சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க..?

Image

வாயைத் திறந்து சிரிங்க

நகைச்சுவை உணர்வு மனிதகுலத்துக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு. எந்த ஓர் உயிரினமும் சிரிப்பதில்லை, சிரிப்பதற்காக மெனக்கெடுவதும் இல்லை. மனிதனுக்குரிய தனிச்சிறப்பை மறந்து பலரும், விலங்கினங்கள் போன்று உம்மென்று நடந்துகொள்வதுதான் வேடிக்கை. சிரித்தாலே தன்னுடைய மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடும் என்று எண்ணும் நபர்கள் ஏராளம். சிரிக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையே இல்லை என்பதுதான் உண்மை. சிரிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அதனை வீணாக்குபவன் மனிதனே இல்லை.

சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கவும், விமர்சனம் செய்யவும் சிலர்  தயங்குவதில்லை. எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லைஎன சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுவார்கள்.

 நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல .  ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டு உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வே இல்லாமல் போனால் அது பிழைப்புக்காக குரங்காட்டி வித்தை செய்பவரைப் போலவோ, மேடையில் கோமாளி வேஷம் போடுபவரைப் போலவோ ஆகிப் போகும்.

அதேபோன்று நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப் படுத்துமளவுக்கு கிண்டல் செய்வது அல்ல. அது குரூர நகைச்சுவை. அதை விட்டு விடுங்கள். நகைச்சுவையில் அந்த நபரும் இணைந்து சிரிப்பதே முழுமையான நகைச்சுவை .

நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான விஷயமாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.

அலுவலகங்களில் பிறரோடு இணைந்து பணிசெய்வதே வெற்றிபெறுவதன் முதல் தேவை. அத்தகைய மனநிலையைத் தருவதற்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே கை கொடுக்கிறது.  இயல்பாய் எல்லோருடனும் சிரித்து அன்னியோன்யமாய் வேலை பார்ப்பவனை அலுவலகத்துக்குப் பிடித்துப் போவதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அதற்கான காரணம் உலகமயமாதலாகவும் இருக்கலாம், அல்லது குழாயடிச் சண்டையாகவும் இருக்கலாம். காரணம் முக்கியமில்லை. ஆனால் மன அழுத்தம் மட்டும் வந்து விட்டால் வாழ்க்கை அதோ கதி தான். உடலும் பணால் ! உள்ளமும் பணால் ! அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.

அதனால் தான் மகாத்மா காந்தி,  ’எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்’ என்று சொன்னார். ரொம்பவே உண்மையான வார்த்தை.  இன்றைக்கு தற்கொலைப் பட்டியல்களை புரட்டிப் பார்த்தால் வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகாமையும் ஒரு முக்கியமான காரணமாய் நம் கண்ணுக்கு முன்னால் விரிகிறதா இல்லையா ?

மனித மூளையின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் சிரிப்பு ரொம்பவே முக்கியம். லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ‘நன்றாக சிரித்து வாழும் மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாகவும், கற்றுக் கொள்ளும் தன்மையிலும் இருக்கும்’  என்று தெரியவந்தது. அது நகைச்சுவை கேட்பதோ, படிப்பதோ, பார்ப்பதோ என எந்த ஒரு வகையிலும் இருக்கலாம். அதனால் தான் மேலை நாடுகளில் மருத்துவர்கள், ‘நல்ல நகைச்சுவை படம் போட்டு அரை மணி நேரம் சிரிங்க’ என்றெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுகிறார்கள்.

உங்களுடைய கோபத்தையோ, உங்கள் மீது வேறொரு நபருக்கு இருக்கும் கோபத்தையோ அழிக்க நகைச்சுவை உணர்வைப் போல சிறந்த ஒரு ஆயுதம் இருக்கவே முடியாது. அது உங்களுடைய நட்பு வட்டாரத்தை இதன் மூலம் ரொம்ப உற்சாகமாய் இயங்கவும் வைக்கும் இல்லையா ?

வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவதில்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவதில்லை. வாழ்க்கை கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்.

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். வாழ்க்கை அழுவதற்கானதல்ல. அழுதாலும், சிரித்தாலும் கடிகாரம் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நாட்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால், காலை எழுந்ததும் இன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருப்பேன் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளுங்கள்.

சிரிப்பதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லையே, நல்லா சிரிங்க சார்.

Leave a Comment