைக்கும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்தும் அரசியல் காரணங்களுக்காக தனித்து நின்றது. இதை ஆம் ஆத்மி உணரவில்லை என்பது தான் ஆச்சர்யம். தன்னுடைய தலைமையின் மீது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருந்த குருட்டு தைரியமும், அகங்காரமும், அதிகாரப் போதையும் அவரை வீழ்த்திவிட்டது. இனி, முன்னிலும் மோசமாக வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேநேரம், காங்கிரஸ் கட்சி தன்னை பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இந்த வாக்குகள் போதவே போதாது, எனவே மக்களுக்கு நம்பிக்கை தரும் இளம் தலைவர்களை உருவாக்காவிட்டால் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வியே கிடைக்கும்.

Leave a Comment