நேசமே வெற்றிக்கு அடிப்படை.
ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் ரத்தன் டாட்டா வாழ்ந்து காட்டவில்லை, ஒரு காதலன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் அவரே உதாரணம். காதல் என்றால் பொறுப்பு எடுத்துக்கொள்வது. சொன்ன வாக்குகளைக் காப்பாற்றுவது. என்றென்றும் ஒரே கொள்கையில் உறுதியாக நிற்பது. அப்படி காதலுக்கு மரியாதை கொடுத்த காரணத்தாலே, அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
காதல் என்றாலே தியாகம் என்று வாழ்ந்த டாட்டா ஏன் திரும்ணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை அறிந்துகொள்வோம். அமெரிக்காவில் இருந்த போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்கப் பெண்ணை காதலித்தார். அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்று வாக்கும் கொடுத்திருந்தார்.
1962 கட்டத்தில் பாட்டியின் உடல்நிலை காரணமாக இந்தியா திரும்பவேண்டிவந்தது. அந்த நேரத்தில் அந்த பெண்ணையும் தன்னுடன் இந்தியாவுக்கு அழைத்தார். போர்ச் சூழலைக் காரணம் காட்டி அவளுடைய பெற்றோர் அனுமதி மறித்தனர். எனவே இந்தியா திரும்பிய டாட்டா பாட்டியின் மரணம் வரையிலும் அருகில் இருக்க நேர்ந்தது.
அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது. ஆனாலும், அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த வாக்கை டாட்டா ஒரு போதும் மாற்றிக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணிடம் கொடுத்த வாக்கு காரணமாக வேறு யாரையும் அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. அந்த பெண்ணைப் போலவே தொழிலை நேசிக்கத் தொடங்கினார். நாட்டை நேசிக்கத் தொடங்கினார். அதன்பிறகு இவற்றுக்கே நேரம் போதவில்லை என்பதை உண்ர்ந்து, திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் வாழ்ந்து முடித்துவிட்டார்.
உறுதியான மனம் கொண்டவர்களுக்கு காதல் தோல்வியும் வேறு ஒரு வகையில் வெற்றியாக மாறிவிடுகிறது என்பதற்கு உதாரணமே ரத்தன் டாட்டா.
குட் படை டாட்டா.