டங்ஸ்டன் சுரங்கத்தில் இப்படியொரு திருப்பமா..?

எடப்பாடி பழனிசாமி திடுக் ஆதாரம்

நான் முதலமைச்சராக இருக்கும் வரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசி தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு அ.தி.மு.க.வினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த கனிமவளத் திட்டத்துக்கு அ.தி.மு.க. அரசு தான் ஆதரவு குடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

தம்பிதுரை இந்த விவகாரத்தில், ‘நான் கனிமவள சட்டத்தை ஆதரித்தேன் என்றாலும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பேசியிருந்தார். இந்த நேரத்தில், ‘டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மத்திய அரசுக்கு ஸ்டாலின் அரசு எழுதிய கடிதங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் அதற்கு தி.மு.க.வினர், ‘’நாடு முழுக்க 107 இடங்களில் அரிய கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 19 இடங்களை மட்டும் தான் மாநில அரசுகள் ஏலம் விட்டுள்ளன. எனவே இதனை விரைவுபடுத்தவே ஒன்றிய அரசுக்கு மட்டுமேயான ஏல உரிமையை இச்சட்டம் வழங்குகிறது. சுருக்கமாக, அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், நாங்களே ஏலம் விடுகிறோம். இது தான் ஒன்றிய அரசின் திருத்தம். இந்த சட்டத்தை தான் அதிமுக ஆதரித்தது. இதன் அடிப்படையில் தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது’’ என்று கடுமையாக தாக்கினார்கள்.

இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க கோரியுள்ளாரே தவிர, நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு தடை கேட்டோ அல்லது டங்ஸ்டன் சுரங்கத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றோ அவர் கோரவில்லை’’ என்று ஒரு அணுகுண்டு போட்டிருக்கிறார்.

இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்..?

Leave a Comment