விஜய் கட் அவுட் கொள்கையால் யார் வாக்குக்கு ஆபத்து..?

Image

தெளிவான அலசல்

மாநாட்டு அரங்கில் தமிழினத்தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சமூகநீதிப் போராளி அம்பேத்கர் ஆகியோர் கட் அவுட் வைத்திருப்பதிலிருந்தே நடிகர் விஜய் என்ன கொள்கையை சொல்லப்போகிறார் என்பது தெளிவாகிவிட்டது. இன்னமும் தமிழன்னை, வீரமங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு கட்அவுட் இருக்கும் என்கிறார்கள். இந்த வகையில் விஜய்யின் கொள்கை அமையும் என்றால் எந்தக் கட்சியின் வாக்குகளுக்கு ஆபத்து என்பதைப் பார்க்கலாம்..

இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் இளைஞர்களுக்கு பெரியார், காமராஜர் அம்பேத்கர் ஆகியோர் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. விஜய் முன்னிறுத்துவதன் மூலம் புதிய தேடுதல் உருவாகும் என்பதை தமிழகத்துக்கு ஒரு நல்ல செய்தியாகவே பார்க்க வேண்டும். திராவிடக் கொள்கை, பட்டியலின பாசம் என்று விஜய் வடிக்கும் புதிய கொள்கையின் அடிப்படையில் நடுநிலையாளர்கள் மட்டுமே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள், தி.மு.க.வுக்கு எதிர்ப்பான வாக்குகள் எல்லாம் இதுவரை அ.தி.மு.க.வுக்கும் சீமானுக்கும் சென்றன. இனி, அந்த வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் விஜய்க்குத் திரும்பும். அதேநேரம், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் அடிப்படைத் தொண்டர்கள் என்று வைத்துக்கொண்டால் இரண்டு கட்சிக்கும் குறைந்தது 15 சதவீதம் வாக்குகள் உண்டு. இந்த இரண்டு கட்சிகளில் தி.மு.க. வாக்கு அப்படியே விழுந்துவிடும்.

அ.தி.மு.க.வில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. எனவே, அந்த அடிப்படை வாக்குகள் ஓரளவு சிதற வாய்ப்பு உண்டு, இதில் குறிப்பிட்ட சதவீதம் விஜய்க்குப் போவதுண்டு. சீமானுக்கு ஓட்டுப் போடுவது நிச்சயம் தோல்விக்குத் தான் வழிவகை செய்யும் என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆகவே, தி.மு.க.வுக்கு எதிர்ப்பாக மட்டுமின்றி சீமானுக்கு ஆதரவான வாக்குகளும் விஜய்க்குப் போகலாம்.

இதுவரை பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு பெரியார், அம்பேத்கர் என்றாலே அலர்ஜி. ஆகவே, அவர்களுடைய வாக்குகள் சீமானுக்குக் கிடைக்கப்போவதில்லை. இப்படிப் பார்த்தால் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழருக்குக் கிடைக்கும் வாக்குகளே விஜய்க்குக் கிடைக்கப்போகிறது.

தற்போதைய நிலையில் தி.முக. அணி, அ.தி.மு.க. அணி, பா.ஜ.க. அணி மற்றும் நாம் தமிழர் என்று நான்கு முனைப் போட்டி இருக்கிறது. விஜய் நுழைவால் போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அது தி.மு;க.வுக்கே நல்ல வாய்ப்பாக அமையும்.

Leave a Comment