• Home
  • காமம்
  • கன்னித் திரை கற்பனைகள்… கட்டுக்கதைகள்.

கன்னித் திரை கற்பனைகள்… கட்டுக்கதைகள்.

Image

பாலியல் பாடம்

திருமணம் ஆகும் வரை பெண்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைக்கும் ஆண்களுக்கு இருக்கிறது. கன்னித்தன்மையை கணவருக்குப் பரிசளிப்பதே பெண்மைக்கு அழகு என்று காலம் காலமாக பெண்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

திருமணமான புதுப் பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பதைப் பரிசோதிப்பதற்கு முதலிரவு அறையில் வெள்ளைத் துணி விரிக்கும் குடும்பங்கள் இன்றும் உள்ளன. அதேநேரம் ஆண்களுக்கு கன்னித்தன்மையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால் தான் இந்த சமூகம் எந்த ஆணிடமும், ‘நீ கன்னிப் பையனா?’ என்று கேட்பதே இல்லை.

உண்மையில் திருமண வாழ்க்கை ஒரு பெண்ணின் கன்னிப்படலம் கிழிவதில் தொடங்குவதும் இல்லை, முடிவதுமில்லை. ஒரு பெண்ணின் மதிப்பை கன்னித்திரையின் மூலம் அறிந்துகொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் காலங்காலமாக நம்பப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று கன்னித்திரை.

பெண்களின் ஹைமன் எனப்படும் கன்னித்திரை முதல் முறை கணவருடன் உறவில் ஈடுபடும் நேரத்தில் கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படும். அதுதான் வெர்ஜினிட்டி என்று காலம்காலமாக சொல்லப்படும் நம்பிக்கை உண்மை அல்ல. மருத்துவரீதியாக ஹைமன் என்பது, வஜைனாவை சுற்றியிருக்கும் மெம்ப்ரேன் நிறைந்த சவ்வு. பெண்களின் பிறப்புறுப்புக்கு மேல் இந்தச் சவ்வு மூடியிருக்கும் என்று பலர் தவறாக நம்புகிறார்கள். அப்படியிருந்தால் மாதவிடாய் வெளியே வராது என்ற அடிப்படை அறிவு கூட நிறைய பேருக்கு இருப்பதில்லை.

உண்மையில் இந்தச் சவ்வு பிறை சந்திரன் வடிவத்தைக் கொண்டுள்ளது. அது பலருக்கும் வெவ்வேறு தடிமன் கொண்டிருக்கலாம். இது ரப்பர் போன்று நெகிழ்வுத்தன்மை கொண்டதே தவிர கிழியக்கூடியது அல்ல. உடலுறவு, சைக்கிளிங், ஹைஜம்ப் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் நேரத்திலும் இந்த திசுக்கள் சிதைந்து சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்படலாம். எல்லா கன்னிப்பெண்ணுக்கும் ரத்தக்கசிவு நடக்கும் என்பது உறுதியல்ல.

ஏனென்றால் சிலருக்கு பிறக்கும்போதே இந்த சவ்வு இருக்காது. பாலியல் முதிர்ச்சி அடையும் நேரத்தில் பலருக்கு அது தானாகவே காணாமல் போவதுண்டு. உடற்பயிற்சி செய்யும்போதோ, முதல் சுய இன்பத்தில் அது சிதைந்திருக்கலாம். சில நேரங்களில் முதல் உடலுறவு வரை நீடித்திருக்கலாம். சிலருக்கு அதன் பிறகும்கூட அப்படியே இருக்கலாம்.

அதனால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களிடம், இரண்டு விரல் பரிசோதனை மற்றும் கன்னித்தன்மை பரிசோதனை மூலம் வன்முறையை உறுதிபடுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. கன்னித்திரை கிழிந்தோ சேர்ந்தோ இருப்பதை மட்டும் வைத்து இதில் முடிவெடுக்க முடியாது. ஆயினும் உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்ட பெண்களுக்கு ‘கன்னித் திரை’ மீட்பு எனப்படும் ஹைமனோபிளாஸ்டி என்பதை ஒரு பணம் பார்க்கும் அறுவைச் சிகிச்சையாகச் செய்து வருகிறார்கள்.

எனவே கன்னித்திரை என்பது கட்டுக்கதை என்பதை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஹைமன் சிதைவு எனப்படும் ரத்தக் கசிவு இயல்பாக நடக்கக்கூடியது என்பதால் அதற்கும் பெண் கன்னித் தன்மையுடன் இருக்கிறார் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது எந்த வயதிலும் பல்வேறு காரணங்களால் உடையலாம். குறிப்பாக செக்ஸ் டாய், வாட்டர் கன் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சுய இன்பம் காணும் பெண்களுக்கு சிதைவுக்கான வாய்ப்பு அதிகம். இதனால் அவருக்கு கன்னி தன்மை போய் விட்டது என்பது முட்டாள்தனமான நம்பிக்கை.

அதேபோன்று பெண்ணின் பிறப்புறுப்பு பெரிதாக இருப்பதும், நுழைவதற்கு சுலபமாக இருப்பதையும் கன்னித்தன்மையில் ஒன்றாக கணக்கெடுப்பதும் சரியாக இருப்பதில்லை. பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சி வசப்படுவதன் மூலம் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதேபோல் சிலருக்கு பிறப்பிலேயே உறுப்பு பெரிதாக இருப்பதுண்டு. எனவே, கன்னித்தன்மைக்கும் உருவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அதேபோல் முதல் உறவு நேரத்தில் பெண் வலியால் துடிக்க வேண்டும், கத்த வேண்டும் என்றெல்லாம் சில ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவும் தேவையில்லாத எதிர்பார்ப்பு. ஏனென்றெல் பெண்ணின் உணர்வு நிலை மற்றும் உடல்நிலையைப் பொறுத்தே இது அமையும். ஆனால், ஆண்கள் இப்படி எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டு, அதிக வலி இருப்பது போன்று பெண்கள் கத்துவதும் கலாட்டா செய்வதும் நடக்கிறது. உடனே ஆண்கள் மகிழ்ச்சி அடைந்து கன்னிப்பெண் என்று நம்புகிறார்கள். உண்மையில் உறவு நேரத்தில் எல்லா பெண்ணுக்கும் வலிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. வயது மற்றும் உணர்வு நிலை காரணமாக வலி ஏற்படுவதற்கு அவசியமின்றி போய்விடுகிறது.

முதல் தடவை உறவு கொள்ளும்போது பெண் உறுப்பு மிக இறுக்கமாக இருக்கும் என்பதும் ஆண்களின் எதிர்பார்ப்பு. ஒரு பெண் தன் உணர்வுகளால், செய்கைகளால் எந்த வயதிலும் இப்படியொரு இறுக்கத்தை ஆணுக்குக் கொடுத்துவிட முடியும். ஆகவே, இறுக்கத்துக்கும் கன்னித்தன்மைக்கும் தொடர்பு கிடையாது.

கற்பு என்பது ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பனை. மருத்துவ ரீதியாக நான்கில் ஒரு பெண்ணுக்கே முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை சிதைந்து ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இந்த கன்னித்திரை உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது.

ஆகவே, முதல் இரவு நேரத்தில் இன்பத்தை மட்டும் மனதில் எதிர்பாருங்கள். கன்னித்திரையை எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர்கள்.

Leave a Comment