சிம்பிளா மூணு அம்மா வைத்தியம்

Image

உயரத்துக்கு சோயா… கொழுப்புக்கு மிளகு

அந்தக் கால அம்மாக்கள் உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்திய மூன்று சிம்பிள் மருத்துவம் தெரிந்துகொள்வோம். இவை, என்றென்றும் எல்லோருக்கும் அவசரத்துக்குக் கை கொடுக்ககூடியவை.   

கொழுப்பு

கடந்த நூற்றாண்டு வரையிலும் மக்களுக்கு கொழுப்பு உடலில் அதிகம் சேர்ந்தது இல்லை. இதற்கு காரணம், தமிழர்களின் அஞ்சறைப் பெட்டியில் மிளகுக்கு முக்கிய இடம் இருந்தது. உணவுக்கு சுவையும் நறுமணமும் கூட்டுவதற்கு பயன்படும் மிளகு, மருந்தாகவும் செயலாற்றுகிறது. உணவில் ஏதேனும் நச்சுப்பொருட்கள் கலந்திருந்தால், அதனை அகற்றும் தன்மை மிளகுக்கு உண்டு என்பதால்தான், பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

மிளகு வெப்ப மண்டல பயிர் என்பதால் தென்னிந்தியாவில் அமோகமாக விளைகிறது. வால் மிளகு, மிளகு என இரண்டு வகையான மிளகு காணப்படுகின்றன. மிளகு கொடியில் விளையும் சிறு பழங்கள் பறித்து, உலரவைத்து பதப்படுத்தப்படுகிறது. அதிக பயன்பாட்டில் கருப்பு மிளகு இருந்தாலும் பதப்படுத்தும் தன்மைக்கேற்ப வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என மாற்றம் பெறுகிறது. வெளிநாடுகளில் அதிக மதிப்புமிக்க வாசனைப்பொருள் என்பதால் கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது.

வைட்டமின் ஏ, சி, கே, கரோட்டின், தயாமின் போன்ற வைட்டமின்கள் மிளகில் நிரம்பியிருக்கின்றன. இதுதவிர கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற தாத்து உப்புக்களும் மிளகில் உள்ளன. மிளகில் நார்ச்சத்தும் நிரம்பியுள்ளது.

  • மிளகில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • மிளகில் இருக்கும் பெப்பரின் பசியைத் தூண்டுவதுடன் ஜீரணத் தன்மையையும் அதிகரிக்கிறது.
  • வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பம் தரும் தன்மை மிளகுக்கு உண்டு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை நீக்குகிறது. மேலும் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
  • உடலில் ஏற்படும் வெண்புள்ளிகளை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால், மிளகு அரைத்துப்போடுவது சிறந்த முறையில் பயன் தருகிறது.
  • இருமல், சளி உள்ளவர்கள் மிளகு சாப்பிட்டுவர விரைவில் குணம் தெரியும்.
  • உடல் கொழுப்பை குறைக்கும் தன்மையும் மிளகுக்கு உண்டு என்பதால் உடல் எடை குறைவதற்கும் காரணமாகிறது மிளகு.

ஒட்டுமொத்தமாக உடல் நலனுக்கு மிளகு மிகுந்த பயன் தரக்கூடியது என்றாலும், வயிற்றில் புண் உள்ளவர்கள் இதனை மிகவும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

வெந்நீர்

அஜீரணம் என்றாலே அம்மா தரும் மருந்து என்பது வெந்நீர். வெறுமனே வெநீரைக் கொதிக்க வைத்து அதில் சீரகம் அல்லது ஓமம் அல்லது வெந்தயம் போட்டுக் கொடுப்பார்கள். கொஞ்ச நேரத்தில் அஜீரண தொந்தரவில் இருந்து விடுபட முடியும்.  

வெந்நீர் மருத்துவம் சித்தர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. தண்ணீர் மூலம் பரவும் காலரா, டைபாய்டு, ஹெபபடைடிஸ் போன்ற நோய்களை உருவாக்கும் கிருமிகளை தடுக்கிறது. காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்படும் நேரத்தில் மட்டும் வெந்நீர் குடிப்பது சிலரது வழக்கம். எல்லா நேரமும் வெந்நீர் குடிப்பதற்கு விருப்பமில்லை என்றாலும் காலை எழுந்தவுடன் மட்டுமாவது வெந்நீர் குடிக்கலாம். வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகளை பார்க்கலாம்.

