என்ன செய்தார் சைதை துரைசாமி – 202
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்த நேரத்திலேயே அதிகாரிகள், ‘அங்கு நாங்கள் ஆய்வு நடத்திவிட்டோம். அங்கு மாநகராட்சி சார்பில் செய்வதற்கு எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்கள். ஆனாலும், நேரில் பார்த்தால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும் என்பதால் நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகள் கூறியபடி அந்த இடத்தின் நெரிசலைக் குறைப்பதற்கு மாநகராட்சி சார்பில் செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லை என்பது புரிந்தது. ஆனாலும், ஒரு மேயராக மக்களின் பிரச்னையைத் தீர்ப்பது தன்னுடைய கடமை என்றே நினைத்தார். அதனால், மாநகராட்சி மூலம் செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும் வேறு எந்த வகையில் நெரிசலைக் குறைக்க முடியும் என்று தொடர்ந்து ஆய்வும் ஆலோசனையும் நடத்தினார்.
அதில் ஒரே ஒரு தீர்வு மட்டுமே தெரியவந்தது. அதாவது, அருகில் இருக்கும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் நிலத்தை மாநகராட்சிக்காக கேட்டு வாங்கினால் மட்டுமே, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே அதிகாரிகள் கருதினார்கள். ஏனென்றால், சாதாரண நபர்கள் கூட தங்கள் நிலத்தை அரசுக்குத் தருவதற்கு மறுப்பார்கள். ஆனால், ரேஸ்கோர்ஸ் மைதானம் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதால் அதைக் கேட்பதற்கே வாய்ப்பில்லை என்றே கருதினார்கள்.
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியுடன் மேயர் சைதை துரைசாமிக்கு நல்ல உறவு உண்டு. நீண்ட காலப் பழக்கம் உண்டு. அந்த பழக்கத்தை வைத்துக்கொண்டு மாநகராட்சிக்கு நிலம் கேட்பது சரியாக இருக்குமா என்று யோசனை செய்தார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.