மனநலனுக்கு ஆபத்து
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடப்பது சகஜம் தான். ஆனால், இந்த சண்டை ஒரு சில வீடுகளில் எல்லை மீறி, கைகலப்பு வரை போகிறது. அடிதடி, அழுகையைக் காணும் குழந்தைகளின் மனம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறார்கள் மர்த்துவர்கள்.
பெற்றோர் போடும் சண்டையால் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுகிறது. இதனால் தூக்கமின்மை, அச்சம், பதட்டம் போன்றவற்றுடன் தாழ்வு மனப்பான்மைக்கும் ஆளாகிறார்கள். பெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சத்தில் வீழ்கிறது.
பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைக்கின்றன. வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல், தாயும் தந்தையும் பிரிந்துவிடுவார்களோ, அடிப்பார்களோ என்று தேவையற்ற எண்ணம் மனதை ஆட்டிப் படைக்கும். இந்த நிலையில், குழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால், அதன் அறிவாற்றல் செயல்திறன் குறைகிறது. அதனால், பெரியவர் கோபதாபங்கள், பிள்ளைகளைப் பாதிக்காமல் இருப்பதற்கு பெற்றோர்கள் கீழ்க்கண்டவற்றை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்.
* ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் பரந்த மனப்பான்மை வேண்டும்.
* தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* பிள்ளைகளின் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துமளவுக்கு நடந்துகொள்ள வேண்டும்.
* ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்ள வேண்டாம்.
* ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனமாய் இருத்தல் வேண்டும்.
* முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேச வேண்டும்.
* தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம்.
* முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிட வேண்டும்.
பெற்றோர்கள் இவற்றை கடைப்பிடித்தால், குழந்தைகள் சிறந்த சமூக ஆற்றல்களையும் சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பையும், பெற்றோருடன் சிறந்த உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.பள்ளியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.