புத்தகம் அறிவோம்
சைவ உணவு சாப்பிடுவது நாகரிகமாகவும், அசைவம் சாப்பிடுவது கொடுமையான செயலாகவும் இப்போது சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. மிருகங்களை பாதுகாப்பதற்காக பீட்டா போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி தீவிரமாகப் பணியாற்றுகின்றன. மாடு, நாய், கிளி போன்றவைகளை பாதுகாக்க போராடுகிறார்கள். சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் அசைவத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

உயிர்களை கொல்லாமல் வாழமுடியும் எனும்போது, எதற்காக இன்னொரு உயிரை கொல்ல வேண்டும் என்பதுதான் சைவ உணவாளர்கள் எழுப்பும் கேள்வி. இந்த கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது, லியரி கீத் எழுதிய ’வெஜிட்டேரியன் மித்’ எனப்படும் சைவ உணவு கற்பனைகள் எனும் நூல்.
நூலாசிரியர் லியரி 20 ஆண்டுகள் பால் கூட குடிக்காத வீகனாக இருந்தவர். அடிப்படையில் ரேடிகல் பெண்ணியம் மற்றும் சூற்றுசூழலில் ஆர்வம் கொண்ட பெண். புவிவெப்பமயத்தை நம்புகிறவர். மிருகங்களின் வாழ்வுரிமையில் நம்பிக்கை கொன்டவர்.
இத்தகைய பெண், இன்று மூன்று வேளையும் இயற்கையான அசைவ உணவு உண்ண துவங்கியுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் அசைவ உணவில்தான் மிருகவதை மிக குறைவு என்பது.
லியரியின் மனமாற்றம் அவர் தோட்டம் ஒன்று பயிரிட ஆரம்பித்ததில் இருந்து துவங்குகிறது. உரம் வாங்கப் போனவர், இரு வகை உரங்கள் உண்டு என்பதை அறிந்தார். நைட்ரஜனால் ஆனது உரம். அதன் ஒரு மூலம் இறந்த மிருகங்களின் ரத்தம், எலும்பிலிருந்து செய்யப்பட்ட இயற்கை உரம். அடுத்தது பெட்ரோலில் தயாரிக்கப்பட்ட செயற்கை நைட்ரஜன், பொடாஷியம், பாஸ்பரஸ் உரம். பெட்ரோல் என்பதும் இறந்த டைனசார்களின் மீதம்தான். புவிவெப்பமயமா, வீகனிசமா என குழம்பி கடைசியில் இயற்கை உரத்தை தேந்தெடுத்தார் லேரி. அதில் இருந்தது முழுக்க ஃபாக்டரிகளில் கொல்லப்பட்ட கோழிகளின் ரத்தம், எலும்பு ஆகியவற்றின் மீதங்கள்.
’நிலம் ரத்தம் கேட்கிறது’ என எழுதுகிறார் லேரி. ’மிருகங்களுக்கும், மரங்களுக்குமான உறவு அப்படிப்பட்டது. மண்ணில் இருந்து வந்த எலும்பும், சதையும் மீண்டும் மண்ணுக்கே சென்று உரமாகின்றன. அந்த உரம் இல்லையெனில் செடிகள் வளர்வது இல்லை. ’ஃபாக்டரிகளில் கோழிவளர்ப்பை ஒருபுறம் திட்டிக்கொண்டு மறுபுறம் அவற்றின் மீதத்தை உரமாக்கி வயலில் இடுவது, என் மனசாட்சியில் முதல் ஆணியை அடித்தது’ என்கிறார்.
தோட்டம் வளர, வளர லேரியின் மனசாட்சியில் மேலும் ஆணிகள் பாய்ந்தன. செடிகள் வளரத் துவங்கியதும் அதில் ஸ்லக் எனப்படும் பூச்சிகள் சூழ்ந்தன. லெட்டூஸ் இலைகளை அரித்து உண்டன. அவற்றை மருந்து அடித்து கொல்ல லியரிக்கு விருப்பம் இல்லை.
