உதயநிதிக்கு சவால்
சனாதன விவகாரத்தில் தென்னகத்தைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்களான பவன் கல்யாணுக்கும் உதயநிதிக்கும் இடையில் கடும் மோதல் நடந்துவருகிறது. தன்னை எச்சரித்த பவன் கல்யாணை பார்த்துக்கலாம் என்று டீல் செய்திருக்கிறார். உதயநிதியை எதிர்ப்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பவன் கல்யாண் தூது விட்டிருப்பது அரசியல் பரபரப்பாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் பவன் கல்யாண். அவர், ‘’புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது எனக்குள்ள அன்பும் அபிமானமும் சென்னையில் நான் வளர்ந்ததில் ஓர் அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. வரும் அக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுகவின் 52வது ஆண்டு விழா. புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
“மயிலாப்பூரில் படித்தபோது எனது தமிழ்மொழி ஆசிரியர் மூலம் புரட்சித் தலைவரைப் பற்றி எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவர் திருக்குறளில் இருந்து ஒரு குறளைப் படித்து, புரட்சித் தலைவரின் குணங்கள் இந்தத் திருக்குறளில் பிரதிபலிக்கின்றன என்றார். “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.” நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசன், அரசர்களுக்கெல்லாம் விளக்குப் போன்றவன்..’ என்று பதிவு போட்டிருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் புதிய கட்சி கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில் பவன் கல்யாண் கட்சியாவது வரட்டும் என்று சந்தோஷப்படுகிறாராம். அதோடு, உதயநிதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு பவன் கல்யாணே சரியான சாய்ஸ் என்று நினைக்கிறாராம்.
பவன் கல்யாண் யாரென்றே தமிழக மக்களுக்குத் தெரியாது. இவருக்கெல்லாம் ஆதரவு கொடுத்தால் கட்சியை வளர்த்த மாதிரிதான் என்று அ.தி.மு.கவினரே வருத்தப்படுகிறார்கள்.