மோடி எனும் பாதுகாப்புக் கவசம்
உலகம் முழுக்க இந்தியாவின் மானம் கொடி கட்டிப் பறக்கிறது. மோடி, அமித்ஷா இருவரும் இந்தியாவுக்கு அதானி ஊழல் மூலம் பெரும் அவப்பெயரை கொண்டு வந்துள்ளனர். மோடியின் திறமை இல்லாத தலைமை அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையை தற்போது கடினமாக்கி உள்ளது என்று சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
அமெரிக்காவில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ.2,029 கோடி அளவிற்கு லஞ்சமாக தர முன்வந்ததாக பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பரான கவுதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொ டர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அதானி நிறுவன பங்குகள் சரசரவென குறைந்துள்ளன.
ஹிண்டன்பர்க் ஆய்வு அமைப்பு, அதானி நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டு களை முன் வைத்தபோது, இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தின. ஆனால் அதானிக்காக நாடாளு மன்றத்தையே முடக்கிய மோடி அரசு கடைசி வரை உரிய விசாரணை நடத்த ஒப்புக் கொள்ளவே இல்லை. தற்போதும் அதானி மீது உரிய விசாரணைக்கு மோடி அரசு முன்வருமா என்று தெரியவில்லை.
அதானி நிறுவனம் அமெரிக்க வங்கிகளிடமும், முதலீட்டாளர்களிடமும் தனது சட்ட விரோத செயல்களை மறைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கடுமையானதாகும். இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரை அமெரிக்க நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. இந்தப் பிரச்சனை யில் நாட்டின் கவுரவத்தை மோடி அரசு காப்பாற்றப் போகிறதா; அல்லது வழக்கம் போல தன்னுடைய கூட்டுக்களவாணி அதானியை காப்பாற்றப் போகி றதா என்பதுதான் நாட்டு மக்கள் முன்வைக்கும் கேள்வி.
இந்த நடவடிக்கைகளால் அதானி 2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து இருக்கிறார். மோடி அரசின் பரிந்துரை பெயரில் பல வங்கிகள் மக்கள் பணத்தை கடனாக வழங்கியுள்ளது. அதானி நிறுவனங்களில் பல சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர் செபி அமைப்பை நம்பி. ஏமாந்து போயிருக்கிறார்கள்.
அதானி நிறுவனப் பங்குகள் விலை குறைந்ததை எப்படியாவது ஈடுகட்ட வேண்டும் என்று பா.ஜ.க.வினர், ‘’இது நல்ல நேரம். அதானிக்கு எந்த பாதிப்பும் நேராது. பங்குகளை வாங்கிப்போட்டு கோடீஸ்வரர்கள் ஆகுங்கள்’’ என்கிறார்கள். இதை நம்பி பலரும் பங்குகள் வாங்குகிறார்கள்.
ஆனால், இது சரியான நடவடிக்கை இல்லை என்பதே பொருளாதார அறிஞர்கள் கூறும் கருத்து. அதானி பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்த போதெல்லாம் பங்குகளை வாங்கி சேதாரம் அதிகமாகாமல் பார்த்துக் கொண்ட முதலீட்டு நிறுவனம் GQG. ராஜீவ் ஜெயின் எனும் இந்தியரால் தோற்றுவிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனம் இது. அதானி பங்குகளில் 48100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்.அதானி நிறுவன முதலீடுகளை இனி மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் ராஜிவ் ஜெயின். அதாவது இனி வாங்க மாட்டார்; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விற்க வருவார்.
இனி கடன் பத்திரங்களின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் மூலதனம் திரட்டுவது இயலாத காரியம். சிங்கப்பூர் ஜப்பான் ஸ்விஸ் வங்கிகளில் இனி கடனும் கிடைக்காது. இந்திய வங்கிகளில் கடன் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. LIC யும் வாய்ப்பு கிடைக்கும் போது விற்கவே செய்வார்கள்.அதானி என்பதே ஊதி பெரிதாக்கப்பட்ட பிம்பம் என்பதால் என்றாவது ஒரு நாள் ஒட்டுமொத்தமாக பெரிய சரிவை சந்திக்கும். எனவே, வாங்கி ஏமாந்துபோகாதீர்கள்’’ என்கிறார்கள்.