  • காலையில் வெந்நீர் அருந்துபவர்களுக்கு செரிமான மண்டலம் சிறப்பாக பணியாற்றும். அதனால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் மிகச்சிறந்த மருந்து.
  • வயிற்றுவலி, உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கும் வெந்நீர் சிறந்த வகையில் உதவுகிறது.
  • வெந்நீர் அருந்துவதால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, ரத்தவோட்டம் சுறுசுறுப்படைகிறது. மேலும் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்துபோகிறது. இதனால் உடல் செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கிறது.
  • உடலில் தேங்கியிருக்கும் நஞ்சுகள் அகற்றப்பட்டு, மெட்டபாலிசம் அதிகரித்து உடல் சிறப்பான முறையில் இயங்கவும் வெந்நீர் உதவுகிறது.
  • தினமும் வெந்நீர் குடிப்பவர்களுக்கு தோல் பளபளப்படையும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் வெந்நீர் பருகிவந்தால் சீக்கிரமே பலன் கிடைக்கும். சாப்பிடுவதற்கு முன்பு வெந்நீர் குடித்தால் பசி மட்டுப்படும் என்பதால் குறைவாக சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியும்.
  • வெந்நீரில் உப்பு போட்டு கரைத்து தொண்டையில் படுமாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொற்று, டான்சில் தொந்தரவு போன்றவைகளில் இருந்து ஆறுதல் கிடைக்கும்.
  • கால் பாதங்கள் வலிக்கும்போது வாளி அல்லது பாத்திரத்தில் வெந்நீரும் உப்பும் போட்டு ஊறவைத்தால், கால் வலி காணாமல் போய்விடும்.

சுத்திகரிப்பு செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர், நல்ல நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலும், தண்ணீரை காய்ச்சிக் குடிப்பது மட்டும்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது.

சோயா

சின்னக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றுப்பொருளாக சோயா பீன்ஸ் விளங்குவதில் இருந்தே, இதன் மருத்துவ மகிமையை உணரலாம். சீனாவில் சோயா உணவாகவும் மருந்தாகவும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அத்தியாவசியம்.

குறிப்பாக அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும், புதிய திசுக்களை கட்டமைக்கவும் புரதம் தேவைப்படுகிறது. வேறு எந்த பருப்பு, பயிறு வகைகளை விடவும் சோயா பீன்ஸில் அதிக அளவு புரதம் நிரம்பியிருக்கிறது. இதுதவிர தயாமின், நியாசின், ரைபோஃப்ளவின்,  கொழுப்பு, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன.

  • பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதற்கு சோயா பீன்ஸ் உதவி செய்வதால், இதனை பெண்களுக்கான சிறந்த உணவு என்று சொல்லமுடியும்.
  • மெனோபஸ் நேரங்களில் பெண்களின் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது சோயா. மேலும் மெனோபஸ் காலத்தில் பெண்களை தாக்கும் எலும்பு நோய்களில் இருந்தும் விடுதலை தருகிறதுசோயா.
  • கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிரம்பியிருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.
  • சோயாவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல். அளவை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் ஹெச்.டி.எல். அளவை கூட்டவும் செய்கிறது சோயா.
  • கார்போ ஹைட்ரேட் சோயாவில் குறைவாக இருப்பதால், எடை குறைய விரும்புபவர்களுக்கு விருப்ப உணவாக இருக்கிறது.
  • குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சோயா தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தால், அவர்கள் உயரம், எடை கூடுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
  • கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் சோயாவில் இருப்பதால் பற்கள் எலும்புகள் உறுதி அடைகின்றன.
  • யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் தன்மை சோயாவுக்கு இருப்பதால் மூட்டு வலியை கட்டுப்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு அதிகம் உதவி செய்கிறது என்பதால், ஆண்கள் அதிக அளவு சோயாவை எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் சோயாவை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும்.

Leave a Comment