என்ன செய்தார் சைதை துரைசாமி – 170
இயற்கையுடன் இணைந்த நலவாழ்வு, சித்த மருத்துவம், யோகா போன்ற பழமை மீது மேயர் சைதை துரைசாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும் அறிவியல் மாற்றங்களையும், தொழில்நுட்பங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்பவர். தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்தைக் கணிக்கவும் செய்வார்.
இந்த வகையில் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையில் கம்ப்யூட்டர் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை அறிந்தார். சூரியனை பூமி சுற்றி வருவதால் இரவும் பகலும் தோன்றுகிறது என்பதையும், பட்டாம் பூச்சியால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது என்பதையும் வார்த்தைகளால் பாடம் போதித்துப் புரிய வைப்பதை விட, அதனை வீடியோவாகக் காட்டி விளக்கம் கொடுப்பது எல்லோருக்கும் எளிதில் புரிந்துவிடும் என்பதை அறிந்தார்.
எனவே, தேர்ந்தெடுத்த சில பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் வள வகுப்பறைகள் தொடங்குவதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார். இதற்காக கம்ப்யூட்டர் மற்றும் எல்.சி.டி. புரொஜெக்டர் கருவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் கடினமான பாடங்களையும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. மாணவர்களின் கற்றல் எளிமையாகி ஆர்வமாகப் படித்தனர். இந்த மாற்றம் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.
கொரோனா காலத்திற்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டது என்றாலும், அதற்கு முன்பாகவே கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித்தரும் முறையை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகம் செய்து பாராட்டுகள் பெற்றார் மேயர் சைதை துரைசாமி.
அதோடு, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் ஆய்வகப் பணியில் வேதியியல் ஆய்வுகளில் ஈடுபடும் நேரத்தில் போதிய பாதுகாப்புடன் திகழவேண்டும் என்பதற்காக, ஆய்வக மேலாடை மற்றும் கண் பாதுகாப்புக் கண்ணாடிகள் இலவசமாக வழங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அதுபோல் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் கணிதம் கற்றுக்கொள்வதற்கு அதிகம் கஷ்டப்படுவதைக் கண்டு, என்.ஐ.ஐ.டி. கணித ஆய்வகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
அறிவியல் பாடத்தை சிறப்புறக் கற்றுத்தர அறிவியல் மையம் தொடங்கப்பட்டன இவை போன்ற பல்வேறு புதுப்புது திட்டங்கள் மூலம் மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர். அதிக மதிப்பெண் பெறவும் வாய்ப்புகள் கிடைத்தன.
- நாளை பார்க்கலாம்.