• Home
  • யாக்கை
  • யாரெல்லாம் 8 போட்டு நடக்கக்கூடாதுன்னு தெரியுமா?

யாரெல்லாம் 8 போட்டு நடக்கக்கூடாதுன்னு தெரியுமா?

Image

மருத்துவ விளக்கம்

மரத்தின் கீழே உதிர்ந்துகிடந்த இலைகளை கைகளில் எடுத்து தடவிக்கொடுத்தார் ஞானகுரு. அப்போது வந்து சேர்ந்த மகேந்திரன், ‘சாதாரண நடைபயிற்சி செய்வதைவிட, 8 போட்டு நடப்பது மிகவும் உற்சாகம் தருகிறது. இதை ஏன் நீங்கள் கற்றுத்தருவதில்லை?’ என்று கேட்டார்.

‘எதற்காக எட்டு போட்டு நடக்க வேண்டும்..?’ சந்தேகம் கேட்டார் ஞானகுரு.

‘’அட, உங்களுக்கு எதுவு இது தெரியாதா? இதுதான் சித்தர்கள் காட்டிய வழியாம். இந்த பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின்
மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.  அப்படி நடக்கும்போது மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழும் வகையில் அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.  முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் ரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

தினமும் இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.. உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடும். அதனால்தான் 8 போட்டு நடப்பது இப்போது பிரபலமாகி வருகிறது’’ என்று சொல்லி முடித்தார் மகேந்திரன்.

‘’அடேங்கப்பா… சர்வரோக நிவாரணியாக இருக்கிறதே… நீ சொல்வதைப் பார்த்தால், எல்லா மருத்துவமனைகளையும் இழுத்து மூடிவிட்டு, அங்கெல்லாம் மனிதர்களை 8 போட்டு, நடக்கவிட்டால் போதும்’’ என்று சிரித்தார்.

‘’சும்மாவா சொல்லுவாங்க… நிஜமாவே நிறைய பேருக்கு பலன் கிடைச்சிருக்கு..’’

‘’அதுசரி, உனக்கு பலன் கிடைத்ததா..? இது எந்த சித்தர் சொன்ன தத்துவமாம்..?’’

‘’எந்த சித்தர் சொன்னது என்று தெரியவில்லை. எனக்கு இப்போது புத்துணர்ச்சி கிடைத்துள்ளது என்பது மட்டும் நிஜம். மற்ற நோய்களும் விரைவில் குணமாகிவிடும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’முன்னோர் சொன்னது என்றாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளாதே. மனிதனின் கால்கள் நேராக நடப்பதற்கும், ஓடுவதற்கும் ஏற்ப படைக்கப்பட்டுள்ளன. எனவே, அதில் தேவையற்ற குழப்பத்தை உருவாக்காதே.

நீ எட்டு போட்டு நடந்தால், நிச்சயம் உன்னுடைய முழங்கால் ஜவ்வுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். எலும்பு மருத்துவர் ஒருவரிடம் இதனை கேட்டு உறுதிப்படுத்திக் கொள். யார் என்ன சொன்னாலும், அப்படியே ஏற்றுக்கொள்வதை விடு. நேராக நடந்து வீட்டுக்குச் செல்” என்று உத்தரவு போட்டார் ஞானகுரு.

உறைந்து நின்றார் மகேந்திரன்.

Leave a Comment