’செடிகள் அவற்றின் இயற்கை உணவு. என் தோட்டத்தை அவை ஆக்கிரமிக்கவில்லை. அவை வசித்த இடத்தில்தான் நான் வீடு கட்டி தோட்டம் போட்டு இருக்கிறேன். அவற்றை நான் எப்படி கொல்வேன்?’ என யோசித்த லியரி விஷமருந்து அடிக்க மனம் இன்றி டயடோமாக்ஸ் எனும் இயற்கை பூச்சிகொல்லியை வாங்கி இட்டார். பூச்சிகள் சுத்தமாக அழிந்தன. அதன் பின் தான் லியரிக்கு அந்த உண்மை தெரிந்தது. டயடோமாக்கஸ் ஸ்லக் பூச்சிகளின் உடலை லட்சக்கணக்கான துன்டுகளாக வெட்டி கொல்கின்றன என்று.
வேறு வழியின்றி இறுதியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து ஒவ்வொரு ஸ்லக் பூச்சியாக பிடித்து வைத்து, அவற்றை வீட்டுக்கு பல மைல் தொலைவு சென்று காட்டில் விட்டார் லேரி. நூற்றுக்கு 99% சைவர்கள் பூச்சிகள் மேல் அத்தனை அன்பு காட்டுவதில்லை. ஆனால் லியரி அத்தனை அப்பாவியாக, மனிதாபிமானியாக இருந்திருக்கிறார்.
ஸ்லக் பூச்சிகளை பிடித்து காட்டில் விட்டதால் அங்கே அவை உயிர் பிழைக்கும் என பொருள் இல்லை. தோட்டத்தில் அடுத்த நாள் மீன்டும் பூச்சிகள் சூழ்ந்தன. வேறு வழியின்றி 25 கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்தார் லியரி. பூச்சிகளை அவை பிடித்து உண்ணும் என்பதற்கு. ’பூச்சிகளை கொல்ல எனக்கு மனமின்றி கொலையை கோழிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்தேன்’ என எழுதுகிறார் லியரி.
இது ஒவ்வொன்றுக்கும் லியரி சொல்லிகொண்ட சமாதானம் அவருக்கு மன திருப்தி அளிக்கவில்லை. பெரும்பாலான சைவர்கள் ஒரு பூச்சியின் உயிரை ஒரு பசுமாட்டின் உயிருக்கு சமமாக கருதுவதில்லை என்கிறார். பூச்சிமருந்து அடித்து விவசாயம் செய்ய வேண்டியிருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இதற்கு ஒரு காரணம் பூச்சி வாயை திறந்து கத்துவது இல்லை (அல்லது அது வலியில் கத்துவது நமக்கு கேட்பது இல்லை). சைவர்களின் ஜீவகாருண்யம் பெரிய, அழகான, பரிச்சயமான மிருகங்களுடன் நின்றுவிடுகிறது. ஆனால் லியரி அப்படி இருக்க விரும்பவில்லை.
விவசாயத்தை லியரி பயோசைடு என்கிறார். உலகின் மிகப்பெரும் இன அழிப்பு விவசாயம். ஒரு ஏக்கரில் விவசாயம் செய்வது என்பது அங்கே இருக்கும் அனைத்து உயிர்களையும் பூண்டோடு அழித்த பின்னர்தான் செய்ய முடியும். மரங்கள், செடிகள், கொடிகள், எலிகள், முயல்கள், பாம்புகள், மான்கள், பூச்சிகள், புழுக்கள் என அந்த நிலத்தில் வளரும் ஒவ்வொரு உயிரும் அழிக்கப்படுகின்றன. அதன்பின் அங்கே பயிர்கள் நடப்படுகின்றன. பயிர்களை உண்ண வரும் பூச்சிகள், பறவைகள் அழிக்கப்படுகின்றன. யானைகள் முதலிய மிருகங்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றன.
