என்ன செய்தார் சைதை துரைசாமி – 237
பெருநகர சென்னை நகர் முழுக்கவே காங்கிரீட் சாலைகள் போடுவதற்கு மேயர் சைதை துரைசாமி விரும்பினாலும், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எதிர்ப்பு வந்த காரணத்தால் முதலில் காங்கிரீட் சாலையை அமைத்து மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதன் நன்மைகளை உணர வைக்கவேண்டும் என்று திட்டமிட்டார்.
மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டபடி சென்னை மாநகரில் இரண்டு இடங்களில் அதிநவீன கான்கிரீட் சாலை உருவாக்கப்பட்டன. சர்தார் படேல் சாலை சந்திப்பில் இருந்து, வேளச்சேரி சாலை நீச்சல் குளம் வரை ஒரு சாலையும், அண்ணா சாலையிலிருந்து அதாவது நந்தனம் வீட்டுவசதி வாரிய கட்டிட எதிர்ப்புறம் சி.ஐ.டி.நகர் லிங்க் சாலை வழியாக ரவுண்டானா வரை அடுத்த ஒன்றும் காங்கிரிட் சாலையாக மாற்றப்பட்டது.
இதனால் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகவும் எளிதாக மாறியது. அதுமட்டுமின்றி சாலை பயணம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் மாறுவதற்கு காங்கிரீட் சாலைகள் பெரும் உதவியாக இருந்தன. மழை போன்ற காரணங்களால் சேதம் அடையும் வாய்ப்பும் மிகவும் குறைந்துபோனது.
காங்கிரீட் சாலையின் சிறப்புக்கு உதாரணமாக ஹாரிங்டன் சாலையை உருவாக்கிக் காட்டினார் மேயர் சைதை துரைசாமி. அதிநவீன நடைபாதை, சைக்கிள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் வதியான வழி போன்றவை துல்லியமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும் கிரானைட் மத்திய தடுப்பான்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் கண்ணுக்கு குளிர்ச்சியான அழகுச் செடிகள் வளர்க்கப்பட்டன. இந்த செடிகளை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்கும்வகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள் மத்திய தடுப்புக்கு மேல் அமைக்கப்பட்டன.
வெளிநாடுகளுக்கு இணையாக ஹாரிங்டன் சாலையின் அமைப்பு மற்றும் வசதிகளின் சிறப்பு சென்னை முழுக்கவே பரவியது. இதன் அழகையும் வசதியையும் காண்பதற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். இந்த சாலை குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்து அவரும் பாராட்டு தெரிவித்தார்.
- நாளை பார்க்கலாம்.