• Home
  • மனம்
  • பெண்ணை மயக்கும் வசிய மை இருக்கிறதா..?

பெண்ணை மயக்கும் வசிய மை இருக்கிறதா..?

Image

ஆழ்மன ரகசியம்

இன்றும் சிலர் வசிய மை விற்பனை செய்கிறார்கள். அவர்களை தேடியும் நிறைய பேர் ஓடுகிறார்கள். ’நான் விரும்பிய பெண்ணை அடைய வேண்டும், முதலாளிக்கு என் மீது நம்பிக்கை வர வேண்டும்’ என்பதற்கெல்லாம் வசிய மை கேட்கிறார்கள்.

யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவரது தலைமுடி அல்லது உள்ளாடை வேண்டும் என்று ஜோதிடர் அல்லது மாந்திரீகர் கேட்பார். அவற்றை எரித்து, அந்த சாம்பலுடன் 21 மூலிகைகள் கலந்து வசிய மை செய்வதாகச் சொல்வார்கள். அந்த மையை, சம்பந்தப்பட்ட பெண்ணின் தலையில் தொடர்ந்து 3 நாட்கள் தடவினால், மையல் வந்துவிடும் என்பார்கள்.

இது, ஒரு சிலருக்கு சக்சஸ் ஆகிவிடும். எப்படி தெரியுமா..?

ஒரு பெண்ணின் தலைமுடி அல்லது உள்ளாடை வேண்டும் என்றால் அத்தனை எளிதில் திருடிவிட முடியாது. எனவே, அந்த பெண்ணுக்கு நெருக்கான தோழி அல்லது உறவுப் பெண்ணின் உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு அந்த ஆண் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே, இந்த செயலுக்கு ஒப்புக்கொள்வார்கள்.

அப்படி முடி அல்லது ஆடையை பெற்றவர், தோழி மூலமாகவே மையையும் தடவச் சொல்வார். இதுபோன்ற நேரங்களில் உதவி செய்யும் தோழிக்கு, அந்த வசிய மை மீது அதீத நம்பிக்கையும் ஆர்வமும் இருக்கும். எனவே, அந்த நேரங்களில் தோழியிடம் சம்பந்தப்பட்ட ஆண் பற்றி உயர்வாக பேசிக்கொண்டே இருப்பாள். பின்னர், அவளே ஆணை சந்திப்பதற்கு தோழிக்கு நேரம் குறித்தும் கொடுப்பாள்.

ஒரு பெண் கண்டுகொள்ளவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணின் பின்னே விரட்டி விரட்டி, அவள் காதலை பெறுவதற்குப் போராடும் ரக்கட் பாய்ஸ் எனப்படும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கவே செய்யும். எனவே, அந்த பெண் ஏதாவது ஒரு கட்டத்தில் மனம் மாறிவிடுவாள். உண்மையில் வசிய மையின் பங்கு என  எதுவும் இல்லை. அந்த தோழியின் செயலே வசிய மை போன்று செயல்படுகிறது.

சில ஜோதிடர்கள் பெண்ணின் உள்ளாடையில் வைத்து மந்திரிக்கப்பட்ட 5 ஏலக்காய் அல்லது மிளகு கொடுப்பார்கள். இதை எப்படியாவது, சம்பந்தப்பட்ட பெண் சுவைத்து விழுங்க வேண்டும் என்று நிபந்தனை போடுவார்கள். இதை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் தோழி அல்லது உறவுக்காரர்கள் உதவி தேவைப்படும். இப்படித்தான் வசிய மை விற்பனை ஜோராக நடந்துவருகிறது.

அலுவலக மேனேஜரின் மனதை மாற்றுவதற்கு வசிய மை வேண்டியதில்லை. வசிய மையைவிட அதிக வலிமையுடன் ஆழ்மன எண்ணம் வேலை செய்யும்.

தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு அல்லது அதிகாலை எழுந்ததும், மேனேஜரின் மனதை மாற்றுவதற்கு 10 நிமிடம் ஒதுக்குங்கள். முதலில் மேனேஜர் மீது உங்களுக்கு இருக்கும் வன்மம், கோபத்தை முழுமையாக வெளியேற்றுங்கள். அவர் மீது உங்களுக்கு அன்பும் மதிப்பும் வரவேண்டும்.

ஒருவர் மீது அன்பு வரவேண்டும் என்றால், அவருடைய நல்ல பக்கங்களை கவனிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருகிறார், ஓய்வின்றி உழைக்கிறார், ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை கவனிக்கிறார், கம்பெனியை வளர்க்கப் பாடுகிறார் என்பது போல் எதையேனும் கவனித்து, அதுகுறித்து வசிய நேரத்தில் பெருமைப்படுங்கள். இத்தனை சிறந்த நபர் என் மீதும் அக்கறை செலுத்த வேண்டும், நான் அவரது அன்புக்கு பாத்திரமாக வேண்டும் என்று மனதுக்குள் பல முறை சொல்லிக்கொள்ளுங்கள்.

நீங்கள் மேனேஜரைக் கண்டு எந்தெந்த விஷயங்களில் பிரமிப்பு அடைகிறீர்களோ, அதை உடன் வேலை செய்யும் நண்பர்களிடம் மனம் விட்டு பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களும் மேனேஜரை பற்றி நல்லவிதமாக சொல்லும் தகவல்களை மட்டும் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவு சிறப்பாக அமைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்.

நீங்கள் நிஜமாகவே மேனேஜர் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், அவரும் நிச்சயம் உங்கள் மீது அன்பு செலுத்தத் தொடங்குவார். அதுதான் ஆழ்மன ரகசியம். இது எப்படி சாத்தியமாகும் என்ற அவநம்பிக்கை வேண்டாம். அதேநேரம், ஒரே வாரத்தில் அல்லது ஒரே மாதத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிட வேண்டும் என்று எண்ண வேண்டாம். நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையுடனே செயல்படுங்கள்.

Leave a Comment