வடிவேலு வாழ்க்கை தத்துவம்
இயற்கை நிறைய நிறைய ஆச்சர்யங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ’நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்று சொல்வதும், ‘நீ எதை தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடுகிறது’ என்பதும் சொல்லவருவது ஒரே கருத்தைத்தான்.
ஆம்… உங்களுடைய தேடுதலில் நேர்மையும், தீவிரமும், உறுதியும் இருக்கும் என்றால், நீங்கள் எதை தேடுகிறீர்களோ, அதுவும் உங்களைத் தேடி வரும். அப்படி வரும் வாய்ப்பை உறுதியாகப் பற்றிக்கொண்டால் போதும். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
எல்லோருக்கும் தெரிந்த நடிகர் வடிவேலுவை ஒரு உதாரணமாகப் பார்க்கலாம். மலையளவுக்கு நடிகராகும் ஆசை இருந்தாலும், சென்னைக்குப் போய் சினிமா வாய்ப்பு கேட்கவும் வழி இல்லாதவராக மதுரை பக்கம் இருந்தார் வடிவேலு. ஒரு திருமணத்துக்காக மதுரைக்குப் போன இயக்குனர் கஸ்தூரி ராஜாவும், நடிகர் ராஜ்கிரணும் தற்செயலாக வடிவேலுவை சந்திக்கும் சூழல் உருவாகிறது. அந்த சந்திப்பு, சினிமா வாய்ப்பாக மாறுகிறது.
ஆம், வடிவேலு தேடிக்கொண்டு இருந்தது, அவரையும் தேடியது. அதனால்தான் அந்த வாய்ப்பு சாத்தியமானது.
அதேபோல், நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிவரும்போது அலட்சியம் செய்தால் என்னாகும் என்பதற்கும் உதாரணம் இருக்கிறது. போட்டோ, கேமரா என்றாலே அந்த காலத்தில் கோடக் நிறுவனம்தான் நினைவுக்கு வரும். துல்லியத்துக்காகவும், அடுத்தகட்ட முயற்சிகளுக்காகவும் பல்வேறு ஆய்வுகள் செய்துகொண்டே இருந்தனர். கோடக் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி, டிஜிட்டல் கேமராவை உருவாக்கினார். இதனை இப்போது தயாரித்தால், எல்லோர் கையிலும் ஒரு கேமரா இருக்கும் என்று சொன்னார்.
ஆனால், கோடக் நிறுவனம் சுயநலத்துடன் யோசித்தது. அதாவது டிஜிட்டலை அறிமுகம் செய்தால், ஃபிலிம், கேமரா, பிரிண்டிங் போன்ற அத்தனை துறையும் நஷ்டமாகிவிடும் என்ற சிந்தனையில், டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பத்தை ஒளித்துவைத்தது. ஆனால், நாலைந்து வருடத்தில் வேறு சில நிறுவனங்கள் டிஜிட்டல் கேமராவில் கால் பதித்து, மளமளவென முன்னேறின. தாமதமாக தன்னுடைய தவறை உணர்ந்து டிஜிட்டலில் கோடக் நிறுவனம் இறங்குவதற்குள், அந்த நிறுவனம் மூழ்கிப் போனது.
எனவே, ஆசைப்படுவது மட்டும் போதாது. அதற்கான வாய்ப்பு வரும்போது, அதனை சரியாக பற்றிக்கொள்ளவும் வேண்டும்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, தன்னுடைய 55வது வயதில் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறார். ஆனால், ஜோ பைடன் 78 வயதில்தான் அதிபராக வருகிறார். இதற்கெல்லாம் காரணம், அவர்கள் தேடினார்கள். ஒரு சிலருக்கு உடனே அவர்கள் தேடியது கிடைத்துவிடுகிறது, ஒருசிலருக்கு அது காலதாமதம் ஆகிறது.
சாக்லேட் சாப்பிடும்போது சிறு துண்டு கீழே விழுகிறது. அதை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், கொஞ்சநேரத்தில் அதனை தேடி எறும்புகள் வந்துவிடும். எத்தனை சுத்தமான இடத்தில் சாக்லேட் விழுந்தாலும் எறும்பு, ஈ போன்றவை மொய்ப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதாவது எறும்புகள் மட்டும் இனிப்பை தேடவில்லை. இனிப்பும் எறும்புகளைத் தேடுகிறது.
அப்படியென்றால், நாம் எதை தேடினாலும் கிடைத்துவிடுமா என்ற கேள்வி வருவது சகஜம்தான். ஏனென்றால் பலரும் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள், எதுவும் கிடைப்பதில்லை. குறிப்பாக கோலிவுட்டில் சினிமா வாய்ப்பு தேடி ஆயிரக்கணக்கான நபர்கள் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவரோ, இருவரோதான் அடுத்த கட்டத்திற்குள் நுழைய முடிகிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்..?
உங்கள் தேடுதலில் உண்மையும் நேர்மையும் தீவிரமும் போதிய அளவுக்கு இல்லை என்று அர்த்தம். வேறு வகையில் சொல்வது என்றால் நிச்சயம் ஏதோ ஒரு வாய்ப்பு வந்திருக்கும், அதனை சரியாக பற்றிக்கொள்ளாமல் தவற விட்டிருப்பீர்கள். விக்ரம் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நடிகராக மாறிய பிறகும் ஒரு வெற்றி கிடைக்காமல் அவஸ்தைப்பட்டார். அதற்காக அவர் சினிமாவை விட்டு போய்விடவில்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்டாக, கதை ஆலோசகராக ஏதோ ஒரு வகையில் வெற்றிக்கான வாய்ப்பை தேடிக்கொண்டே இருந்தார். அந்த தேடுதல்தான் அவருக்கு சேது படத்தையும், பெரும் வெற்றியையும் கொண்டுவந்தது
தேடுங்கள் கிடைத்துவிடும் என்பதுதான் இயற்கை மனிதனுக்குக் கொடுத்திருக்கும் வரம். தவம் போன்று தேடுங்கள், நிச்சயம் கண்டடைவீர்கள்.