பாலியல் பாடம்
மனிதரின் மனநிலையும் உடல்நிலையும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அலுவலக வேலை, தேவையற்ற பிரச்னைகள் போன்றவைகளை படுக்கையறைக்கு வெளியே விட்டுவிட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், அது நடப்பதில்லை. அதனால் படுக்கையறையில் இன்பம் பெறுவதற்கு ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தயாராக இருப்பதில்லை.
ஒருவருக்கு ஆர்வம் இருக்கும் நேரத்தில் இன்னொருவர் ஆர்வமாக தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் எண்ணத்தில் இருக்கலாம். அவரை உறவுக்கு அழைப்பதற்கு தயக்கமும் வெட்கமும் தடை போடுகிறது. அதனாலே நிறைய வீடுகளில் உறவு தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை. தனக்குக் கிடைக்காத கோபத்தில் இருக்கும் நபர் வேறு ஒரு நேரத்தில் இணையர் அழைக்கும்போது மறுப்பதும் நிகழ்கிறது.
இதற்கு என்ன தீர்வு..?
உணவு தயாரானதும் சாப்பிட அழைக்கிறார்கள். வெளியே கிளம்புவதற்குத் தாமதம் ஆகிறது என்றால் அழைக்கிறார்கள். ஏதேனும் சந்தேகம் கேட்பது என்றாலும் நேரம் காலம் பார்க்காமல் அழைக்கிறார்கள். இதற்கெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை. ஆனால், உறவுக்கு மட்டும் வெட்கப்படுகிறார்கள். ஏனென்றால், தன்னைப் பற்றி தவறாக நினைக்கலாம் என்ற எண்ணமே காரணம்.
இதனை தம்பதியர் ஆரம்ப காலத்திலேயே பேசித் தீர்த்துவிடுவது மிகவும் நல்லது. அதாவது உறவுக்கு அழைப்பதற்கு வெட்கம் தேவையில்லை என்பதையும், இந்த விஷயத்தில் ஒருவர் விரும்பும் போது மற்றவர் முடிந்த வரையிலும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதையும் பேசிக்கொள்வது மிகவும் நல்லது.
உறவுக்கு அழைப்பதற்கு சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளை கோட் வேர்ட் ஆக பயன்படுத்துவது நல்லது. அதாவது லைட்டை அணைக்கலாமா? ஸ்வீட் சாப்பிடலாமா என்று பேசினாலே மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் ஒரு முறை முடிந்ததும் மீண்டும் ஒரு முறை வேண்டும் என்றாலும் கேட்பதற்குக் கூச்சப்பட வேண்டியதில்லை.
படுக்கையறையில் கூச்சப்படுபவர்கள் நஷ்டத்தையே சந்திப்பார்கள். எனவே வெட்கப்பட வேண்டவே வேண்டாம். அப்படி வெட்கம் வருகிறது என்றால், அதையும் ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டு வெட்கம் போகும் வரையிலும் விளையாடுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும், நேரத்தையும் வீணாக்கவே செய்யாதீர்கள்.