பா.ஜ.க. தலைவர் மாற்றம் என்னாச்சு
விரைவில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் வரப்போகிறார். அண்ணாமலைக்குப் பதிலாக ராஜாஜி பேரனை தலைவராக்கும் முயற்சி நடக்கிறது. அதன் பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகிவிடும் என்று பா.ஜ.க.வில் பலரும் குஷியாக இருக்கும் நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்திருக்கிறார் அண்ணாமலை.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால் சிறுபான்மை ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்றார். அப்படியெல்லாம் ஓட்டு வராது. ஐந்து முறை ஆட்சியில் இருந்த ஒரு கட்சி கூட்டணிக்கு வருவதை அண்ணாமலையால் தடுக்க முடியும் என்று நினைத்து என்னை பெரியவனாக ஆக்காதீர்கள்.
இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எங்கள் ஐடியாலஜிக்கு ஒப்புக்கொள்வார்களா என்பதைப் பார்க்க வேண்டும். அறநிலையத் துறை வேண்டாம் என்கிறோம். கூட்டணி ஆட்சி வேண்டும் என்கிறோம். எப்படியும் சிறுபான்மை ஓட்டு வராது என்ற தெளிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க வேண்டும்’’ என்று நேரடியாகவே மறுபடியும் எடப்பாடி பழனிசாமி மீகு தாக்குதல் தொடுத்துள்ளார்.
அண்ணாமலை பேசுவதைப் பார்த்தால் வரும் 2026ம் ஆண்டும் அவரே கட்சித் தலைவராக நீடிக்கப் போகிறாரோ என்றே தோன்றுகிறது. அதோடு அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி இல்லை என்பதும் உறுதியாகிறது என்று பா.ஜ.க.வினர் பதறுகிறார்கள்.