வயலை டிராக்டரில் உழுகையில் நிலத்தடியில் இருக்கும் ஏராளமான மிருகங்கள் கொல்லப்படுகின்றன. ஒரு ஏக்கர் நிலத்தை உழுகையில், அறுவடை செய்கையில் பலநூறு பாம்புகள், முயல்கள், மீர்கிட்டுகள், எலிகள் என பல மிருகங்கள் டிராக்டரில் சிக்கி கூழாகி கர்ணகொடூரமாக கொல்லப்படுகின்றன. வட அமெரிக்கா முழுக்க லட்சக்கணக்கில் இருந்த பைசன் எருமைகளின் மேய்விடங்கள் அனைத்தும் விவசாய நிலங்களாக மாறியபின்னர், அவை மேய இடமின்றி அழிந்ததை லியரி கீத் சுட்டி காட்டுகிறார். அதுபோக விவசாயத்துக்கு ஆறுகளை பெருமளவில் மறித்து அணைகளை கட்டி மீன்களை ஏராளமாக கொல்கிறோம். உதாரணம் வாஷிங்டன் கவுலி அணைக்கட்டு மட்டும் ஒரு நாளைக்கு 1 லட்சம் ட்ரவுட் மீன்களை கொல்கிறது. ஆற்றுநீரை குடிநீருக்கு நம்பியிருக்கும் பல லட்சம் மிருகங்கள் அணைக்கட்டுகளால் கொல்லப்படுகின்றன.
மிருகங்களை இன அழிப்பு செய்ததில் முக்கிய பங்கு விவசாயத்துக்குத்தான் என்கிறார் லியரி. ஆதி மனிதன் வேட்டையாடி உண்ட வரை பூமியில் காடுகள் செழித்து வளர்ந்தன. வேட்டைக்கு காடு அவசியம். புல்தரை அவசியம். வேட்டையால் பெருமளவில் மிருகங்கள் அழியவில்லை. அதே வட அமெரிக்க ப்ரைரி நிலங்கள் விவசாய நிலங்களாக மாறியபின் பல கோடி ஏக்கர் நிலங்கள் முழுக்க இருந்த உயிர்கள் அனைத்தும் அழிக்கபட்டன. ஒவ்வொருதடவை அறுவடை, நடுதல் செய்யும்போதும் அழிகின்றன.
வயலில் இருக்கும் ஒரு ஆயிரக்கணக்கான சிறுமுயல்கள், எலிகள், மீர்கிட்டுகள், பாம்புகள் இவை அனைத்தும் உயிர்தானே? ஒரு மாடு அல்லது பன்றியின் உயிர் இதை விட எந்த விதத்தில் மதிப்புமிக்கது? சைவ உணவால் உயிர்ப்பலி நிகழ்வதில்லை என நம்புபது லியரி குறிப்பிடும் வெஜிட்டேரியன் மித்களில் ஒன்று.
மூன்று ஏக்கரில் விவசாயம் செய்தால் 20 வீகன்களுக்கு ஒரு வருடம் உணவிட முடியும். ஆனால் அதில் பல்லாயிரம் மிருகங்கள் உயிர் இழக்கும். அந்த மூன்று ஏக்ராவில் ஒரே ஒரு உயிர் கூட எஞ்சி இருக்காது. அதை விட அந்த நிலத்தில் புற்களை வளரவிட்டு மாடுகள் அல்லது பன்றிகளை மேயவிட்டு அவற்றை உண்டால் அதுவே சிறந்த ஜீவகாருண்யமுறை என்பது லியரியின் வாதம். ஏன் எனில் பல்லாயிரம் மிருகங்கள் அதனால் உயிர் பிழைக்கும். அதாவது மாட்டின் உயிரும், முயலின் உயிரும் சமம் என நாம் கருதினால்.
நன்றி: உலகின் புதிய கடவுள்