• Home
  • சர்ச்சை
  • இளையராஜா அண்ணன் பாவலரை கம்யூனிஸ்ட் கட்சி கொலை செய்ததா..?

இளையராஜா அண்ணன் பாவலரை கம்யூனிஸ்ட் கட்சி கொலை செய்ததா..?

Image

உண்மையில் நடந்தது என்ன..?

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அடித்து கொலை செய்யப்பட்டது போன்று பேசியிருந்தார். இந்த விவகாரம் படு வைரலாகியிருக்கும் நிலையில், உண்மையில் நடந்தது என்னவென்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் உ.வாசுகி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், ‘’பாவலர் வரதராஜன் அற்புதமாக இசைக்கலைஞர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்தந்த நேரத்துக்கு ஏற்ப அரசியல் சூழலை மனதில் வைத்து பாடல்கள் புனையக்கூடியவர். அவருடைய பாடல்களுக்கு கம்யூனிச மேடைகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.

அவர் திருச்சிக்கு வந்தால் எங்கள் வீட்டில் தான் தங்குவார். கம்யூனிஸ்ட் கட்சியில் யாருக்கும் ஹோடலில் தங்குவதற்கு இடம் பிடித்துக் கொடுப்பது பழக்கத்தில் இல்லை. இந்த நிலையில் அவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. ஒரு சிறந்த கலைஞர் என்பதால் அவரை அதிலிருந்து மீட்பதற்கு நீண்ட காலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அவர் திருந்தவில்லை என்பதால் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உதவி செய்யவில்லை என்று கங்கை அமரன் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் கட்சி நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு அல்லது அரசை எதிர்த்துப் போராடியதற்காக கைது செய்யப்படவில்லை என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு உதவி செய்யவில்லை. இதையடுத்து மதுரை முத்து அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார்.

அதன் பிறகு குடிக்கு சிகிச்சை எடுத்துத் திருந்திவிட்டார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டுத் தாக்கினார்கள், அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்றெல்லாம் தொகுப்பாளரும் கங்கை அமரனும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், இது எந்த வகையிலும் உண்மை இல்லை.

அதன் பிறகும் அவர் குடித்துவிட்டு கீழே விழுந்து அடிபட்டே மருத்துவமனைக்குப் போகிறார். அப்போது அவரை பார்த்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஐ.மாயாண்டி பாரதியிடம், ‘நான் தவறு செய்துவிட்டேன். குடிக்காமல் கட்சியில் இருந்திருக்க வேண்டும். எப்படியென்றாலும் நான் இறந்தால் எனக்கு செங்கொடி மரியாதை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு அப்படி மரியாதை செய்ய இயலாது என்ற காரணத்தால் அது மறுக்கப்பட்டது.

அதன் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் கங்கை அமரனும் இளையராஜாவும் தொடர்பில் இருந்தார்கள். குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டு நிறைய மேடைகளில் இசைக் கச்சேரி செய்திருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மை. இளையராஜா வளர்ந்த பிறகு கட்சிக்கு நிதியுதவி செய்திருக்கிறார். ஆனால், இப்போது எதற்காக தேவையில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொலைப்பழி போடுகிறார் என்பது புரியவில்லை. அவர் தான் விளக்க வேண்டும்’’ என்று நடந்த சம்பவம் குறித்து பேசியிருக்கிறார்.

பாவலர், இளையராஜா, கங்கை அமரன் போன்றவர்கள் கம்யூனிஸ்டுகள் முதுகில் குத்தியவர்கள். ஆனாலும் அவர்களை ஓரு போதும் கம்யூனிஸ்டுகள் குத்த மாட்டோம். கம்யூனிஸ்டுகள் இந்த மண்ணில் மக்களுக்கு சிந்திய இரத்தம் அளவுக்கு 10 சதவீதம் வேற எந்த கட்சிகளும் சிந்தியது இல்லை என்று தோழர்கள் கண் சிவக்கிறார்கள்.

Leave a Comment