சாலைப் பணிகளில் இண்டிகேட்டர் கருவி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 224

பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் போடப்படும் சாலைகள் ஐந்தடுக்குப் பரிசோதனை செய்யப்பட வேண்டும், அந்த பரிசோதனைகள் அனைத்தும் ஆவணமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த திட்டம் புரட்சிகரமானது என்றே சொல்ல வேண்டும். தொழில்நுட்பத்தை மிகச்சரியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். இதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு கொஞ்சம் இடம் கொடுக்காமல் உறுதி காட்டி, நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

சாலையில் போடப்படும் தார்க்கலவையின் அடர்த்தியைக் கண்காணிப்பதற்கு சரியான கருவிகள் மாநகராட்சியில் இல்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. தார்க்கலவையின் அடர்த்தியைப் பொறுத்தே சாலையின் உறுதி இருக்கும். ஆகவே, இதனை சரியான தொழில்நுட்பத்தின் மூலம் அறிந்துகொள்வது முக்கியம் என்று கருதினார்.

ஆகவே, தார்க்கலவையின் அடர்த்தியைக் கண்காணிக்கும் குவாலிட்டி பேவ்மென்ட் இன்டிகேட்டர் என்ற கருவி முதன்முறையாக கொள்முதல் செய்யப்பட்டு 15 மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டன. இதற்கெல்லாம் கருவி வாங்க வேண்டுமா, இத்தனை காலமாக கண்களால் பார்த்தே தார்க்கலவையின் தரத்தைச் சொல்லிவிடுவோம் என்றும், தேவையில்லாத வெட்டிச் செலவு என்றும் சிலர் இதனை குறை சொன்னார்கள்.

ஆனால், விஞ்ஞான தொழில்நுட்பத்தை நாம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த கருவியின் மூலம் பதிவு செய்யும்போது அது ஆவணமாகவும் மாறிவிடும். தார்க்கலவையில் தவறு செய்வதற்கு ஒப்பந்ததாரகள் அஞ்சுவார்கள் என்று கூறி, இதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இதன் காரணமாகவே, மேயர் சைதை துரைசாமி காலத்தில் போடப்பட்ட சாலைகள் காலங்களைக் கடந்தும் உறுதியுடன் நின்றன. சென்னையில் பேய் மழை பொழிந்த 2015ம் ஆண்டு சாலைகளில் பெரிய அளவுக்கு சேதாரம் ஏற்படாமல் போனதற்கும், இந்தத் தரமே காரணம் என்றும் சொல்லலாம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment