தியானத்தில் உடல் மேலே எழும்புமா..?!

Image

சந்தேகம் தீர்க்கும் ஞானகுரு

திருப்பரங்குன்றம் பரபரப்பாக இருந்தது. ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், காவிஉடை சாமியார்கள் என ஏராளமான நபர்கள் மலை நெடுகிலும் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தனர். அவர்களை வேடிக்கை பார்த்தபடி மலை படிகளில் ஏறி, ஒதுங்கியிருந்த ஒரு பாறையின் மீது உடலை சாய்த்தார் ஞானகுரு.

இதமான அதிகாலை வெயில், உடலை வருடிய காற்று… மூளையின் உத்தரவு இல்லாமலே கண்கள் செருகின… யாரோ ஒருவர்  அருகே நிற்பது போல் உள்ளுணர்வு சொல்ல, மெதுவாக கண்களைத் திறந்தார் ஞானகுரு. சூரியன் தலைக்கு நேராக நின்றாலும், மேகங்கள் மறைத்துக் கொண்டிருந்ததால் வெயில் உறைக்கவில்லை.

நாற்பதை தொட்டிருக்கும் ஒரு காவியுடை சாமியார், கையில் தயிர்சாத பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார். ஞானகுரு கண்களைத் திறப்பதைப் பார்த்ததும், ‘‘நீங்க காலையில மலை மேலே ஏறும்போதே பார்த்தேன், எந்த சிந்தனையும் இல்லாம ஒரு யோகியைப் போல போய்க்கிட்டே இருந்தீங்க.  சாப்பிட கீழே இறங்கலையேன்னுதான் தயிர் சாதத்தோட வந்தேன். சாப்பிடுங்க சாமி…’’ வாய் அன்பைப் பொழிய, கை பொட்டலத்தை நீட்டியது.

பொட்டலத்தைப் பார்த்ததும் ஞானகுருவுக்கும் வயிறு பசித்தது, ஆனாலும் புன்னகையுடன், ‘’எனக்காக நீங்கள் ஏன் சிரமம் எடுத்துக் கொண்டீர்கள்… நீங்கள் சாப்பிட்டதாகத் தெரியவில்லையே…’’ என்று கேட்டார்.

’’தினமும் திங்கிறதுதானே சுவாமி… சாப்பாடு, காசு பத்தி எந்த கவலையும் இல்லாம கைவீசி நீங்க நடந்ததைப் பார்த்ததும், எனக்கு ஏதோ புதையலைக் கண்டுபிடிச்ச மாதிரி மனசு நிறைஞ்சுபோச்சு… அதான் நான் சாப்பிடாம உங்களுக்குக் கொண்டுவந்தேன்…’’ என்ற பொட்டல சாமியாருக்கு குரு பக்தி வந்திருப்பது புரிந்தது. அவர் இக்கோலம் காண என்ன காரணம் என்று அறிய ஆசையும் வந்தது.

’’ஏன் இப்படி உங்களையே வருத்திக் கொண்டீர்கள்… உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?’’ என்றபடி அருகே அமர வைத்தார்.

’’அட, சொல்றதுக்கு என்ன சாமி இருக்கு. பேரு சுரேந்திரன். சின்ன வயசிலேயே சாமி, கோயில்னு ஆன்மிகத்துல ரொம்பவும் ஈடுபாடு. வீட்ல கல்யாண ஏற்பாடு நடந்ததும், ஊரைவிட்டு ஓடிவந்துட்டேன். துறவியாக ஆசைப்பட்டு நாலைஞ்சு ஆசிரமத்தில இருந்தேன், ஆனா இந்த மனக்குரங்கு ஒரு நிலையில நின்னாத்தானே… அலைபாய்ந்துகிட்டே இருக்கே! சுருக்கமா சொல்றதுனா, சாமியாராகும் முயற்சியில தோத்து பிச்சைக்காரனா மாறிட்டேன். எந்த கல்யாணத்துக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி வந்தேனோ, இப்ப அதுவும் அர்த்தமில்லாமப்போச்சு. இங்கே ஒருத்தியை சேர்த்துக்கிட்டேன். இப்போ ஒரு பிள்ளையுமாகிப் போச்சு…’’ என்றார் சலிப்புடன்.

’’இல்லற யோகம் என்பதே அற்புதமான வரம்தானே… இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?’’

’’இந்த காவி உடையைப் பார்த்ததுமே சில்லரையை அள்ளித்தாராங்க… நிறைய சாப்பாடும் கிடைக்குது. ஆனா, எல்லாத்தையும் ஏமாத்திப் பிழைக்கிறோம்ன்னு ஒரு உறுத்தல் நெஞ்சுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்குது…’’ என்றவர் திடீரென, ‘‘சாமி.. உங்களைப் பார்த்தா பெரிய ஞானி மாதிரி இருக்கு. நீங்க தவம் செய்வீங்களா…? எத்தனைநேரம் தியானத்துல உட்கார்ந்திருப்பீங்க?’’ என்று ஆர்வமாகக் கேட்டார்.

’’தியானம், யோகா, தவம்  போன்றவை நாம் வாழ்வில் அன்றாடம் கடைபிடிப்பவைதான். அதனை தனியே செய்யவேண்டியது இல்லை…சாப்பிடுவதில் தொடங்கி விளையாடுவது வரை, எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி செய்தால் அதனை யோகா எனலாம். தூக்கம்தான் அற்புதங்கள் நிறைந்த மிகச்சிறந்த தியானம். இன்னொரு வகையில் சொல்வது என்றால், தியானம் என்பது வேலையில்லாதவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போதும் தூங்கும் செயல் என்பதுதவிர வேறு ஒன்றுமில்லை…’’ என்ற ஞானகுருவின் பதிலை புரிந்துகொள்ள முயற்சிக்காமல்,  நரேந்திரன் அடுத்த கேள்வி கேட்பதிலே ஆர்வமாக இருந்தார்.

’’அதில்லை சாமி… முந்தியெல்லாம் முனிவர்கள் எட்டாயிரம் வருசம், ஐம்பதாயிரம் வருசம்னு தியானம் செய்வாங்களாம். அப்பத்தான் கடவுள் வந்து வரம் கொடுப்பாராம். அதுபோல நீங்களும் தியானம் செஞ்சிருக்கீங்களா?’’ என்று குழந்தைத்தனமாகக் கேட்டதில் இருந்தே, அவர் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்பது புரிந்தது.

’’நூறு வயது வரை மனிதன் வாழ்வதே அரிது என்பது தெரியாதா? ஒருவேளை ஐம்பதாயிரம் வருடங்கள் உயிரோடு இருந்து தவம் செய்யமுடியும் என்றால் அதுவே வரம்தானே.. அதைவிட வேறுவரம் வேண்டுமா? நீங்களும் இந்த முயற்சியில் இறங்கினீர்கள் போலிருக்கிறதே…’’ என்று கேட்டதும் மனதில் இருப்பதைக் கொட்டத் தொடங்கினார்.

’’நிறைய செஞ்சு பார்த்தேன் சாமி, ஒரு ஆசிரமத்துல ஐம்புலனை அடக்கி தியானத்தின் மூலம் மனசை அடக்கச் சொன்னாங்க… என்னாலே மனசை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மனசுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருந்திச்சு…’’ என்று வருத்தப்பட்டார்.

’’மனம் எப்போதுமே வெறுமையாக இருக்காது. மனதை வெறுமையாக வைத்துக் கொள்ள எத்தனை முயற்சி செய்தாலும், ஏதாவது ஒரு எண்ணம் ஓடிக் கொண்டுதான் இருக்கும். மனதைக் கட்டுப்படுத்தியதாக சொல்பவர்கள், பொய் சொல்லிகள். மனதைக் கட்டுப்படுத்த இயலாது, திசை திருப்பத்தான் முடியும் என்பதை திருமூலரே சொல்லி இருக்கிறார்…

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே…’’ என்று ஞானகுரு பாடலை சொல்லி முடிக்க, திகைப்பின் உச்சியில் நின்றார்  நரேந்திரச்சாமி,

‘‘அவ்வளவு பெரிய ஞான சமாசாரமெல்லாம் எனக்குத் தெரியாது சாமி… ஆனா என்கூட இருந்தவங்க எல்லாம் தியானம் மூலம் அடுத்த நிலைக்குப் போயிட்டாங்க, அதாவது அவங்க தியானம் செய்யும் போது, உடம்பு ஒரு இஞ்ச்சில இருந்து, அரையடி வரைக்கும் மேலே போகுமாம்..’’

’’நீங்க பார்த்தீங்களா?’’

’’இல்லை.. தியானம் செய்யும்போது எல்லோருமே கண்களை மூடிக்கணும், குருஜிதான் அதைப் பார்த்துச் சொல்வார்!’’ என்றார்.

’’மனம் வெறுமையானால், மனதைக் கட்டுப்படுத்தினால் உடல் மேலே எழும்பும் என்பது கடைந்தெடுத்த பொய். நிஜத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை நரேந்திரன்…’’

’’எனக்கு ஆறுதல் சொல்றதுக்காக இப்படி சொல்லாதீங்க சாமி… தியானம் செஞ்சு மனசைக் கட்டுப்படுத்த முடியலைன்னுதான் அங்கேயிருந்து ஓடிவந்துட்டேன். வேற ஒரு ஆசிரமத்திற்குப் போனேன், அங்கே மந்திரத்தை மனப்பாடம் செய்யச் சொன்னாங்க. என் மரமண்டைக்கு அதுவும் ஏறலை. அப்புறம் தவம் செய்யலாம்னு காட்டுக்குள்ளே போய் உட்கார்ந்தேன். அரை நாள்கூட பசியை அடக்க முடியலை,  நாலு மணி நேரம் உடம்பை ஒரே நிலையில வைச்சிருக்க முடியலை. எனக்கே என்மேல கோபமாயிடுச்சு. இனிமேல் கடவுளைப் பத்தி பேச அருகதை கிடையாதுன்னுதான் கோயிலுக்கு உள்ளே போகாம வாசல்லயே உட்கார்ந்தேன்.

வெறுப்புல சும்மா உட்கார்ந்திருந்தவனை பிச்சைக்காரனா மாத்திட்டாங்க. நானும் அது எனக்கான தண்டனையா ஏத்துக்கிட்டேன். ஆனா, இப்போ எதுவுமே செய்யாம வாழ்க்கை ரொம்பவும் சொகுசாயிடுச்சு.  இந்த காவி உடையை பார்த்துத்தான் காசு போடுறாங்க அதனால இதை கழட்டிப் போடவும் மனசு வரல, சந்தோஷமா வாழவும் முடியலை…’’ என்றார்.

பக்தி சினிமாக்களும், புராணங்களும் இவரை அதிகம் பாதித்திருப்பது புரிந்தது. ஒரு துறவியாக மாறினால் மந்திரவாதியைப் போன்று பறக்கும்கம்பளம், அட்சயப் பாத்திரம், உரு மாற்றும் சக்தி என்று எத்தனையோ சக்திகள் கிடைக்கும் என்று குழந்தைத்தனமாக நம்பியிருக்கிறார்.  யோகா, தியானம், தவம் போன்றவைகளுக்கு இப்படிப்பட்ட சக்திகள் இல்லை என்பதை எப்படி புரியவைப்பது என்று சிந்தித்தபடி, தயிர்சாத பொட்டலத்தைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினார் ஞானகுரு.

தயிர் சாத பொட்டலம் கட்டியிருந்த கயிறை எடுத்து சீராக உருவியபடி, ‘‘சாமி… கீழே போய் தண்ணீர் கொண்டுவரவா…?’’ என்று கேட்டார்.

அவர் பொட்டலக்கயிறை நீவிய விதம் ஒரு கைதேர்ந்த தொழிலாளியைப் போன்று இருக்கவே, ‘‘உங்களுக்கு நன்றாக பூ கட்டத் தெரியும்தானே…’’ என்று கேள்வியை வீசிவிட்டு அவரைப் பார்க்காமல் குனிந்தபடி சாப்பிட்டேன்.

’’சாமி… அதுதான் எங்க குலத்தொழில். நான் எதுவுமே சொல்லாம என்னயப் பத்திச் சொல்லிட்டீங்க. நீங்கதான் உண்மையான ஞானி…’’ என்று புளகாங்கிதமடைந்து சட்டென்று காலில் விழுந்து எழுந்தார். அவரது வாழ்க்கை முறையை மாற்ற முடிவு செய்தார் ஞானகுரு.

’’நான் இங்கு வந்ததே உங்களுக்கு தெளிவு உண்டாக்கத்தான் என்று நினைத்துக்கொள் நரேந்திரன். இறைவனை கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்ற மூன்று வழிகள் மூலம் அடையலாம். கர்மயோகம், ஞானயோகம் போன்றவை மூலம் இறைவனை அடைவதற்கு பிறவியிலேயே அதற்கான அமைப்பு இருக்கவேண்டும். அதனால் நீங்கள் பக்தியோகம் மூலமாக இறைவனை அடைய வேண்டியவர் என்பதை எடுத்துச் சொல்லவே வந்திருக்கிறேன். பிச்சை எடுப்பதை விடுத்து, பூ கட்டும் தொழிலில் இறங்கு. நீ கட்டும் பூக்களை எவர் வாங்கினாலும், அது அப்படியே இறைவன் பாதத்தில் சேர்வதாக நினைத்துக் கொள். குடும்பத்தோடு  கழிக்கும் ஒவ்வொரு கணமும் இறைவனை நெருங்குவதாகவே நினைத்துக் கொள், இதுவே இறைவனின் விருப்பம்”” என்றார்.  

’’சாமி ரொம்ப நாளா எனக்கும் இப்படி ஒரு நினைப்பு இருந்துச்சு. ஆனா இந்த சட்டையைக் கழட்டுனா சாமி குத்தமாயிடுமோன்னு பயந்துதான் இப்படியே இருக்கேன். எனக்கு கடவுளே நேரில் வந்து வழி காட்டுனமாதிரி சொல்லிட்டீங்க, நீங்க சொன்னபடியே வாழ்றேன்…’’ என்றவரிடம் புதிய மகிழ்ச்சி தென்பட்டது.  

Leave a Comment