விஜய் விழா பங்கேற்பு சர்ச்சை
அரசியல் குழப்பம் இருப்பதைக் காரணம் காட்டி, புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யை சந்திக்கப் போவதில்லை என்று திருமாவளவன் தெளிவாக அறிவிப்பு செய்யாமல், வேண்டுமென்றே பழைய கதைகளைப் பேசி குழப்புகிறார். அவருக்கு ஸ்டாலினை விட ஆதவ் அர்ஜுனாவே முக்கியமாகி விட்டது என்று தி.மு.க.வினர் கடுமை காட்டுகிறார்கள்.
இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’எல்லா கூட்டத்திலும் எல்லா நேரத்திலும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்கிறார் திருமாவளவன். ஆனால், விஜய் விழா ஒரு வருடம் முன்னரே முடிவு செய்யப்பட்டது என்று தைரியமாக பொய் சொல்கிறார். அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்பதற்கு அவரது நீண்ட விளக்கமே சாட்சி.
புத்தக விழாவில் ஸ்டாலின் வெளியிட திருமாவளவன் பெறப் போவதாகக் கூறினார். ஆனால், அப்படி விகடன் குழுமத்தினர் யாரும் ஸ்டாலினை அணுகவே இல்லை. ஆகவே, அது பொய். மேலும், இதுவரை விஜய் எந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலும் பங்கேற்பு செய்ததே இல்லை. ஆகவே, புத்தக வெளியீட்டில் விஜய் கலந்துகொள்கிறார் என்பது திட்டமிட்ட சந்திப்பு. இதற்கு முன்னர் பல முறை ஆதவ் அர்ஜூனாவும் விஜய்யும் சந்தித்திருக்கிறார்கள்.
அதை வெளிப்படையாகக் கொண்டுவருவதற்கே இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் திருமாவளவன். ஸ்டாலினா, ஆதவ் அர்ஜுனாவை என்று முடிவெடுகக் வேண்டிய கட்டத்தில் அவர் ஆதவ்வை தேர்வு செய்திருக்கிறார். ஆகவே, அவர் நம்பிக்கைக்குரிய கூட்டாளி இல்லை’’ என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அரசியல் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.