கடந்துவந்த பயணம்
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால், இளம் வயதில் யாரும் செய்யமுடியாத ஒரு சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார் குகேஷ்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை 7.5 – 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார சாதனையை படைத்திருக்கிறார். இந்த போட்டியில் யார் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ.. அவர்களே வெற்றியாளராகக் கருதப்படுவார்கள்.
13 சுற்றுகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்று மற்ற போட்டிகள் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் 14வது சுற்றுப் போட்டியில் களம் இறங்கினார்கள். சீனாவின் டிங் லிரன் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நிலையில், குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் போட்டியிட்டார். இந்த போட்டி டிராவில் முடியும் என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால், 55வது நகர்த்தலில் டிங் லிரன் ஒரு மேஜர் தவறை செய்தார். அவரது ரூக், அதாவது யானை F4இல் இருந்த நிலையில், அதை F2க்கு நகர்த்தினார். இதுதான் அவர் செய்த ஒரே தவறு. உடனே குகேஷ் பி2ல் இருந்த தனது யானைக் காய் மூலம் லிரனின் யானை காயைத் தூக்கினார். தொடர்ந்து ஜி1ல் இருந்த தனது ராஜா மூலம் குகேஷின் யானையை லிரன் வெட்டினார். அடுத்து குகேஷ் தனது பிஷப் (மந்திரி) காய் மூலம் செக் வைத்தார். அதில் இருந்து தப்ப லிரன் தனது பிஷப் காயை இழக்க வேண்டி இருந்தது.
கடைசியில் லிரனுக்கு ராஜாவும், ஒரு சிப்பாயும் இருந்தது. அதேநேரம் குகேஷுக்கு ராஜாவும், இரண்டு சிப்பாயும் இருந்தது. தொடர்ந்து ஓரிரு நகர்த்தல் மட்டும் இருந்த நிலையில், லிரன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்த போட்டியை உலகெங்கும் பலரும் பார்த்து வந்த நிலையில், அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் லிரன் தனது ரூக்கை தவறாக நகர்த்திவிட்டார். அந்த ஒரு நகர்த்தலையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி குகேஷ் சரித்திரம் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த போட்டி குறித்து விஸ்வநாதன் ஆனந்த், ‘’இதுவொரு பெருமையான தருணம், இந்தியாவிற்கு பெருமையான தருணம், வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமிக்கு (WACA) ஒரு பெருமையான தருணம், தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பெருமையின் தருணம். டிங்கும் மிகவும் பரபரப்பான ஆட்டத்தைத் திறம்பட விளையாடினார். 5 நிமிடத்திற்கு முன்பு வரை குகேஷ் வெல்வாரா என்று சந்தேகம் இருந்தது. டிராவில் முடியும் என்றே நம்பினேன்’’ என்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வெற்றி குறித்து குகேஷ், ‘’இரண்டு வருட தீவிர பயிற்சிக்குப் பின் கிடைத்த வெற்றி இது. இந்தப் போட்டிக்கு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இந்தியாவிடம் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டேன். உலக சாம்பியன் ஆனது பெரு மகிழ்ச்சி. லிரேன் தோல்வி அடைந்ததற்காக வருத்தப்படுகிறேன். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்பணிக்கிறேன்’’ என்று கூறிய குகேஷ் தந்தையைக் கட்டிபிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவரது வெற்றிப் பயணம் திட்டமிட்டு தொடங்கப்படவில்லை என்பது தான் ஆச்சர்யம். காது, தொண்டை மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை மருத்துவரான தந்தை ரஜினிகாந்த், குகேஷ்-ஐ பள்ளிக்குச் சென்று அழைத்து வர தாமதமாகுவது வழக்கம். அதனால் தந்தையின் வரவுக்காக காத்திருக்க வேண்டாம் என்று நினைத்து, 7வது வயதில் குகேஷை செஸ் கிளாஸில் சேர்த்துள்ளனர்.
வாரத்திற்கு 3 நாட்கள், அதுவும் ஒரு மணி நேரம் தான் செஸ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிரு மாதங்களிலேயே செஸ்-ல் அதிரி புதிரியாக வளர்ந்த குகேஷ்-ன் திறமையை அவரது ஆசிரியர்கள் வியந்துள்ளனர். இதன்பின் வெளியில் போட்டிகளுக்கு அனுப்பப்பட, அங்கும் குகேஷ் தனது அடையாளத்தை நிலைநாட்டி வந்துள்ளார்.
தொடர்ந்து 9 வயதிற்குள்ளான ஏசியன் ஸ்கூல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் வெற்றிபெற, 2018ஆம் ஆண்டு யு12 இளைஞர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 5 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். 12 வயது, 7 மாதங்கள், 17 நாட்களிலேயே 3வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதன்பின் குகேஷ் பங்கேற்ற அனைத்திலும் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் செஸ் ஒலிம்பியாட் வென்ற இந்திய அணியிலும் குகேஷ் இடம்பிடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக FIDEவின் ரேட்டிங்கில் விஸ்வநாதன் ஆனந்தின் புள்ளிகளை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்தியர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதற்கு முன்பாக விஸ்வநாதன் ஆனந்த 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய 4 ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இதன்பின் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய வீரர் ஒருவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார்.
குகேஷின் வெற்றி இன்னும் நிறைய நிறைய சாம்பியன்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.